TNPSC Thervupettagam

பிரிக்ஸ்: மேற்குலகை எதிர்கொள்ளல்

August 30 , 2023 453 days 289 0
  • வளர்ந்துவரும் முக்கியப் பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகியவற்றின் கூட்டமைப்பு, பிரிக்ஸ் (BRICS - அந்நாட்டுப் பெயர்களின் முதலெழுத்துகளின் இணைவு) ஆகும். ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் நாடுகள் தலைமைப் பொறுப்பு ஏற்றுவரும் நிலையில், இந்த ஆண்டு தென் ஆப்ரிக்கா தலைமை வகிக்கிறது. அந்த வகையில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15ஆவது ஆண்டுக் கூட்டம், அந்நாட்டின் ஜோகனஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெற்றது.

பிரிக்ஸ் பின்னணி

  • பொருளாதாரரீதியாக வேகமாக வளர்ச்சியடைந்துவரும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள், 2050இல் உலகப் பொருளாதாரத்தில் கூட்டாக ஆதிக்கம் செலுத்தும் என கோல்டுமன் சாக்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளியலாளராக இருந்த ஜிம் ஓநீல், 2001இல் எழுதிய கட்டுரை ஒன்றில் கணித்திருந்தார்; இந்த நாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு பிரிக்என்கிற பதத்தை முதலில் பயன்படுத்தியவர் அவர்தான்.
  • அமெரிக்கா, அதன் மேற்குலகக் கூட்டாளிகள் ஆகியவற்றின் உலகளாவிய மேலாதிக்கத்துக்குச் சவால்விடும் வகையிலான ஒரு கட்டமைப்பை உருவாக்க, ரஷ்யாவின் முன்னெடுப்பில் இந்த நாடுகள் 2009இல் ஒரு குழுவாக ஒன்றிணைந்தன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை நிறுவன உறுப்பினர்களாக இருந்து தொடங்கிய இந்தக் கூட்டமைப்பில், இந்த நாடுகளைவிட மக்கள்தொகையிலும் பொருளாதாரத்திலும் சிறிய நாடான தென் ஆப்ரிக்கா 2010இல் இணைந்தது. ஐ.நா. அவை, உலக வங்கி, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் (OPEC) போன்ற ஓர் அதிகாரபூர்வமான பலதரப்பு அமைப்பாக இல்லையென்றாலும், இன்று உலக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக பிரிக்ஸ் பரிணமித்திருக்கிறது.
  • உலக மக்கள்தொகையில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 41.5%; ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 26.7%. மக்கள்தொகை, நிலப்பரப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஆகியவற்றில் உலகளவில் முதல் பத்து இடங்களுக்குள் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. ஜி20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் ஜிடிபி மதிப்பு, ஒட்டுமொத்தமாக 28.06 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்; அந்நியச் செலாவணி மதிப்பு, ஒட்டுமொத்தமாக (உத்தேசமாக) 4.46 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (2018).

பிரிக்ஸ் 15 ஆவது ஆண்டுக் கூட்டம்

  • புவி அரசியலின், புவியியல் சார்ந்த பொருளாதாரத்தின் மிக முக்கியத் தருணத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் இந்த ஆண்டு கூடின. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகான முதல் நேரடிக் கூட்டம் இது; ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் நேரடிக் கூட்டமும் இதுதான். சோஷலிஸ்டான லூலா டி சில்வா, பிரேசிலின் அதிபராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்ட பிறகு இந்தக் கூட்டத்தில் முதல் முறையாகப் பங்கெடுத்தார்.
  • அடிப்படையில், பிரிக்ஸ் என்பது வளர்ந்துவரும் பொருளாதாரங்களின் ஒரு கூட்டமைப்பாகும்; எனவே,பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்தே அது முதன்மைக்கவனம் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ரஷ்ய-உக்ரைன் போரின் புவி அரசியல் பின்னணியில், அது மேலதிக முக்கியத்துவம் பெறுகிறது.
  • அதன் காரணமாகவே மேற்கத்திய நாடுகள் தங்கள் கவனத்தைக் கூர்மைப்படுத்தியிருக்கின்றன. ஒருவேளை அழைக்கப்பட்டால்பங்கெடுப்பேன் என பிரெஞ்சு அதிபர்எம்மானுவல் மக்ரோன் கூறியிருந்தாலும், பிரான்ஸ்உள்பட மேற்கத்திய நாடுகள் எவையும் அழைக்கப்படவில்லை.
  • ஆனால், ஆப்ரிக்க ஒன்றியத்தின் 55 உறுப்பினர்கள்; ஆசியா, தென் அமெரிக்கா, சிறு தீவு நாடுகள் என தெற்குலக நாடுகளின் (global south) தலைவர்களுக்குத் தென் ஆப்ரிக்கா அழைப்புவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதம், பலதரப்புச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் பொருளாதாரம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முக்கிய நகர்வுகள்

  • ஆறு புதிய உறுப்பினர்களுடன் பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவடைய இருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். 40க்கும் மேற்பட்ட நாடுகள்பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், குறைந்தது 19 நாடுகள் உறுப்பினராவதற்கு முறையாக விண்ணப்பித்திருந்தன.
  • இந்நிலையில், அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உறுப்பினராகச் சேருவதற்குத் தற்போது அழைக்கப் பட்டிருக்கின்றன. 2024 ஜனவரி 1 அன்று புதிய நாடுகள் அதிகாரபூர்வமாக இணைய விருக்கின்றன.
  • மேற்குலகத்தை எதிர்கொள்ளும் நோக்கில், புதிதாகப் பல நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைக்கும் முன்னெடுப்பை ரஷ்யாவும் சீனாவும் தீவிரமாக முன்னெடுத்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியா இதை வரவேற்றது. ஆனால், புதியவர்களின் இணைப்புக்கான விதிமுறைகளும் செயல்முறைகளும் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
  • பிரிக்ஸ் கூட்டமைப்பைச் சீனாவின் கனவுகளுக்குக் கருவியாக்க வழிசெய்யும் நாடுகள் உள்ளே நுழைவதை இந்தியா வெற்றிகரமாகத் தடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மறுபுறம், புதிய உறுப்பினர்களுடன் இந்தியாவின் உறவு சீராக இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய-சீன எல்லைப் பிரச்சினை காரணமாக இரு நாட்டு உறவுகளில் தேக்கம் நிலவிவரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சீன அதிபர் ஷி ஜின்பிங்-இன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது.
  • முன்னதாக, ஜூன் 2 அன்று கேப்டவுனில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான சர்வதேச வர்த்தகம், நிதி சார்ந்த பரிமாற்றங்கள் ஆகியவற்றில் உள்ளூர் பணத்தைப் பயன்படுத்த வழிசெய்யும் தி கேப் ஆஃப் குட் ஹோப்என்கிற பிரகடனம் வெளியிட்டப்பட்டது. பிரிக்ஸ் ஆண்டுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, செப்டம்பர் 9, 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறவிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (30– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்