பின்புலமில்லா அரசியல் பிரவேசம் சாத்தியமா?
- அரசியல் பின்புலமில்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், இளைஞர்கள் அரசியலில் இணைய ஆவலுடன் காத்திருப்பதாக அறிய முடிகிறது என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை உற்று நோக்கினால் இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன. வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்று வாக்காளர்கள் கருதிய நிலை மாறி, இன்று அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டுகோள் விடுக்கவும் பணம் கொடுக்கவும் வேண்டியுள்ளது.
- வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை அரசியல் கட்சி வேட்பாளர்களின் செயல்பாடுகளையும், தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்படும் பொருள்கள், ரொக்கம் ஆகியவற்றின் மதிப்பையும் அறியும்போது வியப்பும், இன்றைய தேர்தலில் அரசியல் பின்புலமில்லாதவர்கள் பிரவேசிப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகின்றன.
- இப்படிப்பட்ட நிலையில், அரசியல் பின்புலமில்லாத இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்குமா? புதிய சிந்தனையுடைய, சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால், அரசியல் பின்புலமில்லாத காரணத்தால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. இதனால், இன்றைய இளைஞர்கள் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
- இன்றைய தேர்தல் கோடிகளை விழுங்கும் தேர்தலாகிவிட்டது. மக்கள் செல்வாக்கைக் காட்டிலும், பண பலம் உள்ளவர்களே தேர்தல் களமிறங்க முடியும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வின்போது அவரின் செல்வாக்கு, கல்வித் தகுதி, குண நலன்கள் ஆகியவற்றைக் காட்டிலும், அரசியல் பின்புலம், சொத்து மதிப்பு ஆகியவற்றையே தகுதிகளாகக் கருதுகின்றன.
- வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலின்போது தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்ற கேள்வியையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
- பிற கட்சிகளுடன் கூட்டணி எதுவுமின்றி தனித்துப் போட்டியிடும் புதிய கட்சிகள் வேண்டுமாயின் புதியவர்களுக்கும் மகளிருக்கும் வாய்ப்பளிக்கக் கூடும். ஆனால், கூட்டணி அமைத்து குறைவான தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் அரசியல் பின்புலம், பண பலம் உள்ளவர்களுக்கே வாய்ப்பளிக்கின்றன.
- சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், வேட்பாளர்களை ஊகத்தின் அடிப்படையிலேயே கணிக்க முடியும். எவ்விதமான அரசியல் பின்புலமும் இல்லாதவர்களுக்கு வாய்ப்பளிப்பதால், வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பது அரசியல் கட்சிகளின் எண்ணமாக இருக்கக் கூடும்.
- வாக்குகளைப் பெற தேர்தல் பிரசாரம், திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் போன்றவையே முக்கியம் என்பதைக் காட்டிலும் பணமே பிரதானமாகிவிட்டது.
- வேட்பாளர்கள் சொத்து குறித்து வெளியாகும் செய்திகளைப் பார்க்கும்போது சாமானியர்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பு.
- 2009 மக்களவைத் தேர்தலில் வென்றவர்களில் 315 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர்; இது 2014 தேர்தலில் 443-ஆகவும், 2019 தேர்தலில் 475-ஆகவும் அதிகரித்தது. 2024 மக்களவைத் தேர்தலில் வென்றவர்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்.
- அரச குடும்ப வாரிசுகள் அரசியலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இது புதிதானதல்ல என்றாலும், அவர்களில் பெரும்பாலானவர்களின் முதல் தேர்வாக தேசிய கட்சிகளே உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மைசூரு இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார். இதற்கு முன் அந்தத் தொகுதியில் 4 முறை உடையாரின் தாய்வழிப் பேரன் தேர்வு செய்யப்பட்டார்.
- கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் திரிபுராவின் மாணிக்ய அரச வம்சத்தைச் சேர்ந்த தேவ்வர்மா போட்டியிட்டார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜமாதா அம்ருதா ராய் போட்டியிட்டார். இவர் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடியா மன்னர் கிருஷ்ண சந்திர ராய் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
- மத்திய பிரதேச மாநிலம், குணா தொகுதியில் அந்தப் பகுதி சமஸ்தான அரச குடும்பத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிட்டார். ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மகன் துஷ்யந்த் சிங், ஜலவர் பரான் தொகுதியில் போட்டியிட்டார். இவர் ஏற்கெனவே 4 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.
- தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக சார்பில் போட்டியிட்ட 22 பேரில் 21 பேரும், அதிமுக சார்பில் 34 பேரில் 33 பேரும், பாஜக சார்பில் போட்டியிட்ட 23 பேரில் 22 பேரும், நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 39 பேரில் 15 பேரும் கோடீஸ்வரர்கள்.
- பண பலம், அரசியல் பின்புலம் உள்ள குறிப்பிட்டவர்களுக்கே தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது. இத்தகைய நிலையில், எளிய பின்னணி கொண்டவர்கள் எப்படி அரசியலில் இணையவோ அல்லது ஆர்வம் காட்டவோ செய்வார்கள்? வாக்களிக்கும் வயதை எட்டியவர்கள் வாக்காளராகப் பதிவு செய்வது, வாக்களிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
- இன்று உள்ளாட்சி அமைப்பு தேர்தலில்கூட அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. அதனால் இளையோரின் அரசியல் பங்கேற்பு அருகி வருகிறது. இளைஞர்கள் பார்வையாளர்கள் என்ற நிலையிலிருந்து பங்கேற்பாளர்கள் என்ற நிலைக்கு வருவதற்கான ஆரம்பம், அரசியல் கட்சிகளிடமிருந்து தொடங்க வேண்டும்.
நன்றி: தினமணி (12 – 09 – 2024)