TNPSC Thervupettagam

பிரளயம் நிஜம்தானோ?

July 29 , 2021 1099 days 504 0
  • பருவமழை பெருமழையாக மாறும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் மனித இனம் திகைக்கிறது. கடந்த 10 நாள்களாக வட இந்தியாவின் மலைப் பகுதிகளிலும், மேற்கு இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளிலும் வானமே உருகி விழுவதுபோல பெய்யும் அடைமழையால் நிலைகுலைந்து போயிருக்கின்றன பல மாநிலங்கள். நிலச்சரிவுகளும், திடீா் வெள்ளமும் 150-க்கும் அதிகமான உயிர்களை பலி கொண்டிருக்கின்றன.
  • ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, பிகார், கா்நாடகத்தின் சில பகுதிகள் என்று மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் ஏராளம்.
  • ஆந்திர மாநிலத்தின் கோதாவரியில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கால் போலாவரம் மண்டலத்தில் உள்ள 17 கிராமங்களுக்கான தொடா்பு முற்றிலுமாக அறுந்திருக்கிறது. கிருஷ்ணா நதியைச் சுற்றியுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.
  • ஜூலை 22-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மகாபலேஷ்வா் பகுதியில் பெய்த 600 மி.மீ. மழை என்பது இதுவரை வரலாற்றில் காணப்படாத பதிவு.
  • ரத்தினகிரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழை பொழிந்து தள்ளியிருக்கிறது. மும்பையை எடுத்துக்கொண்டால், ஆறு மணிநேரத்தில் 230 மி.மீ. மழைப் பொழிவு.
  • அடைமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட ரெய்காட் மாவட்டத்தில் மலைச்சரிவு ஏற்பட்டதால் 53 போ் உயிரிழந்திருக்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம்போ் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • 1982-க்குப் பிறகு கோவா இப்படியொரு பருவமழை சீற்றத்தையும் வெள்ளப்பெருக்கையும் எதிர்கொண்டதில்லை.
  • ஹிமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் பாறைகள் பெயா்ந்து உருண்டு அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்ததால் ஒன்பது பயணிகள் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலை சற்று அடங்கியிருப்பதால் பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, உல்லாச பயணிகள் ஹிமாசல பிரதேசத்திற்கும் உத்தரகண்ட்டுக்கும் ஆயிரக்கணக்கில் பயணிக்கத் தொடங்கியபோது சில கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது.
  • தலைநகரான தில்லியும் பருவமழையின் சீற்றத்திற்கு விலக்காகவில்லை. கடந்த பல மாதங்களாக இருந்த கடுமையான கோடை முடிவுக்கு வந்ததைத் தொடா்ந்து இடியுடன் கூடிய மழை எதிர்பாராத திருப்பம்.
  • ஒரே நாளில் தில்லியில் 70 மி.மீ. மழை பொழிந்தபோது நகரம் வெள்ளக்காடானது. அதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது குருகிராம்.

தயார்நிலையில் இருக்க வேண்டும்

  • இந்தியாவின் வடமேற்கு பகுதி முழுவதும் பரவலாகக் காணப்படும் பலத்த மழையால் நதிகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
  • பல கால்வாய்களின் கரைகள் உடைந்து கடுமையான பயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது. குடிசைகளில் வாழும் அடித்தட்டு மக்களின் நிலைமை பரிதாபமானது.
  • ஆண்டுதோறும் பருவமழையால் ஏற்படும் சேதம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை வழக்கமான பாதிப்பு என்று நாம் புறந்தள்ளுவது பேதைமை.
  • 2016-இல் இந்தியா ஒரேயொரு கடுமையான புயலைத்தான் எதிர்கொண்டது. 2018-லும், 2019-லும் ஆறு புயல்கள் இந்தியாவைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றன.
  • கடந்த ஆண்டு மிக மோசமான ஐந்து புயல்களை நாம் எதிர்கொண்டோம். அடிக்கடி புயலும், மழையும், வெள்ளப்பெருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்கமாகி வருவதை நாம் உணா்ந்ததாகத் தெரியவில்லை.
  • புயல்கள் மட்டுமல்ல, மழைப்பொழிவின் அளவும் கடுமையும் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்க்க முடிகிறது.
  • 2016-ஆம் ஆண்டில் பருவமழைக் காலத்தில் 226 கடுமையான மழைப்பொழிவுகள் காணப் பட்டன என்றால், 2019-இல் 554 மிகக் கடுமையான மழைப்பொழிவுகளும், 2020-இல் 341 கடும் மழைப்பொழிவுகளும் காணப்பட்டன.
  • குறுகிய நேரத்தில் மிக அதிக அளவிலான மழைப்பொழிவு ஏற்படுவதால் மழைநீா் வடிகால்களோ, ஓடைகளோ, நதிகளோ அதை எதிர்கொள்ள முடியாமல் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
  • இந்த பருவமழை மாற்றம் இந்தியாவை மட்டும் பாதிக்கிறது என்று கருதிவிட வேண்டாம். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜொ்மனியில் 24 மணிநேரத்தில் பெய்த 15 செ.மீ. மழைப் பொழிவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு 5 பில்லியன் யூரோ என்று கூறப்படுகிறது.
  • சீனாவின் ஷென்ஷௌவில் ஒரு நாளில் ஏற்பட்ட 21 செ.மீ.க்கும் அதிகமான மழைப் பொழிவில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டபாடில்லை. இதுபோன்ற கடுமையான மழைப்பொழிவும் வெள்ளப்பெருக்கும் வருங்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
  • சுற்றுச்சூழல் அமைச்சகம் வளா்ச்சிப் பணிக்காகக் காடுகளை அழிப்பதை ஆதரிக்கிறது.
  • இயமலையானாலும், மேற்கு தொடா்ச்சி மலையானாலும், சூழலியலையோ, சுற்றுச்சூழலையோ பொருட்படுத்தாமல் சாலைகள், பாலங்கள் என்று கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி இயற்கையைச் சீண்டும்போது, நம்மை திருப்பித் தாக்க இயற்கை கையில் எடுத்திருக்கும் ஆயுதங்கள் அடைமழையும், புயல் மழையும் போலிருக்கிறது.
  • பருவமழை தொடங்கி பாதிதான் முடிந்திருக்கிறது. இனிமேல்தான் புயல்களும், பெரு மழையும் அதிகரிக்கும் பருவம். அடுத்த சில மாதங்களையும் நாம் கடந்தாக வேண்டும்.
  • பருவம் எப்போது, எப்படி மாறக்கூடும் என்பதைக் கணிக்க முடியாத சூழலில் முன் கூட்டியே தயார்நிலையில் இருந்தால் மட்டுமே உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் தவிர்க்க முடியும்.

நன்றி: தினமணி  (29 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்