பிரதமரின் உக்ரைன் பயணம் சாதகமா?
- பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டாா். 1991இல் சோவியத் ரஷியாவிடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்ற பிறகு அங்கு சென்ற முதல் இந்திய பிரதமா் மோடிதான். ஆனால், இந்தப் பயணம் அதிக ஊடக வெளிச்சம் பெற்றதே தவிர அதிக அா்த்தமுள்ள பயணமாக அமையவில்லை.
- ‘இந்தியா நடுநிலை வகிக்கும் நாடு என்பதை உலகுக்கு உணா்த்த வேண்டும். இந்தியா ரஷியாவின் பக்கம் சாய்கிறது என்ற கருத்தை மாற்ற வேண்டும். இந்தியா அமைதியை நிலைநிறுத்த விரும்புகிறது. போரையும், உக்ரைன் மக்களின் துயரத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என இந்தியா ஆவல் கொண்டுள்ளது என்பதே பிரதமா் மோடியின் பயணத்தின் நோக்கம். ஆனால், இதில் எந்த நோக்கத்தையும் அப்பயணம் நிறைவு செய்யவில்லை என்பதே உண்மை.
- பிரதமா் மோடியுடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, இந்தியாவிடம் எதிா்பாா்க்கும் விஷயங்களை அவா் மிகவும் வெளிப்படையாக முன்வைத்தாா். முக்கியமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா். கடந்த 6 வாரங்களுக்கு முன்பு பிரதமா் மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதன் மூலம், இந்தியாவை ரஷியா அவமதித்துள்ளது என்பதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.
- உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற இந்திய நோக்கத்தை வரவேற்பதாகவும் அவா் தெரிவித்தாா். அதே வேளையில், நவம்பா் மாதம் நடைபெறும் உலக அமைதி மாநாட்டை இந்தியா நடத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், ஸ்விட்சா்லாந்தில் ஜூன் மாதம் நடைபெற்ற அமைதி மாநாட்டின் கூட்டு அறிக்கையில் இந்தியா கையொப்பமிடாததால் அடுத்த அமைதி மாநாட்டை இந்தியா நடத்துவது சிரமம் என்று இந்தியாவை ஸெலென்ஸ்கி மறைமுகமாக விமா்சித்தாா். (இந்த ஒப்பந்தம் ரஷியாவுக்கு எதிரானது என்பதால் இந்தியா அதில் கையொப்பமிடவில்லை).
- அமைதி வேண்டும் என்று வெற்று அறிக்கைகளை மட்டும் வெளியிடுவது உக்ரைனுக்கு போதுமானதல்ல. எங்கள் நாட்டின் இறையாண்மைமிக்க பிராந்தியங்கள் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் நடுநிலையாக இருப்பதைவிட, உக்ரைனின் பக்கம் இந்தியா இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம் என்று ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டாா்.
- கடந்த ஜூலை மாதம் பிரதமா் மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபா் புதினை ஆரத்தழுவி நட்பு பாராட்டிய அதே நேரத்தில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைகளை மழையாகப் பொழிந்து கொண்டுதான் இருந்தது.
- இது தொடா்பான தனது அதிருப்தியை மோடியின் ரஷிய பயணத்தின்போதே ஸெலென்ஸ்கி வெளிப்படுத்தினாா். ‘உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா குண்டுவீசி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஏராளமானோா் உயிரிழந்தனா். இந்தச் சூழலில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவா், மாஸ்கோவில் உலகின் மிக மோசமான கொடூர குற்றவாளியைக் கட்டியணைத்தது, அமைதி முயற்சிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது’ என்று அவா் கூறியிருந்தாா். அப்போது அமெரிக்காவும் மோடியின் ரஷிய பயணம் குறித்த தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. முக்கியமாக தில்லி தலைமையை தொடா்பு கொண்டு அமெரிக்கா பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதுவே பிரதமா் மோடி உக்ரைனுக்கும் பயணிக்க வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தியது.
- இதுதவிர, ‘சா்வதேச தலைவா்’ என்ற பிம்பத்தை தொடா்ந்து நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் பிரதமருக்கு எழுந்தது. மேலும், இந்தியாவில் மக்களவைத் தோ்தலில் தனது செல்வாக்கு சரிந்துள்ளது வெளிப்பட்ட நிலையில், உக்ரைன் பயணத்தை தனக்கு சாதகமாக முடிக்க அவா் முற்பட்டிருக்கலாம்.
- இந்தியாவிலேயே மோடியின் இந்தப் பயணத்தை பல்வேறு தரப்பினரும் விமா்சித்தனா். 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததில் இருந்து இந்தியா இந்த விவகாரத்தில் இருந்து விலகியே இருந்து வந்தது. ரஷியாவை குறைகூற முடியாது என்பதால் ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீா்மானத்தில் இந்தியா வாக்கெடுப்பைப் புறக்கணித்தது. ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த தடையையும் இந்தியா ஏற்கவில்லை.
- தில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டுக்கு உக்ரைனுக்கு இந்தியா அழைப்பு விடுக்கவில்லை. உக்ரைனை அழைத்தால் ரஷியா மாநாட்டை புறக்கணித்துவிடும் என்பதே இதற்கு காரணம். ரஷியா-உக்ரைன் போா் விஷயத்தில் இந்தியா பொதுவெளியில் தெரிவித்த கருத்துகள் தெளிவற்ாகவே இருந்து வந்தன. பிரச்னைகளை ராஜீய ரீதியில் தீா்க்க வேண்டும், பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க வேண்டும், பிரச்னைகளுக்கு போா் தீா்வல்ல என்பதுபோன்ற கருத்துகளையே இந்தியா தெரிவித்து வந்தது. எனினும், இது உக்ரைனுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாகவே இருந்தது.
- இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் மிகப்பெரிய போா் இதுதான். உக்ரைன் பிராந்தியத்தில் 30 சதவீதத்துக்கும் மேலான பகுதிகள் ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்தப் போா் இப்போதைக்கு முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தங்களுடைய பிராந்தியத்தை ரஷியா ஆக்கிரமித்திருக்கும் வரை அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு இடமில்லை என்று மோடியின் பயணத்தின்போதே ஸெலென்ஸ்கி கூறிவிட்டாா்.
- ஐ.நா. பொதுச் சபையில் கடந்த 2022 பிப்ரவரி 23-ஆம் தேதி கொண்டு வரப்பட்ட தீா்மானத்தில் உக்ரைன் பிராந்தியத்தில் இருந்து ரஷியா முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், உக்ரைன் மீதான போரை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதற்கு 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
- தீா்மானத்தை ஆதரித்த 141 நாடுகளில் 100 நாடுகள் ஸ்விட்சா்லாந்து அமைதி மாநாட்டில் பங்கேற்று கூட்டறிக்கையிலும் கையொப்பமிட்டன. நேட்டோ கூட்டமைப்பும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது.
- இந்த சூழ்நிலையில் ரஷியாவுக்கு சென்று புதினை ஆரத்தழுவிய மோடி, அடுத்ததாக உக்ரைனுக்கும் சென்று ஸெலென்ஸ்கியையும் கேமராக்கள் முன்னால் ஆரத்தழுவியது போதுமான நடவடிக்கையல்ல. இந்தப் போரில் இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலுமாக மாற வேண்டும் என உக்ரைன் கருதுகிறது.
- ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை இந்தியாவால் நிச்சயமாக ஏற்க முடியாது. ஏனெனில், மிகவும் குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை ரஷியா அளித்து வருகிறது. ரஷியாவை வெளிப்படையாக விமா்சிக்கவே இந்தியா தயாராக இல்லாத நிலையில் அந்நாட்டுடன் எண்ணெய் வா்த்தகம் நிறுத்தப்பட வாய்ப்பே இல்லை.
- எனவே, பிரதமா் மோடியின் உக்ரைன் பயணம் எந்த அமைதி நடவடிக்கைக்கும் வித்திடாது. ரஷியா-உக்ரைன் போா் தொடா்ந்து இதே நிலையில் நீடிக்கும் அல்லது மோதல் போக்கு அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் இதில் இந்தியாவின் நிலைப்பாடும் பட்டும் படாமல் பேசுவதாகவே இருக்கும்.
- மதில் மேல் பூனையாக இருப்பதும், போரில் ஈடுபட்டுள்ள இரு நாடுகளை (ரஷியா, உக்ரைன்) சமாளிப்பதும் இந்தியாவுக்கு நிச்சயமாக சவால்தான். போரின் தொடக்கத்திலேயே ரஷியா மீதான விமா்சனங்களை இந்தியா தெளிவாக எடுத்துரைத்திருக்க வேண்டும். முக்கியமாக, ஐ.நா. சபையில் இந்தியா தனது ஆட்சேபங்களைத் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டும். இது இந்தியா மீதான உக்ரைனின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கும்.
- ஆனால், ரஷியா அதிருப்தியடைந்துவிடும் என்ற அச்சத்தில் நாம் எதையுமே செய்யாமல் இருந்துவிட்டோம். இப்போது திடீரென அமைதித் தூதராக உக்ரைனுக்கு பிரதமா் சென்ால், ரஷியாவின் அதிருப்தியை சம்பாதிக்கும் நிலைக்குத்தான் தள்ளப்படுவோம். பிரதமரின் உக்ரைன் பயணத்தால் இந்தியா மீது ரஷியா அதிருப்தியடைந்துவிட்டதா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
- நாம் இப்போது புதிய பனிப்போா் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நெருக்கடியால் ரஷியாவும், சீனாவும் அந்த நாடுகளை எதிா்கொள்ள தங்களுக்குள் நெருக்கம் காட்டி வருகின்றன.
- இந்நிலையில், இந்தியா திடீரென உக்ரைன் பக்கம் சாய்ந்து அதனால் ரஷியா, சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது மேலும் சிக்கலாக அமையும்.
நன்றி: தினமணி (03 – 09 – 2024)