- கரோனா தொற்றைத் தடுக்க, உலக நாடுகளில் தடுப்பூசி போடத் தொடங்கிய நிலையில், பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவுகிறது எனும் செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது.
- ‘VUI–202012/01’ எனும் பெயர் கொண்ட இந்தப் புதிய வகை கரோனா வைரஸ், ஏற்கெனவே டென்மார்க், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டதுதான். பிரிட்டனில் இது இருப்பது செப்டம்பரில் அறியப்பட்டது. இது குழந்தைகளையும், இளைஞர்களையும் பாதிக்ககூடியது என்பது புதிய தகவல்.
வைரஸ் மாறுவது ஏன்?
- வைரஸ் மரபணுக்கள் திடீர் மாற்றத்துக்கு (Mutation) உள்ளாவது புதிதல்ல. முதன் முதலில் சீனாவில் பரவிய நாவல் கரோனா வைரஸின் அமைப்பு அப்படியே இப்போது இல்லை. இதுவரை அதன் மரபணுக் குறியீடுகளில் (Genetic code) மொத்தம் 5,574 திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
- இந்த மாற்றத்தில் இரு வகை உண்டு.உருவம் மாறினால் அதை ‘தனி இனம்’ (Strain) என்போம். சில உள் கூறுகள் மட்டும் மாறுவதை ‘வேற்றுருவம்’ (Variant) என்போம். இதை இப்படிப் புரிந்துகொள்வோம்... ஒரு காட்சியில் ஆள் மாறுவது ‘தனி இனம்’. ‘வேஷம்’ மாறுவது ‘வேற்றுருவம்’.
- பொதுவாக, வைரஸ் தான் சார்ந்திருக்கும் ஓம்புயிரியின் (Host) நோய் எதிர்ப்பு சக்தியோ, தடுப்பூசியோ தன்னை அடையாளம் கண்டு அழித்து விடலாம் எனும் நிலைமை வரும் போது, அதிலிருந்து தப்பிக்க, தன் உருவத்தையே மாற்றிக் கொள்ளும். ஆண்டுதோறும் ‘இன்ஃபுளுயென்சா’ வைரஸ் இனம் மாறுவது இப்படித்தான்.
- அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நாட்பட்ட நோயாளிகளிடம் அது நீண்ட காலம் தங்கும் போதும்,தீவிரமாகப் பரவும் போதும் வழக்கத்தைவிட வேக வேகமாகப் படியெடுத்துக் கொள்ளும் (Replication). எப்படி நாம் அவசர அவசரமாகத் தட்டச்சுசெய்யும் போது பிழைகள் ஏற்படுகிறதோ, அப்படி வைரஸ் வேகமாகப் படி எடுக்கும் போதும் பிழைகள் ஏற்படும். அப்போது, மரபணுக் குறியீடுகள் வரிசை மாறிவிடும். இதனால் வைரஸ் 'வேற்றுருவ வேஷம்’ போடும்இதுதான் பிரிட்டனில் நடந்திருக்கிறது.
- பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் மக்கள் முகக் கவசம் அணிவது, கும்பலைத் தவிர்ப்பது உள்ளிட்ட தற்காப்புகளை அலட்சியப்படுத்திய காரணத்தால், கரோனா வைரஸ் ‘VUI–202012/01’ எனும் புது ‘வேஷம்’ போட்டுக் கொண்டு, புது வேகத்தில் பரவியுள்ளது.
வைரஸில் மாற்றங்கள்?
- இப்போது அறியப்பட்டுள்ள ‘VUI–202012/01’ கரோனா வைரஸில் 17 ‘எழுத்துக்கள்’ வரிசை மாறியுள்ளன. முக்கியமாக, இது மனித உடல் செல்களுக்குள் நுழைவதற்குப் பயன்படுத்தும் கூர்ப் புரதங்களில் (Spike proteins) 7 புதிய மாற்றங்களைச் செய்துள்ளது.
- கூர்ப் புரத மரபணு வரிசையில் 501-வது இடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதிமுக்கியமானது. இந்த மாற்றம் ‘என்501ஒய்’ (N501Y) என அழைக்கப்படுகிறது. மாறியுள்ள வரிக்கு ‘பி.1.17’ (Lineage B.1.17) என்று பெயர். இதன் மூலம் மனித உடலுக்குள் இன்னும் வேகமாகப் பரவும் தன்மையை இது பெற்றுள்ளது. இதுதான் நமக்குப் பீதியைக் கிளப்புகிறது.
- பிப்ரவரியில் ‘D614G’ எனும் வேற்றுருவ கரோனா வைரஸ் ஐரோப்பாவிலும், டிசம்பரில் ‘501.V2’ வைரஸ் தென் ஆப்பிரிக்காவிலும் பரவின. இந்த இரண்டையும் கட்டுப்படுத்திய அனுபவங்கள் நமக்குக் கைகொடுக்கும் என வல்லுநர்கள் உறுதியாக உள்ளனர்.
- வைரஸின் மாற்றத்தால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்குப் பலன் இல்லாமல் போய் விடுமோ என்ற கவலை தேவையில்லை. காரணம், வைரஸ் அதே இனம்தான்; ‘வேற்றுருவ வேஷம்'தான் புதிது. அதிலும், இந்த புதிய மாற்றம் ஒரு சதவீதம்தான்!
- குற்றவாளிகள் மாறுவேடத்தில் வந்தாலும் கைரேகைகளை அடையாளம் வைத்துக் காவல் துறையினர் கண்டுபிடிப்பது போல் மனித உடலில் உருவாகும் ரத்த எதிரணுக்கள் கரோனா வைரஸின் 'வேற்றுருவ வேஷ’த்தைக் கண்டு ஏமாறாமல், கரோனாவின் இன உருவத்தை அடையாளம் கண்டு அழித்துவிடும். அந்த வகையில்தான் தடுப்பூசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- இந்த வைரஸ் அதிவேகமாகப் பரவும் என்பதால், ஒரே நேரத்தில் மருத்துவமனைகளுக்கு அதிக நோயாளிகள் படையெடுக்கும் சூழல் உருவாகும். அப்போது மருத்துவ பணியாளர்கள், மருத்துவமனைக் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டி வரும்.
இந்தியாவுக்கு ஆபத்து வருமா?
- பிரிட்டன் வைரஸ் இந்தியாவில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும், அது வழக்கமான ஆய்வுகளில் தப்பித்து, குறைந்த அளவில் இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர். பிரிட்டனைப் போல் இங்கு இதுவரை அச்சுறுத்தும் தகவல்கள் இல்லை என்பது பெரிய ஆறுதல்.
- அடுத்து, செப்டம்பருக்குப் பிறகு இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களிடம் மரபணு வரிசை மாற்றங்களை அறிய ஏற்பாடு நடக்கிறது. இதிலும் புது வகை கரோனா வைரஸ் இந்தியாவில் உள்ளதா என்பது தெரிந்துவிடும்.
- இப்போது பிரிட்டன் விமான சேவைக்கு இந்தியாவும் தடை விதித்துள்ளது. விமானப் பயணிகளைப் பரிசோதித்தல், தனிமைப் படுத்துதல், கண்காணித்தல் போன்ற வழிமுறைகளால் இனிமேல் இது இந்தியாவுக்கு வருவதைத் தடுத்து, ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
- ஆனாலும், அடுத்த 6 மாதங்களுக்கு முகக் கவசம் அணிவது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை நாம் அலட்சியப்படுத்தாமல் இருந்தால் கரோனாவின் அடுத்த அலை குறித்து கவலைப்படத் தேவையில்லை.
புதிய கரோனா வைரஸ் பெயர்
- 'VARIANT UNDER INVESTIGATION - 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் (12) முதலாவதாக (01) கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் என்று பொருள்.
Lineage B.1.17. பொருள் என்ன?
- பிரிட்டனில் (B) முதலாவதாக (1) கண்டுபிடிக்கப்பட்ட 17 திடீர் மாற்றங்கள் கொண்ட வைரஸ் இது.
நன்றி: தி இந்து (26-12-2020)