TNPSC Thervupettagam

பிரிவினைப் பேச்சு தேசத் துரோகமே!

December 14 , 2019 1667 days 756 0
  • சிதறிக் கிடந்த தேசத்தை ஒருங்கிணைக்கவே ஆங்கிலேயர்களை இந்தியாவுக்கு கடவுள் அனுப்பிவைத்தார் என்பது நாட்டுப் பற்றும் கடவுள் நம்பிக்கையும் கொண்டவர்களின் நிலைப்பாடு.

பிரிட்டிஷ்காரர்களின் பணி

  • இன்று "இந்தியா' என்று பெயர்பெற்ற நம் நாட்டை மட்டுமல்லாது, அனைத்துலகையும் இணைக்கும் பணியையும் பிரிட்டிஷ்காரர்கள் செய்துள்ளார்கள் என்பது கண்கூடான உண்மை. நாடு நாடாகச் சென்று சுரண்டிக் கொள்ளையடித்தாலும், அவர்களால் இன்று மாபெரும் நன்மை விளைந்துள்ளது எனும் நிகழ்வின் உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
  • அந்த நாளில், ஒரு நாட்டின் அரசன் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து அதைத் தன்வசப்படுத்திக் கொள்வதும் தனது நாட்டை விஸ்தரித்துக் கொள்வதும் மன்னர்களின் இயல்புகளாய்க் கருதப்பட்டன என்பது நமக்குத் தெரியும்.  ஆனால், காலப்போக்கில் இது தகாத செயல் என்று கருதப்படும் நிலை தோன்றியது.
  • இதன் விளைவாகவே தான் பிடித்துவைத்துக் கொண்டிருந்த பல நாடுகளையும்  விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டியதாயிற்று.  இப்போதும் சில நாடுகள் அத்துமீறிப் பிற நாடுகளின் பகுதிகளைக் கபளீகரம் செய்துதான் வருகின்றன. இவற்றில் சீனா முக்கியமான ஆக்கிரமிப்பு நாடாக இருந்து வருகிறது.
    1962 அக்டோபரில் "இந்தியா - சீனா  பாய் பாய்' என்று கோஷமிட்டுக்கொண்டே நம் முதுகில் சீனா குத்தியதும், அதன் விளைவாக அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அதிர்ச்சிக்குள்ளானதும்கூட நாம் அறிந்ததே. அடுத்து, அது திபெத் நாட்டைத் தன் வசமாக்கிக்கொண்டு தலாய் லாமாவை அந்த நாட்டை விட்டு அகதியாய் ஓடும்படிச் செய்தது. இப்போது அந்த நாடு நமது அருணாசலப் பிரதேசத்துக்கும் உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது.

அத்துமீறல்கள்

  • இப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டுவரும் சீனா, "இந்தியா என்று ஒரே நாடாக இருந்தது? அது பல்வேறு கலாசாரங்களை உள்ளடக்கிய அமைப்பு; அது மதத்தால் மட்டுமே ஒன்றுபட்டுள்ள நாடு; இதை ஒரே நாடாக எப்படிக் கருத முடியும்?' எனும் கேள்வியை எழுப்பி வருகிறது.   இந்தியா எந்த அடிப்படையில் ஒருங்கிணைந்த நாடாக இருந்தால் இவர்களுக்கு என்ன வந்தது? 
    கம்யூனிஸம் எனும் பொதுவுடைமைத் தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு கலாசாரங்கள் நிறைந்த நாடுகள் உள்ள இந்த உலகம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு இவர்கள் முயற்சி செய்வது மட்டும் முறையான செயலாகிவிடுமா? திபெத்தின் கலாசாரமே வேறு.
  • அந்த நாட்டைச் சீனா விழுங்கித் தனதாக்கிக்கொண்டபோது அது சொல்லும் கலாசார அடிப்படை எங்கே போயிருந்தது? சீனாவின் கலாசாரத்துக்கும் திபெத்தின் கலாசாரத்துக்கும் என்ன தொடர்பு?  இந்தியாவை உடைப்பதும், அது சிதறிப் போனதும் அதன் பகுதிகளை ஒவ்வொன்றாய்ப் பிடிப்பதுமே சீனாவின் நோக்கம் என்பதுதானே அதன் இந்தக் கேள்வியில் வெளிப்படுகிறது?
    சீனாவை விட்டுத் தள்ளுங்கள். நம் நாட்டிலேயே சிலர்  "துக்டே துக்டே ஹோகா' - (இந்தியா) துண்டு துண்டாய்ச் சிதறும் - என்று கோஷமிட்டு வருவதை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் பேசுவது எவ்வாறு  பேச்சுரிமை என்கிற தலைப்பின் கீழ் வரும்? பேச்சுரிமை என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று பொருளாகுமா?
  • ஆட்சி எதிர்ப்புப் பேச்சுகள் தேசத் துரோகம் என்று கருதப்படும் என்பது, அந்த நாளில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டம் என்பதால் அது இன்றைய சுதந்திர இந்தியாவுக்குப் பொருந்தாது என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆட்சியாளர்களின் தவறுகளை விமர்சிப்பது பேச்சுரிமைதான்.

நாட்டின் ஒற்றுமை

  • ஆனால், அந்த விமர்சனம் நியாயமானதாக இருக்க வேண்டாமா?
    நம் நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலும்,  பிரிவினைகளைத் தூண்டும் வகையிலும் ஆவேசமாய்ப் பேசுவது விஷயமறியாத பாமர மக்களிடையே வன்முறையைத் தூண்டக்கூடுமல்லவா?
    நம் நாடு பிளவுபட்டால் என்னவாகும்? வெளிநாட்டினர் மீண்டும் இங்கு வந்து "டேரா' போடுவதில் அல்லவா முடியும்? எனவே, இதுபோல் அடாவடித்தனமாய்ப் பேசுபவர்களைத் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்துவதன் வாயிலாக, மக்களின் பேச்சுரிமையை பாரதிய ஜனதா கட்சி பறிப்பதாய்ச் சிலர் கூக்குரல் எழுப்புவது நேர்மையற்ற கூப்பாடாகும்.
  • சில தினங்களுக்கு முன்பு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் ஆவேசப் பேச்சு தேசத் துரோகம்”என்பதன் கீழ் வந்ததாகக் கருதப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டார். "ஜே.என்.யு.' என்று சுருக்கமாகச் சொல்லப்படும் அதே பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்களில் சிலர்  (இப்போது சில கட்சிகளின் தலைவர்களாகவோ அல்லது அரசியல் வாதிகளாகவோ இருப்பவர்கள்), "அந்த இளைஞர் ஆயுதம் வைத்துக்கொண்டிருந்தாரா? இல்லையே! அவரென்ன மக்களை ஆயுதம் ஏந்தி அரசை எதிர்க்கச் சொல்லி வன்முறையைத் தூண்டினாரா? இல்லையே?' என்றெல்லாம் அவரது சார்பாக வாதிடுகிறார்கள்.

போராட்டம்

  • பாமர மக்களிடையே வன்முறையைத் தூண்டுவதற்கு பேச்சாளர் ஒருவர் தம் கையில் ஆயுதம் வைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதோ அல்லது ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகப் போராடுமாறு வெளிப்படையாகக் கூற வேண்டுமென்பதோ இல்லை. பேச்சும், எழுத்தும் அதற்கு ஏற்ற கருத்தை உருவாக்கக் கூடியவையாக இருந்தால், அவ்வாறு பேசியவரோ, எழுதியவரோ வன்முறையைத் தூண்டுபவராகக் கருதப்பட வேண்டியவரே.
  • 1962-இல் நிகழ்ந்த சீன படையெடுப்புக்குப் பிறகு, பேச்சாற்றல் மிகுந்த அறிஞர் அண்ணாவே தனி நாடு எனும் கோரிக்கையைக் கைவிடவில்லையா? இந்தியா சிதறினால் அதன் பல்வேறு மாநிலங்களுக்கும் ஆபத்து எனும் நிதர்சனத்தை உணர்ந்து பிரிவினைக் கொள்கையைக் கைவிட்ட அறிஞர் அண்ணாவைக் காட்டிலும் அதிக அறிவு படைத்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சில கட்சிகளைச் சேர்ந்த அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது?
  • மக்களில் பெரும்பாலோர் ஒரு குறிப்பிட்ட சிந்தனையின் வசப்படும்போது, அவர்களின் செயலையும் அந்தச் சிந்தனையே உருவாக்குகிறது. எந்தச் செயலின் கிரியா ஊக்கியும் அதைத் தூண்டும் சிந்தனைதான். 
  • எனவே, மக்களிடையே ஒரு குறிப்பிட்ட இசம் அல்லது தத்துவம் பற்றி இடைவிடாது பேசிப் பேசியே அவர்களை மூளைச் சலவை செய்து அந்த "இச'த்தை அவர்களை இந்த மாணவரைப் போன்றவர்கள் தம் நாவன்மையால் ஏற்கச் செய்து விடுகிறார்கள். கூட்டங்கள் போட்டுப் பேசிப் பேசியே ஆட்சியையே பிடித்த கட்சிகள் பற்றி நமக்குத் தெரியாதா என்ன?
  • எனவே, ஆயுதம் ஏந்துமாறு ஒருவர் வெளிப்படையாகப் பேசி மக்களை வன்முறைக்குத் தூண்டவில்லை என்பது அவரை தேசவிரோதக் குற்றத்திலிருந்து விடுவித்து விடாது.

நன்றி: தினமணி (14-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்