TNPSC Thervupettagam

பிரசவ அறையின் முதல் கேள்வி

May 5 , 2024 251 days 198 0
  • அரசு மருத்துவமனையில் சகோதரியின் பிரசவக் காலத்தில் கூடவே இருந்து பராமரித்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு. பிரசவ அறைக்கு வெளியே தகவலைக் கேட்கக் கூடி நிற்கும் மக்களின் முகங்களும் அவற்றில் இருக்கும் எதிர்பார்ப்புகளும் வர்ணிக்க முடியாதவை. பிரசவ அறைக்குள்ளிருந்து வரும் தகவல்களில் முக்கியத் தகவல் பிறந்திருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான்.
  • ‘பொம்புள பிள்ள பிறந்திருக்கும்மா…’ என்கிற தகவலைக் கேட்டுச் சுவரில் சாய்ந்து அழுதாள் அந்தக் குழந்தையைப் பெற்றவளின் அம்மா. பெண் பிள்ளை பிறந்திருக்கிறாள் என்கிற தகவலைக் கேட்டு நொறுங்கிப் போனவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆறுதலற்றுத் தவித்துப் போனவர்களாக, வாய்விட்டு அழுதிருக்கிறார்கள். பெண் குழந்தைப் பிறப்புக்குப் பின் இருக்கும் போராட்டங்களை ஒப்பாரியாகப் பாடிய அம்மச்சிகளின் கண்ணீரைக் கண்டிருக்கிறேன். ஏன் இன்னமும் இந்நிலை மாறவில்லை?

வாரிசு உரிமை

  • படித்தவர்கள் அதிகம் வாழும் குமரி மாவட்டத்திலும் தலைப்பிள்ளை ஆணாகப் பிறக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. வாரிசு என்கிற உரிமையை இந்தக் காலத்திலும் ஆணுக்கு மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பதைப் பிரசவ அறைகளின் செய்தி அறிவிப்புகளில் வெளிப்படும் மகிழ்ச்சியிலும் முகச்சுளிப்பிலும் அறியலாம். பிறந்திருக்கும் குழந்தை ஆண் என்றால் மொத்தக் குடும்பமும் வருவோர் போவோருக்கும் இனிப்பு கொடுப்பதும், குழந்தையின் தகப்பன் குடும்பத்தின் எல்லா உறவுகளுக்கும், “எனக்கு மொவன் பிறந்திருக்கிறான்…” என்று அலைபேசியில் சாதனை முழக்கம் போடுவதையும் பார்க்கலாம்.
  • தலைப்பிள்ளை ஆணாக இருந்து, அடுத்த குழந்தை ஆணாகப் பிறந்தாலும் மனம் நொறுங்காமல் ஏற்றுக்கொள்வார்கள். இதுவே தலைப்பிள்ளை பெண்ணாகப் பிறந்து அடுத்த பிள்ளையும் பெண்ணாகப் பிறந்துவிடுமோ என்கிற அச்சத்தில் தவியாகத் தவிக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். என்னதான் பெண் குழந்தைகளைப் போற்றிக் கொண்டாடித் துதித்தாலும் ஆண் குழந்தைகளே வாரிசு என்று மனங்களில் பதிந்துபோன அடியாழ வேரை முழுமையாக அகற்றவில்லை இச்சமூகம்.

ஆணே காரணம்

  • சாலையோர நடைவண்டியில் பழங்கள் விற்பனை செய்து, தன் பிள்ளைகளை வளர்த்துவரும் இளம்பெண்ணின் கணவன் அவரை விட்டுப் பிரிந்துபோனதற்கான காரணத்தை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு பெண் பிள்ளைகள் அடுத்தடுத்துப் பிறந்த காரணத்தால் தன் மனைவியையும் பிள்ளைகளையும் தள்ளிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். பெண் பிள்ளைகள் பிறப்பதால் தன் ஆண்மைக்கு இழுக்கு என்கிற மனோபாவம் இன்னும் சில ஆண்களிடமும், இந்த ஆண்களைப் பெற்ற பெண்களிடமும் இருக்கவே செய்கிறது. தலைப்பிள்ளை ஆணாகப் பிறந்தால் மட்டுமே தன் ஆண்மைக்குக் கம்பீரம் எனப் பலர் நினைக்கிறார்கள்.
  • அறிவியலின் அடிப்படையில் பெண்ணின் கருவறைக்கு ஆண், பெண் என்கிற பாலினத் தேர்வுக்கு இடமில்லை. ஓர் உயிர் ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதை ஆணின் மரபணுக்களே தீர்மானிக்கின்றன. ஆண்எதைக் கொடுக்கிறானோ அதைப் பெண்வெளிப்படுத்துகிறாள். இதைப் புரிந்து கொள்ளாமல் பெண் குழந்தை என்றால் அது மனைவியிடமிருந்து மட்டுமே வந்தது என்பதுபோல் அவளையும் குழந்தைகளையும் தள்ளிவைக்கும் மக்கள் சமூகத்தில் நம்மோடு வாழ்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கான வாரிசு உரிமைச் சட்டங்கள் எல்லாம் இருக்கிறபோதும் பெண் குழந்தைகளின் பிறப்பைச் சந்தோஷமாக வரவேற்க ஏனோ பலரால் முடியவில்லை.
  • ஆண் குழந்தை வேண்டுமென்று நேர்ச்சைகள் போட்டு, மொட்டை அடித்து, நோன்பிருந்து, நடைபாதையாகப் பயணித்து வேண்டுதல் செய்வதுபோல் பெண் குழந்தை வேண்டுமென்று வேண்டுதல் வைப்பது மிகவும் குறைவு. ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அவளைக் கண்ணீரால் வரவேற்கும் சாபம் பல குடும்பங்களில் இப்போதும் இருக்கிறது. குழந்தை பிறந்திருக்கிறது என்று மகிழும் தருணங்களைவிட அது ஆணா, பெண்ணா என்கிற பகுப்பாய்வின் அடிப்படையிலே கொண்டாட்டங்கள் நிகழ்த்துவது இயற்கைக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் எதிரானது.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்