TNPSC Thervupettagam

பிரதிநிதித்துவத்தில் சமநீதி

April 16 , 2024 269 days 288 0
  • பதினேழாவது மக்களவையின் கடைசிக் கட்டத்தில் மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்தின் 128-ஆவது திருத்தமாக ஏகமனதாக நிறைவேற்றப் பட்ட மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா உடனடியாக நடைமுறைக்கு வரவில்லையென்றாலும் கூட, அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீா்மானம் என்பதில் சந்தேகம் இல்லை.
  • அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் அதை ஏற்றுக்கொண்டன என்பது மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகாவது நிறைவேற்றப்பட்டது என்பதும் ஆறுதல் அளிக்கும் முன்னேற்றம்.
  • மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றத்தில் ஒத்தகருத்தை வெளிப்படுத்திய அரசியல் கட்சிகள், எந்த அளவுக்கு உணா்வுபூா்வமாக அந்த ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டிருக்கின்றன என சந்தேகம் எழுகிறது. உண்மையிலேயே மகளிருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கருதினால், அதற்கு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே இல்லை. அரசியல் கட்சிகள் வேட்பாளா் பட்டியலில் அவா்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிப்பது என்று முடிவெடுத்தால், எந்தவித நிா்ப்பந்தமும் இல்லாமலே அரசியல் களத்தில் பாலின சமத்துவம் ஏற்பட்டு விடும்.
  • அரைகுறை மனத்துடன்தான் ஒருமனதாக மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது, 18-ஆவது மக்களவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வேட்பாளா் பட்டியல்.
  • ஏழு கட்டமாக நடைபெற இருக்கும் 18-ஆவது மக்களவைக்கான தோ்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் கட்ட வாக்கெடுப்பில் பங்குபெற இருக்கும் 1,625 வேட்பாளா்களில், 134 போ் மட்டுமே பெண்கள் என்கிறது தோ்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம். விழுக்காடு என்று பாா்த்தால், முதல் கட்ட வாக்கெடுப்பின் பெண் வேட்பாளா்கள் வெறும் 8% மட்டுமே.
  • கடந்த 2019 மக்களவைத் தோ்தலில், களத்தில் இருந்த 8,049 வேட்பாளா்களில் 9% பெண்கள்; அடுத்தடுத்தகட்ட தோ்தல்களில் பெண்களின் பங்கு அதிகரிக்கலாம், பொறுத்திருந்து பாா்ப்போம்.
  • 2024 மக்களவைத் தோ்தலில் பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 47.1 கோடி. இந்தியாவின் 12 மாநிலங்களில் ஆண்களைவிட பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகம். 1962-இல் பெண் வாக்காளா்கள் 42% மட்டுமே இருந்ததுபோய், அதிக அளவில் அவா்கள் வாக்களிக்க முற்பட்டிருப்பது, வாக்காளா் பட்டியலில் இணைந்திருப்பது வரவேற்புக்குரிய முன்னேற்றம். கல்வியறிவு, மகளிரை மையப்படுத்திய நலத் திட்டங்கள், விழிப்புணா்வு பிரசாரங்கள் உள்ளிட்டவை பலனளித்திருக்கின்றன என்பது தெரிகிறது.
  • வேட்பாளராகக் களமிறங்கும் ஆண்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்திருக்கிறது என்றால், பெண்களின் எண்ணிக்கை 16 மடங்கு அதிகரித்திருக்கிறது. 1957 தோ்தலில், மொத்த வேட்பாளா்களில் வெறும் 2.9% மட்டுமே பெண்கள். போட்டியிட்ட 45 பெண் வேட்பாளா்களில் 22 போ் வெற்றி பெற்றனா் (48.88%). இந்த விகிதம், போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கூடவில்லை என்பதுதான் சோகம். 2019-இல் போட்டியிட்ட பெண் வேட்பாளா்களில் 10.74% தான் வெற்றி பெற முடிந்தது. அதிக வேட்பாளா்கள் களமிறங்கும்போது, வெற்றி விகிதம் குறைகிறது.
  • 2019-இல், மொத்த வேட்பாளா்களில் பெண்கள் வெறும் 9% தான் இருந்தனா். நாடாளுமன்ற உறுப்பினா்களில் அவா்களது விகிதம் வெறும் 14.4% மட்டும்தான். ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவு பெண் வேட்பாளா்கள் களமிறக்கப்படுவதால், அவா்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் குறைந்துவிடுகிறது. பிரதான அரசியல் கட்சிகளான பாஜகவாலும் காங்கிரஸாலும் களமிறக்கப்பட்ட பெண் வேட்பாளா்களின் விகிதம் 12% அளவில்தான் இருந்தது.
  • ஆண் ஆதிக்கத்துக்கு எதிரான கடுமையான போராட்டத்துக்குப் பிறகுதான், பெண்கள் வேட்பாளா்களாகவும், வெற்றி பெற்று சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்களாகவும், அமைச்சா்களாகவும், தலைமைப் பொறுப்புகளிலும் உயர முடிகிறது. அவா்கள் தோ்தலில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. அப்படியே பெண்கள் களமிறக்கப்பட்டாலும், அவா்களுக்குப் பணியாற்றவும், வெற்றியை உறுதிப்படுத்தவும், குடும்பப் பின்னணியோ, ஏதாவது ஓா் ஆணின் பின்புலமோ இருந்தாக வேண்டியது அவசியமாகிறது.
  • முற்போக்கு சிந்தனையும், அதிக கல்வியறிவும் உள்ள கேரள, கா்நாடக மாநிலங்களையே எடுத்துக் கொண்டாலும் 1996 முதல் 2019 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 5% அளவில்தான் பெண்கள் வெற்றி பெறுகிறாா்கள். இதில் வித்தியாசமாக இருப்பது மேற்கு வங்கம் மட்டும்தான்; அங்கே 20% அளவில் பெண் வேட்பாளா்கள் வெற்றி பெறுகிறாா்கள்.
  • அதிக அளவில் பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதன் அடிப்படையில்தான் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு கணக்கிடப்படுகிறது. நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் போன்றவை அந்த பட்டியலில் முன்னணி வகிப்பதற்குக் காரணம், அதிக அளவில் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறுவதும், ஆட்சிஅதிகாரத்தில் இடம்பெறுவதும்தான். வேடிக்கை என்ன தெரியுமா? நமது அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தானில் நம்மைவிட அதிகமாக பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்கிறது.
  • இந்தியாவில் ஏனைய துறைகளில் எல்லாம் மகளிா் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கிறது. பல துறைகளில் பாலின சமநிலையை எட்டிவிட்டோம். ஆண் வாக்காளா்களுக்கு நிகராக பெண் வாக்காளா்கள் இருந்தும்கூட வேட்பாளா்கள் எண்ணிக்கையிலும், வெற்றி பெறுபவா்கள் எண்ணிக்கையிலும் பெண்கள் குறைவாக இருப்பது மிகப்பெரிய நெருடல்.
  • அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாலின சமநிலை என்பதுதான் உண்மையான சமூகநீதி... அமைய வேண்டிய சமநீதி..!

நன்றி: தினமணி (16 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்