TNPSC Thervupettagam

பிரதமர் நேருவின் 1951 - 1952 பிரச்சாரம்

May 1 , 2024 255 days 199 0
  • நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் முதலாவது பொதுத் தேர்தல் 1951 - 1952இல் நடந்தபோது பிரதமர் பதவியை ஐந்தாண்டுகள் வகித்துவிட்டார் ஜவஹர்லால் நேரு. அன்றைக்கு ‘இந்திய அரசு’ என்றாலே அது நேருவின் அரசாகவும், ஆளுங்கட்சியான காங்கிரஸுமே - நேருவின் கட்சியாகவும்தான் அனைவருக்கும் தெரிந்தது. அன்றைய காங்கிரஸ் கட்சியின் வசீகரப் பேச்சாளராகவும் வாக்காளர்களை ஈர்க்கக்கூடிய பெரிய தலைவராகவும் நேருதான் இருந்தார். மோடிக்கும் அவருக்கும் சில சூழல் ஒற்றுமைகள் இருக்கின்றன.
  • எனவே, நேரு தனது பிரச்சாரத்தை எப்படி நடத்தினார், என்னவெல்லாம் பேசினார், அவர் பேசிய தொனி என்ன, கடைப்பிடித்த பண்பாடு என்ன என்பதையெல்லாம் நினைவுகூர்ந்தால், இருவருக்கும் உள்ள வேறுபாடுகள் என்னவென்றும் புரியும். நேருவின் தேர்தல் பரப்புரைகள் பெரும்பாலும் இந்தி மொழியில்தான் இருந்தன. அவருடைய உரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பலவற்றின் தொகுப்பு நூலில் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளவற்றையே கட்டுரையில் நான் பயன்படுத்தியிருக்கிறேன்.

வகுப்புவாதம் முதல் எதிரி

  • நேரு தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தை லூதியானா நகரில் தொடங்கினார்; வகுப்புவாதத்துக்கு எதிரான போர் பிரகடனமாகவே அமைந்தது அவருடைய உரை. “வாக்காளர்களே, வஞ்சக எண்ணம் கொண்ட மதவாதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் நாட்டுக்கு அழிவையும் மக்களுக்கு மரணத்தையும்தான் விளைவிப்பார்கள். மனம் எனும் சாளரங்களைத் திறந்துவையுங்கள். உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் புதிய சிந்தனைகள் உங்களை வந்து சேரட்டும்” என்றார்.

புதுதில்லியில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2இல் பேசும்போது நேரு இதை வலியுறுத்தினார்:

  • “மதம் அல்லது வேறு எந்தவொரு அடையாளத்துடனும் மனதளவில் தன்னை பிணைத்துக்கொள்ளும் நாடு குறுகிய எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, முன்னேற்றம் அடையாமலேயே பின்தங்கிவிடும். மத அடிப்படையில் எந்த ஒரு மனிதனும் இன்னொருவனுக்கு எதிராக கையை ஓங்கினால், என்னுடைய உடலில் கடைசி மூச்சு இருக்கும்வரை அவனை எதிர்த்துப் போராடுவேன், அரசின் தலைவர் என்ற வகையிலும் சரி அல்லது அதற்கு அப்பாற்பட்ட மனிதன் என்ற வகையிலும் சரி.”

பாகிஸ்தான் உதாரணம்

  • மத அடிப்படையில் தனி நாடு கேட்டு வாங்கிய பாகிஸ்தான், பல்வேறு பழமைவாதச் சங்கிலிகளால் கட்டப்பட்டு அல்லல்படுவதை நேரில் பார்த்தார் நேரு. அதே மத அடிப்படையில் இந்தியாவிலும் பலர் போட்டி போட்டு அரசியல் செய்து, இந்தியர்களுக்கும் அதேபோன்ற பின்னடைவை ஏற்படுத்திவிடுவார்கள் என்று அஞ்சினார். எனவே, தன்னுடைய தேர்தல் பரப்புரைகளில் திரும்பத் திரும்ப பல்சமய ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார். “ஒரு மதம் இன்னொரு மதத்தை அடக்கியாண்டு ஆதிக்கம் செய்வது என்ற பேச்சுக்கு இப்போது இடமில்லை. அப்படி யாராவது செய்ய இப்போது முயன்றால் அது முட்டாள்தனமாகவும் நாட்டுக்கே பெரிய சேதத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்” என்று அமிர்தசரஸ் நகரில் எச்சரித்தார்.
  • மத அடிப்படையிலான கலவரங்களும் மோதல்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய தடையாக மாறிவிடும் என்று அஞ்சினார். “இந்தியா முன்னேற ஒரே வழிதான் இருக்கிறது, அனைத்து இந்தியர்களும் அவரவர் செய்யும் தொழில் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவரவர் வசிக்கும் மாநிலம், அவரவருடைய மதம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஒற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் அனுசரணையாகவும் இருந்தால்தான் அது சாத்தியம். ஒவ்வொருவருக்கும் வேறுவேறு கருத்துகள் இருக்கலாம், அணுகுமுறைகள் இருக்கலாம், ஆனால் அனைவரும் அரசியல்ரீதியாகவும் வேறு வகையிலும் தனித்தனி தீவுகளாக இல்லாமல் - இணைந்து வாழ்வதன் மூலம்தான் நாட்டை வளப்படுத்த முடியும்” என்றார்.

அற்பமானவன், மதவாதி!

  • “மத உணர்வுள்ள தனிநபர்கள் அற்பமானவர்கள், அவர்களால் பெரிதாக எதையும் சிந்தித்துச் செயல்பட முடியாது, குறுகிய எண்ணங்களைக் கொண்ட நாடுகள் வளர்ச்சி அடையாமல் சிறிய நாடாகவே இருக்கும்; மக்களிடையே வெறுப்பையும் கசப்புணர்வையும் தொடர்ந்து பரப்பிவரும் மத அமைப்புகள் நாட்டுக்குப் பெருத்த சேதங்களை ஏற்படுத்துகின்றன.
  • அவர்கள் நாட்டுக்கு மட்டும் தீமையைச் செய்யவில்லை, தங்களுக்கும் செய்துகொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள மற்றவர்களை விட்டுவிட்டு, ஜன சங்கம் மூலமோ - இந்து மகாசபை மூலமோ இந்துக்கள் மட்டும் முன்னேற்றம் அடைந்துவிட முடியாது. அப்படி முயற்சி செய்தால் பிற மதத்தவர் மட்டுமல்ல, இந்துக்களுமே எப்போதும் பின்தங்கியே கிடப்பர்.”

ஆண் - பெண் சமத்துவம்

  • ஆண் – பெண் (பாலின) சமத்துவத்தையும் நேரு அடிக்கடி வலியுறுத்தியிருக்கிறார். “பண்டைய மரபுகளின்படியும், மத வழக்க சட்டப்படியும் இந்தியப் பெண்கள் மிகவும் மோசமான நிலையில் பின்தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு உரிமைகளைத் தந்து கைதூக்கிவிடுவது மிக மிக அவசியம். ஒரு நாடு முற்போக்கானதா, முன்னேறியதா என்பதை அங்கு வாழும் பெண்களின் நிலையை வைத்துத்தான் மதிப்பிட முடியும். இந்த நாட்டில் ஆண்களுடைய செல்வாக்கு – அதிகாரம் இன்னமும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. இந்த நாட்டின் மரபுரிமைச் சட்டங்களும் பழக்க வழக்கங்களும் பெண்களை அடக்கியே வைத்திருக்கிறது, அவர்களைச் சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயல்படவும் அனுமதிப்பதில்லை. இது மிகவும் தவறானது; சட்டங்களைத் திருத்தி எழுதித்தான் இந்த நிலையை மாற்ற வேண்டும்.”
  • இந்துக்களிடையே ஆண் – பெண் ஏற்றத்தாழ்வைப் போக்க தனிச் சட்டங்களைத் திருத்த நேருவின் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. ‘அது இந்து மதத்தை அழித்துவிடும்’ என்று இந்து மதப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்க்குரல் கொடுத்தனர். ‘இந்தச் சீர்திருத்தங்கள் இந்து மதத்தை அழிப்பதற்குப் பதில், அதன் மறுமலர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும், இந்தச் சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால் இந்து மதம் வலிமையிழந்துவிடும்’ என்றார் நேரு.
  • பல்சமய ஒற்றுமையையும் பாலின சமத்துவத்தையும் வலிமையாக ஆதரித்து அவற்றின் மீது கவனத்தை குவித்த நேரு, நியாயமும் அடுத்தவர் நலனில் அக்கறையும் கொண்ட புதிய இந்திய சமூகத்தை உருவாக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். ‘நம்மிடையே இயற்கையாகவே வாழ்ந்துவரும் தேவதைகள், சமூக நலனுக்காக சேவையாற்ற முன்வர வேண்டும்’ என்று ஆபிரகாம் லிங்கன் கோரியதைப் போல - நேருவும் வேண்டுகோள் விடுத்தார்.

தனிநபர் விரோதமில்லை

  • “மாற்றுக் கருத்தாளர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது, கொள்கை அடிப்படையில் எதிர்த்து நிற்பவர்களைத்தான் குறிப்பிடுகிறேனே தவிர, எந்த தனிநபர் மீதும் எனக்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது; அவர்களுடைய கருத்துகளுக்காக அந்த ஆளுமைகளை நான் வெறுப்பதில்லை, தாக்கிப் பேசுவதில்லை” என்றார் நேரு. ஆனால், அன்றைக்கிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களோ நேருவை தனிப்பட்ட வகையிலேயே தாக்கிப் பேசினர். நேரு அதையும் தன் போக்கில் சாவதானமாகவே எடுத்துக்கொண்டார். “என்னுடைய பொறுப்புகளை உதறித்தள்ள விரும்பவில்லை. நான் எடுக்கும் எந்த முடிவையும் செய்யும் எந்தச் செயலையும் நான் எனக்காகச் செய்வதில்லை, அரசு நிர்வாகத்தின் ஆயிரக்கணக்கான பல் சக்கரங்களில் நானும் ஒருவன். ஆனால், நிர்வாகத்தில் எது நடந்தாலும் அதன் முழுப் பொறுப்பும் என்னையே சார்ந்தது. மிகப் பெரிய பொறுப்பை எனக்கு நீங்கள் அளித்திருக்கும்போது, நான் எப்படித் திரைக்குப் பின்னால் ஒதுங்கிக்கொள்ள முடியும் அல்லது எனக்கு இதில் பொறுப்பு இல்லை என்று மறுக்க முடியும்? இந்திய அரசு செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் - அவை நல்லதாக இருந்தாலும் கெடுதலாக இருந்தாலும் - நான்தான் பொறுப்பு” என்றார் நேரு.
  • ஐந்தாண்டு ஆட்சியில் மக்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்யாமல் போனதற்கு, தனக்கு முன்னதாக இருநூறு ஆண்டுகளாக ஆட்சிசெய்த பிரிட்டிஷார் மீது சுலபமாகப் பழியைப் போட்டிருக்கலாம், அல்லது பக்கத்து நாடுகளின் தீய உள்நோக்கங்களைச் சுட்டிக்காட்டி தனது அரசின் தோல்விகளுக்கு, தான் பொறுப்பல்ல என்று வாதாடியிருக்கலாம் - நேரு இரண்டையுமே செய்யவில்லை.

ஜனநாயகவாதி நேரு

  • நேரு தன்னுடைய பரப்புரையை மட்டும் கேட்டுவிட்டு வாக்களிக்குமாறு மக்களிடம் ஒருபோதும் பேசியவரல்ல. மாற்றுக் கட்சியினர் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனமாகக் கேட்குமாறு சொல்லியிருக்கிறார். தன்னுடைய பஞ்சாப் மாநில பிரசாரத்தின்போது, அடுத்ததாக சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் எதிர்க்கட்சிகள் தரப்பில் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று கேள்விப்பட்டார்.
  • உடனே வாக்காளர்களைப் பார்த்து, “அடுத்து ஜெயப்பிரகாஷ் நாராயண் உங்களிடையே பேச வருகிறார். அவர் சொல்வதை மிகுந்த கவனத்துடன் கேளுங்கள். அவருக்கும் எனக்கும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, ஆனால் அவர் நல்ல மனிதர். அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டு பரிசீலித்து, பிறகு முடிவெடுங்கள்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
  • நேருவின் தேர்தல் பிரசார உரைகளை வாசகர்கள் வாசிக்க வேண்டும், வாசித்துவிட்டு அன்றைக்கு அவர் என்ன தொனியில் பேசினார், எப்படி கண்ணியம் காத்தார், எப்படிப்பட்ட கருத்துகளையெல்லாம் முன்வைத்தார் என்று சிந்திக்க வேண்டும். அவருடைய தேர்தல் பரப்புரைகளுடன் (2019) இப்போது நடந்து முடிந்த தேர்தல் பரப்புரைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்; இப்போதைக்கு ஒன்றை மட்டும் நிச்சயமாக என்னால் கூறிவிட முடியும்.
  • இன்னும் 50 அல்லது 60 ஆண்டுகளுக்குப் பிறகு, “நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோருடைய தேர்தல் பரப்புரைகள் நல்ல தரத்திலும் செறிவாகவும் இருந்தன” என்று எந்த வரலாற்றாசிரியனும் பதிவுசெய்யவே மாட்டான். 2019 மக்களவை பொதுத் தேர்தல் பிரசாரம் முடிவுக்குப் பிறகுள்ள நிலைமை இது!

நன்றி: அருஞ்சொல் (01 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்