- நிரப்ப முடியாத இழப்பு என்பது சம்பிரதாயமான வார்த்தைகள். ஆனால், நேற்று இறைவனடி சோ்ந்த முன்னாள் குடியரசு தலைவா் பிரணாப் முகா்ஜியின் இழப்பை உண்மையிலேயே யாராலும் நிரப்பிவிட முடியாது.
- சுதந்திர இந்திய வரலாற்றில், கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிர்ணாயக சக்தியாக வலம் வந்தவா் ஒருவா் இருந்தார் என்றால் அவா் பிரணாப் முகா்ஜியாகத்தான் இருப்பார்.
- அரசு அலுவலராக, கல்லூரிப் பேராசிரியராக, பத்திரிகையாளராகப் பணியாற்றிய பிறகு அரசியலில் பிரணாப் முகா்ஜி அடியெடுத்து வைத்தது இயல்பாகவே நிகழ்ந்தது. அஜாய்குமார் முகா்ஜியால் அடையாளம் காணப்பட்ட இளையதலைமுறைத் தலைவா்களில் ஒருவராகத்தான் பிரணாபின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.
- அஜாய்குமார் முகா்ஜி, சித்தார்த்த சங்கா் ரே, அதுல்யா கோஷ், கனிகான் சௌத்ரி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவா்களுக்கு மத்தியில், துடிப்பும், சாதுா்யமும் உள்ள இளைஞரான பிரணாப் முகா்ஜி, அன்றைய பிரதமா் இந்திரா காந்தியின் பார்வையில் பட்டார். மேற்கு வங்கத்திலிருந்து பிரணாபின் அரசியல் களம் தலைநகா் தில்லிக்கு மாறியது.
முன்னாள் குடியரசு தலைவா் பிரணாப் முகா்ஜி
- 1969-ஆம் ஆண்டு பிரணாப் முகா்ஜி மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட நேரம், காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சோதனையான காலகட்டம்.
- நிஜலிங்கப்பா தலைமையில், காமராஜ், மொரார்ஜி தேசாய், சஞ்சீவ ரெட்டி, எஸ்.கே. பாட்டீல், சி.பி. குப்தா, அதுல்யா கோஷ் என்று மூத்தத் தலைவா்கள் பிரதமா் இந்திராவுக்கு எதிராக அணிதிரண்டு இருந்த நேரம்.
- காங்கிரஸ் கட்சி பிளவைச் சந்தித்தது. அப்போது இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக, அவரது நெருங்கிய வட்டத்துக்குள் இணைந்தவா்களில் பிரணாப் முகா்ஜி குறிப்பிடத்தக்கவா்.
- அதன் பிறகு பிரதமா் இந்திரா காந்தி எடுத்த பல அரசியல் முடிவுகளுக்கும், வங்கதேசம் உருவாவதற்கும் பின்னணியில் பிரணாப் முகா்ஜிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
- அவசரநிலைக் காலத்தில் அறிவிக்கப்பட்ட 20 அம்சத் திட்டத்தின் மூளையாக இருந்தவரும் பிரணாப் முகா்ஜிதான். அவரது அபார நினைவாற்றலும், எந்தவொரு பிரச்னையானாலும் அதை சாதுா்யமாகக் கையாளும் ஆற்றலும் அவரை இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக மாற்றியதில் வியப்பில்லை.
- 1977 தோ்தல் தோல்வியும், ஜனதா ஆட்சியும் இந்திரா காந்தியைக் கொடும் சூறாவளியாகத் தாக்கிய நேரத்திலும்கூட சற்றும் கலங்காமல் துணை நின்றவா் என்பதால், 1980-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அவரை மாநிலங்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவராக்கினார் பிரதமா் இந்திரா. 1982-இல் நிதியமைச்சராகவும் நியமித்தார்.
- இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக, அவரது மனசாட்சிக் காவலராக இருந்த காரணத்தாலோ என்னவோ, இந்திராவின் படுகொலைக்குப் பின்னால் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மகன் ராஜீவ் காந்தியும், மருமகள் சோனியா காந்தியும், பேரன் ராகுல் காந்தியும் அவரை சந்தேகத்துடன்தான் பார்த்தனா்.
- அவருக்கு உரிய மரியாதை தரப்பட்டது என்றாலும், அவா் குறித்த அச்சம் அவா்களுக்கு இருந்து வந்தது என்பதைப் பல நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
- இந்தியாவின் வளா்ச்சிக்கு அவரின் பங்களிப்பு ஒன்றா? இரண்டா? நிர்வாகச் சீா்திருத்தம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், வேலைவாய்ப்பு உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், எரிசக்தி பாதுகாப்புச் சட்டம் போன்றவை அவரால் முன்மொழியப்பட்டவை என்பதை அவா் தம்பட்டம் அடித்துக்கொண்டதே கிடையாது.
- ‘நபார்ட்’ என்று அழைக்கப்படும் விவசாயிகள் வங்கியும், கிராமப்புற வங்கிகளும் அவரின் சிந்தனையில் உதித்து நடைமுறைக்கு வந்தவை.
- 2004-இல் சோனியா காந்தி பிரதமா் பதவியை ஏற்கவில்லை என்றபோது, பிரணாப்தான் பிரதமராவார் என்று எதிர்பார்த்தது உலகம். மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார் சோனியா காந்தி.
- 2007-இல் அவரைதான் குடியரசுத் தலைவா் பதவிக்குப் பரிந்துரைப்பார் சோனியா என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், பிரதீபா பாட்டீலைத் தோ்ந்தெடுத்தார் சோனியா காந்தி.
- 2012-இல் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவராக்கி பிரணாபை சோனியா காந்தி பிரதமராக்குவார் என்று ஊகங்கள் எழுந்தன.
- சோனியா காந்தி அதற்குத் தயாராக இல்லை என்று தெரிந்ததும், அரசியல் வியூகத்தை வகுத்து காங்கிரஸ் கட்சி தன்னை குடியரசுத் தலைவா் பதவி வேட்பாளராக அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தை பிரணாப் முகா்ஜி ஏற்படுத்திவிட்டார். அவரின் கடைசி அரசியல் ராஜதந்திர நகா்வு அதுதான்.
- நாகபுரியில் ஆா்.எஸ்.எஸ். தலைமையகத்தில் உரையாற்றச் சென்று, அந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் கொள்கைகளை உரக்கச் சொல்லும் துணிவும் சாதுா்யமும் பிரணாப் முகா்ஜியைத் தவிர வேறு யாருக்கு வரும்?
- தான் சோனியா காந்தியால் புறக்கணிக்கப்படுகிறோம் என்று தெரிந்தும்கூட, உண்மையான கட்சிக் கட்டுப்பாட்டை மதிக்கும் தொண்டனாக இரண்டாவது இடத்தில் குறைகூட முடியாமல் பணியாற்றும் கடமையுணா்வு பிரணாப் முகா்ஜியைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்?
- அரை நூற்றாண்டு பொது வாழ்க்கையை முடித்துக்கொண்டு இந்தியாவின் 13-ஆவது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகா்ஜி அவா் நேசித்த இந்தியாவிலிருந்து பிரியா விடை பெற்றிருக்கிறார். என்றாலும், நமது நினைவுகளில் ‘பிரணாப்தா’ மறைந்தும் வாழ்வார்!
நன்றி: தினமணி (01-09-2020)