TNPSC Thervupettagam

பி.பி.சாவந்த்: ஜனநாயகத்துக்கான நீதியின் குரல்

February 19 , 2021 1433 days 648 0
  • நேரடிக் கள அரசியலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட வழக்கறிஞர்களும் கூட நீதித் துறைக்கு மிகச் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். அவரை அடுத்து உடனடியாக நினைவுக்கு வரும் மற்றொருவர் பி.பி.சாவந்த் (1930-2021).
  • உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் ஜனநாயகத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டும் முக்கியத் தீர்ப்புகளை வழங்கிய அவர், சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோதே விவசாயிகள் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர். அதுவே, அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை அக்கறையோடு அணுகுவதற்கும் அவற்றுக்குச் சட்டரீதியான தீர்வுகளை அளிக்கவும் அவரை இட்டுச் சென்றது.
  • மும்பை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலுமாக 1957 முதல் வழக்கறிஞராகப் பணியாற்றிய சாவந்த், பெரும்பாலும் விவசாயிகள் பிரச்சினைகளுக்காகவும் தொழிலாளர் நலப் பிரச்சினைகளுக்காகவுமே வாதாடினார்.
  • விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியுடன் இணைந்து அவர் இயங்கினார். ஜோதிராவ் பூலே, சாகு மகராஜ், அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றுபவராகவே அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். 1973-ல் மும்பை உயர் நீதிமன்றத்துக்கும் 1989-ல் உச்ச நீதிமன்றத்துக்கும் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இரண்டு முக்கிய வழக்குகள்

  • உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழிகாட்டும் தீர்ப்புகளான எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, மண்டல் ஆணையம் வழக்கு ஆகியவற்றை அளித்த அரசமைப்புச்சட்ட அமர்வுகளில் சாவந்தும் அங்கம் வகித்திருக்கிறார். குறிப்பாக, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் அவர் அளித்த தீர்ப்புரையில், அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எதிலும் மதத்தைக் கலக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
  • அதே தீர்ப்பில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123(3)-ஐ மேற்கோள் காட்டியிருந்த அவர், மதத்தின் பெயரால் வாக்குகள் சேகரிப்பதையும் சட்ட விரோதமானது என்பதை விளக்கியிருந்தார்.
  • மதச்சார்பின்மை இந்திய அரசமைப்பின் அடிப்படை அம்சங்களில் ஒன்று என்பதை உறுதிசெய்த தீர்ப்பு அது. மேலும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதும் நீதிமன்றச் சீராய்வுக்கு உட்பட்டதே என்று மாநில அரசுகள் மீது ஒன்றிய அரசின் வரம்பு மீறிய அதிகாரங்களுக்குக் கடிவாளம் போட்டது அந்தத் தீர்ப்பு.
  • மண்டல் ஆணையம் வழக்கு என்று அறியப்படும் இந்திரா சஹானி வழக்கு விசாரிக்கப்பட்ட காலத்தில் தேசமே கொதிநிலையில் இருந்தது. டெல்லி வீதிகளில் மேல்தட்டு மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தற்கொலை செய்துகொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
  • இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தர்க்கபூர்வமான விவாதங்களை நானி பல்கிவாலா போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தனர். இடஒதுக்கீட்டின் அவசியத்தை ஏற்றே பி.பி.சாவந்த் தீர்ப்பளித்தார்.
  • சமூக, அரசியல் விடுதலை என்பது பொருளாதார விடுதலையின்றிச் சாத்தியமில்லை என்பதில் அவர் காட்டிய உறுதி தீர்ப்பிலும் வெளிப்பட்டது. முற்பட்ட பிரிவினருக்கும் இடஒதுக்கீடு அவசியமாக இருப்பதை இன்று காலம் உணர்த்தியிருக்கிறது.

இன்னொரு கிருஷ்ணய்யர்

  • உச்ச நீதிமன்ற நீதிபதியாக 1995 வரையில் பதவி வகித்த சாவந்த், தனது ஓய்வுக் காலத்தை சமூக - அரசியல் பணிகளுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டார். வி.ஆர்.கிருஷ்ணய்யரைப் போலவே அவரும் பொது நிகழ்வுகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டார்.
  • ஒருவகையில், அவருடைய வழக்கறிஞர் காலத்து அரசியல் செயல்பாடுகளின் தொடர்ச்சியாகவும் அது அமைந்தது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர்கள் சங்க மாநாடுகளில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
  • சமூக நீதியை வலியுறுத்தும் அவரது பங்கேற்புகள் அனைத்தும் அடிப்படையில் சாதி மறுப்பை வலியுறுத்துவனவாகவே அமைந்திருந்தன.
  • மஹாராஷ்டிர அமைச்சர்கள் நான்கு பேர் மீது அண்ணா ஹசாரே முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக சாவந்த் தலைமையில் 2003-ல் ஆணையம் அமைக்கப் பட்டது.
  • அவர் அளித்த அறிக்கையின்படி, மூன்று அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையிருப்பது தெரியவந்தது. அதையடுத்து, இரண்டு அமைச்சர்கள் பதவிவிலகினர்.
  • அதிகாரபூர்வமான விசாரணைக் குழுக்களில் மட்டுமல்ல; மனித உரிமை அமைப்புகளின் உண்மை கண்டறியும் குழுக்களிலும் அவர் பங்கேற்றுள்ளார். குஜராத்தில் 2002-ல் நடந்த மதக்கலவரங்களைப் பற்றி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையில் அமைந்த மக்கள் தீர்ப்பாயம் என்ற உண்மை கண்டறியும் குழுவில் சாவந்த் பங்கேற்றிருந்தார்.
  • அக்குழு அளித்த அறிக்கையில், சாவந்த் எழுதிய அத்தியாயத்தில் மதச்சார்பின்மையும் சமத்துவமும் பன்மைத்துவமும் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பேசப்பட்டுவருவதையும் அவை மேற்கத்திய கோட்பாடுகள் அல்ல என்பதையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் விளக்கியிருந்தார்.

ஊடகங்களின் ஜனநாயகக் கடமை

  • பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக சாவந்த் பொறுப்பு வகித்தபோது, அவர் அளித்த விரிவான அறிக்கைகள் ஊடக நிறுவனங்களின் ஜனநாயகக் கடமையை வலியுறுத்துவதாக அமைந்தது.
  • அதன் விளைவுகளில் ஒன்றுதான், தேர்தல் நாளன்று கடைசி வாக்காளர் தனது வாக்கைச் செலுத்துவதற்கு முன்னால் தேர்தல் குறித்து எந்தவொரு கருத்துக்கணிப்பும் வெளியிடப்படக் கூடாது என்ற கட்டுப்பாடு. தேர்தல் காலங்களில் ஊடக நிறுவனங்கள் வாக்காளர்கள் மீது செலுத்தும் எல்லை மீறிய செல்வாக்கு என்பது அவற்றின் பின்னாலிருந்து அரசியல் கட்சிகள் செலுத்துவதே என்ற அவரது சுட்டிக்காட்டல் இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு முக்கியமான வழிகாட்டலாக அமைந்துள்ளது.
  • அவர் எழுதி 2013-ல் வெளிவந்த ‘தி கிராமர் ஆஃப் டெமாக்ரஸி’ புத்தகம், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின் தேவையை உணர்த்துவது. மக்கள் பிரதிநிதிகளை மேலும் பொறுப்புணர்வுக்கு உள்ளாக்கவும் தேர்தல் நடைமுறைகள் இன்னும் சிறப்பாகச் செயல்படவும் தொகுதிகளின் பரப்பளவைக் குறைத்து, சிறிய அளவிலான தொகுதிகளை அவர் பரிந்துரைத்தார்.
  • மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஜி.கோல்ஸ் பாட்டீலுடன் இணைந்து 2017 இறுதி நாளன்று புணே நகரில் எல்கார் பரிஷத் என்ற மாநாட்டை நடத்தினார் சாவந்த். அதன் பின்பு நடந்த நிகழ்வுகள் அனைத்தும், நீதிபதிகள் ஓய்வுக்குப் பிறகு ஏன் பொதுவாழ்வில் பங்கேற்கத் தயங்குகிறார்கள் என்பதற்கான காரணங்கள்.
  • அந்த மாநாடு, வன்முறையைத் தூண்டிவிடும் உள்நோக்கம் கொண்டது என்று காவல் துறையின் கடுமையான விசாரணைகளுக்கும் கைது நடவடிக்கைகளுக்கும் ஆளானது. ஆய்வாளர்களுக்கும் களச் செயற்பாட்டாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நகர்ப்புற நக்சலைட்டுகள் என்று நாமகரணம் சூட்டப்பட்டது.
  • ஆனால், அதற்கெல்லாம் அசைந்துகொடுக்கிறவராக சாவந்த் இல்லை. பொய் வழக்குகளைக் கடுமையாகச் சாடியபடியே தனது பணிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். கடைசியாகக் கலந்துகொண்ட ஒரு இணையவழி மாநாட்டில், காணொளி வாயிலாக சாவந்த் அனுப்பிய செய்தி: ‘இந்த நாட்டில் ஏறக்குறைய 85% பேர் வறுமையில்தான் வாடுகிறோம். அடிப்படை உரிமைகளுக்காகத் தவிக்கிறோம். இந்த நாட்டின் நிர்வாகத்தில் நம்மால் ஏன் பங்கேற்க முடியவில்லை? உண்மையிலேயே இது மக்களுக்கான ஜனநாயகம்தானா?’
  • ஆம், அதிகாரமற்ற அடித்தட்டு மக்களுடனேயே தன்னை அவர் அடையாளம் கண்டார். குரலற்றவர்களுக்கான குரலாகவே அவர் வாழ்வு அமைந்திருந்தது.
  • உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழிகாட்டும் தீர்ப்புகளான எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, மண்டல் ஆணையம் வழக்கு ஆகியவற்றை அளித்த அரசமைப்புச்சட்ட அமர்வுகளில் சாவந்தும் அங்கம் வகித்திருக்கிறார். குறிப்பாக, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் அவர் அளித்த தீர்ப்புரையில், அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எதிலும் மதத்தைக் கலக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

நன்றி: இந்து தமிழ் திசை (19-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்