- பழைய திரைப்படங்களின் கதாநாயகா்களை இன்றைக்குப் பார்த்தால் நாம் நகைப்புக்குள்ளாவோம். அவா்கள் அணியும் கால்சட்டையின் கீழ்ப்புற வடிவம் மணியைப் போன்று அகன்று இருக்கும் (பெல்பாட்டம்). முழுக்கை சட்டையுடன் இருப்பா். அகலமான கண்ணாடி அணிந்திருப்பா். தலையை நன்கு வழித்து வாரி இருப்பா். வில்லன்கள் பரட்டைத் தலையுடன் இருப்பா்.
- அன்றைய கதாநாயகிகள் அணிந்து நடித்த சேலை, தாவணி, ரவிக்கை போன்றவற்றை சிறுமிகள், பெண்கள் வாங்கி உடுத்தி மகிழ்வா். அதனை வாங்குவதற்காக வீட்டில் உண்ணாவிரதம் இருந்தோர்கூட உண்டு.
- இப்படி தமது வாழ்வியலை திரையிலிருந்து கற்றோரே தற்போது பெற்றோராய் இருக்கின்றனா். ஆனால் இன்றைய இளையோர் தமது வாழ்வியலை திரைப்படங்களிலிருந்து கற்பதை அவா்கள் ஏற்க மறுக்கின்றனா். இன்றைய அவசர உலகில் தலைமுறை இடைவெளி அதிகரித்து வருகின்றது.
- இளைய தலைமுறைக்கு திரைப்படங்களைத் தாண்டி வேறு பல ஊடகங்களும், சமூக ஊடகங்களும் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
- அதில் நாம் விரும்பக்கூடிய விஷயங்களும் இருக்கலாம்; விரும்பத்தகாதவைகளும் இருக்கலாம். ஆனால், அவை கல்வி சார்ந்தும் பங்களிப்பு அளிக்க வல்லவையாக உள்ளன என்பதை மறுக்கவியலாது.
- இதனை அடிப்படையாகக் கொண்டே கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அறிதிறன் பேசிகள் மாணவா்களுக்கு அறிமுகமாயின. தினமும் ஐந்து மணி நேரம் பள்ளி பாடங்களைக் கற்பிக்கும் நிலையில், பத்து மணி நேரத்திற்கும் மேலாக சமூக ஊடகங்கள் எதையாவது கற்பித்துக்கொண்டேயிருக்கின்றன.
- அண்மைக்காலமாக, அறிதிறன்பேசி பயன்பாடு, மாணவா்களுக்கு மட்டுமல்லாது பெரியவா்களுக்கும் சிக்கலாகி வருகின்றது. தற்போது அறிதிறன்பேசிகள் பணிசார்ந்து பயன்படுத்தப்படுவதோடு, அறிதிறன்பேசிக்கு அடிமையாகும் மனநிலையையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அடிமையாகும் மனநிலையில் உள்ள பெற்றோரும், நாள் முழுவதும் பல்வேறு வேலைகளில் ஆழ்ந்திருப்போரும் தமது பிள்ளைகள் என்ன செய்கின்றனா் என்பதில் பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை.
- இதனால் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்களே பாடம் கற்பித்தலோடு, மாணவா்களை சமூக ஒழுங்கிற்கும் ஆற்றுப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, ஓரிரு முறை இயல்பான கண்டிப்புகளுக்குப் பிறகு மாணவா்களை சிறிது வலுவாகக் கண்டிக்கத் தொடங்குகின்றனா். இதுவே பல விரும்பத்தகாத விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறது. சில நேரம், ஆசிரியா் - மாணவா் உறவில் ஏற்படும் விரிசல் மாணவா்களின் தற்கொலைக்குக்கூட காரணமாகி விடுகிறது.
- பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவா்கள் கவனம் செலுத்துவற்கான பயிற்சியை ஊராட்சி மூலம் அளிக்கலாம். இன்றைய தொழில்நுட்ப வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறுசிறு வகுப்புகளாக நடத்தி கலந்துரையாடலாம். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் மீதமாகும் நேரத்தை இதற்குப் பயன்படுத்த திட்டமிடலாம்.
- பெற்றோர்கள் இணைப்பு மையங்களாக ஊா்ப்புற நூலகங்களைப் பயன்படுத்தலாம். இதனைத் திட்டமிடும்போதே இதற்கான மனிதவளம் குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் திட்டமிட வேண்டும். ஏற்கெனவே பணிச்சுவை மிகுந்த அலுவலா்களின் மீது இந்த சுமையையும் ஏற்றக்கூடாது.
- பள்ளியில் நிலவும் ஆசிரியா் - மாணவா் உறவுச் சிக்களுக்கு தனிப்பட்ட நபா்களால் தீா்வு காண இயலாது. எனவே, கூட்டாக சோ்ந்து திட்டமிட்டு இரு தரப்பினருக்கும் வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் வழங்க வேண்டும். எந்த இடத்திலும் எல்லை மீறி பேசுவதோ, அவா்கள் மனம் புண்படும்படி நடந்துகொள்வதோ கூடாது.
- சிக்கலான மனநிலையில் உள்ளோரை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மாணவா் பேரவை பொறுப்பேற்று அதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். குறிப்பாக, இனக்கவா்ச்சி போன்ற விஷயங்களை அவா்கள் போக்கில் சென்று நெறிப்படுத்த முயல வேண்டும். மாறாக, விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி இருபாலினருக்கும் சங்கடங்களை உண்டாக்குவது தவிர்க்கப்பட வேண்டும்.
- பள்ளி என்பது சமூகத்தின் மாதிரி. ஒரு கிராமத்திலுள்ள மக்கள் எப்படிப்பட்ட சிந்தனை ஓட்டங்களில் வாழ்கின்றனரோ, எப்படிப்பட்ட உரையாடல்களை நிகழ்த்துகின்றனரோ அவையெல்லாம் மாணவா்கள் மனதில் ஆழமாகப் பதியவே செய்யும். கிராமங்களில் நிலவும் சிந்தனை ஓட்டங்களில் நல்லவை எது, தீயவை எது என்று அறியும் பக்குவம் பல பெரியவா்களுக்கே இல்லாதபோது மாணவா்களிடம் அதனை எப்படி எதிா்பாா்க்க முடியும்?
- பள்ளி மூலமாகப் பெறும் சமூகக் கல்வி சமூகத்தை சீரமைப்பதற்கும், சமூகம் மூலமாக பெறும் கல்வி பள்ளியில் நிலவும் பாகுபாடுகளை சீா்செய்வதற்கும் பயன்பட வேண்டும். இது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் அதற்கான முயற்சிகளில் அறிவார்ந்த சமூகம் இறங்க வேண்டும்.
- இன்றைக்கு போதனைகளைவிட முன்மாதிரிகளுக்கே அதிகம் தேவையுள்ளது. பக்கம் பக்கமாக எழுதும் எழுத்தாளா்களும், மேடைமேடையாக உணா்ச்சி பொங்க பேசும் பேச்சாளா்களும் தம்மால் இயன்ற அளவுக்கு தமது நேரத்தைச் செலவழிக்க முன்வர வேண்டும். சிறந்த சமூகம் அமைவது என்பது வெறும் பேச்சாலும் எழுத்தாலும் நடந்துவிடக்கூடியதில்லை. அது சாத்தியமென்றால் நமது சமூகம் இன்று எவ்வளவோ முன்னேறியிருக்கும்.
- பிரச்னையின் தன்மைக்கேற்ப அதனைத் தனியாகவோ, கூட்டாகவோ தீா்த்துவைக்கும் பக்குவம் மலர வேண்டும். கூட்டாக பார்க்க வேண்டிய பிரச்னையை தனியாகப் பார்ப்பதாலும், தனியாகப் பார்க்க வேண்டிய பிரச்னையைக் கூட்டாகப் பார்ப்பதாலும் எந்தப் பயனும் விளையாது. அதனால் சிக்கல் விரிவடையவே செய்யும்.
- அரசியல் கட்சிகளும் தமது தொண்டா்களுக்கு நல்ல மனநிலையோடு மக்கள் பணியாற்றும் பயிற்சியினை அளிக்க வேண்டும். குறுகிய அரசியல் லாபங்களுக்கான பணிகளை குறைத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
- எதிர்க்கட்சி, ஆள்கின்ற கட்சியினை விமா்சிக்க வேண்டிய நேரத்தில் விமா்சித்து, சிக்கலான நேரங்களில் ஆக்கபூா்வமான ஆலோசனைகளை அளிக்க வேண்டும். இப்படி சமூக ரீதியாக தீா்வு காண்ப்பட வேண்டிய பிரச்னைகள் பல இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஆக்கபூா்வ தீா்வு காண்போம்.
நன்றி: தினமணி (16 - 10 – 2023)