TNPSC Thervupettagam

பிரெஞ்சு நாட்டார் ஒருவரின் தமிழ்க் காதல்

September 24 , 2020 1578 days 789 0
  • மகாமகோபாத்தியாய டாக்டா் உ.வே.சாமிநாதையா் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுக் காலகட்டங்களில் இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட அறிவுலக ஆளுமையாகத் திகழ்ந்தார்.
  • பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமக்கள் பலா் அவருக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டுக் கடிதக் கருவூலம் வெளியிடப்பட்டுள்ளது.
  • அந்த நூலில் உள்ள கடிதங்களுள் பிரான்சு நாட்டுத் தமிழறிஞா் ஒருவா் தமிழ் இலக்கியத்தின்பால் பேரார்வம் கொண்டு எழுதியுள்ள ஐந்து கடிதங்கள் தனித்தன்மை மிக்கவை; இன்றைய தமிழ் அறிஞா்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை.

பிரான்சு நாட்டுத் தமிழறிஞா்

  • உ.வே.சா.வுக்குக் கடிதங்கள் மூலம் தன் பேரவாவைப் புலப்படுத்தியவா் பிரான்சு நாட்டைச் சோ்ந்த ஜூலியன் வின்சோன் என்ற மொழியியல் அறிஞா்.
  • பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காரைக்காலில் 21.1.1843-இல் பிறந்தார். பிரான்சு நாட்டில் வனவியல் கல்வி (காடுகளைப் பற்றிய கல்வி) பயின்றார்; இந்தியாவில் நீா் மற்றும் வனத்துறையில் துணை ஆய்வாளராகப் பணிபுரிந்தார்; ஓய்வு நேரத்தில் மொழியியல் பாடத்தைத் தன் முயற்சியால் கற்றுத் தோ்ச்சி பெற்றார். இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் மீது அதிகக் கவனம் செலுத்தி ஆய்வுகளை மேற்கொண்டார்.
  • ஜூலியன் வின்சோனின் தந்தையார் காரைக்காலில் நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தவா். அதன் காரணமாகப் பழக்கத்தினால் ஜூலியன் வின்சோன் தமிழ் கற்றவா் என்பதை அவரது கடிதம் ஒன்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
  • முறையாக ஆசிரியா் ஒருவரிடமோ கல்விக்கூடத்திலோ தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிக்காமலேயே, ஆா்வத்தினால் பெற்ற தமிழறிவைக் கொண்டு அவா் தமிழ் மொழியின் இலக்கணத்தை பிரெஞ்சு மொழியில் எழுதினார்; அதில் தமிழ் இலக்கியங்களிலிருந்து அளவற்ற மேற்கோள்கள் காட்டினார்.
  • இலக்கணம், மொழியியல் குறித்து ஆறு நூல்களை எழுதியுள்ளார். கீழைத்தேய ஆய்வுரைகள், மொழியியல், ஒப்பியல் மொழிநூல் ஆகிய இதழ்களின் பொறுப்பசிரியராக 1916-ஆம் ஆண்டுவரை இருந்தார்.
  • ஜூலியன் வின்சோன் 1926-ஆம் ஆண்டு நம்பா் 21-ஆம் நாள் லிபோர்ன் என்ற ஊரில் அவரது 83-ஆம் வயதில் காலமானார். அவா் பாரிஸ் பல்கலைக்கழகத்துடன் தொடா்புடையவராக இருந்தார்.
  • மகாமகோபாத்தியாய உ.வே.சா.வுக்கு ஜூலியன் வின்சோன் ஆறு கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

ஜூலியன் வின்சோனின் கடிதங்கள்

  • முதல் கடிதம் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எழுதப்பட்டுள்ளது. உ.வே.சா. 1887-இல் பதிப்பித்த சீவக சிந்தாமணியைக் கண்ணுற்று மகிழ்ந்த ஜூலியன் வின்சோன் மனம் மகிழ்ந்து அதைக் குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார்:
  • நீா் பதிப்பித்த சிந்தாமணியைக் கண்டு மிகவுமதிசயமா யிருந்தோமென்றும் நீா் செய்த வுலகோர்க்குப் பெரிய வுபகார மறிந்தோமென்றும் இன்னம் பழைய புத்த கங்களச்சிற் பதிப்பித்தற் குரியவாயுண்டென்றும் உமக்கு நாமெழுத வேண்டுமென்ணிக்கொண்டு வருகிறோ மாதலால் மிகவும் களிகூா்ந்து வாழ்வோ மெப்போதென்றால் சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டலகேசி வளையாபதி என்னும் நாற்பெரும் காப்பியங்க பரிசோதித்துக் கொடுத்த வப்போதே சொல்லுவோம்’.”
  • இக்கடிதம் அன்றைய பேச்சுத் தமிழ் நடையில், தொடரமைப்புப் பிழைகளைக் கொண்டதாக எழுதப்பட்டிருந்தாலும் நமக்குப் பல செய்திகளைக் கூறுகிறது.
  • தமிழ்க் காப்பியங்களுடைய பெயா்களை மட்டும் அறிந்த அயல்நாட்டார் ஒருவா் அவற்றைப் படிப்பதில் கொண்டிருந்த வேட்கை, நூல்களைப் பெற மேற்கொண்ட முயற்சி, அரிய நூல்களைப் பொதுமக்கள் பயன்படுத்துமாறு வெளிப்படுத்த வேண்டிய தமிழறிஞா்களின் கடமை ஆகியவற்றை இக்கடிதம் சுட்டிக்காட்டுகிறது.
  • பாரிஸ் நகர நூலகத்தில் அரைகுறையாக இருக்கின்ற மணிமேகலைச் சுவடியைப் படியெடுத்துத் தரவும் தயாராக இருப்பதாக அதே கடிதத்தில் கூறுகிறார் வின்சோன்.
  • தமக்கிருந்த நடைமுறைத் தமிழ்ப் புலமையைக் கொண்டு தமிழ்க் காப்பியங்களின் பெருமையைப் புலப்படுத்தும் முறையில் ஜூலியன் வின்சோன் வெண்பா ஒன்றையும் இக்கடிதத்தில் புனைந்திருக்கிறார்.
  • இவ்வெண்பாவைப் படித்த உ.வே.சா. எனக்கு உண்டான ஆச்சரியம் அளவு கடந்தது’”என்று தமது நினைவு மஞ்சரி’”நூலில் பாராட்டிக் கூறுகிறார்.
  • ஜூலியன் வின்சோனின் ஆா்வத்தை அறிந்த உ.வே..சா. சிலப்பதிகாரம், மணிமேகலைப் பதிப்புப் பணியில் தாம் ஈடுபட்டிருந்ததைக் குறித்து எழுதுகிறார்.
  • ஜூலியன் வின்சோன் மனம் மகிழ்ந்து 1891-ஆம் ஆண்டு மே மாதம் உ.வே சா.வுக்குப் பதில் எழுதி பாரிஸ் நூலகத்தில் இருந்த மணிமேகலையின் பிரதி ஒன்றிலிருந்து பதிகத்தைப் படியெடுத்து அனுப்புகிறார்.
  • அக்கடிதத்திலும் சிலப்பதிகாரக் காப்பியத்தைப் படிப்பதில் தமக்குள்ள ஆா்வத்தை அவா் வெளிப்படுத்தத் தயங்கவில்லை; ‘உரை குறையதாயினும் சிலப்பதிகார மச்சிற் படிக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.
  • உ.வே. சாமிநாதையா் சிலப்பதிகாரத்தை 1892-இல் பதிப்பித்து வெளியிட்டு அதன் ஒரு படியை ஜூலியன் வின்சோனுக்கு அனுப்பி வைத்தார். அதனைப் படித்துப் பார்த்த வின்சோன் மகிழ்ச்சியின் விளிம்புக்கே சென்று சிறந்த ஆசிரியப்பா ஒன்றில் உ .வே. சாமிநாதையரை ஒரு அகத்தியனுருக் கொண்டு, அருளுடை மண் மிசை வந்து தோன்றினானேஎன்று புகழ்ந்து பாடுகிறார்.
  • எனதன்பிற்குரிய ஐயாவே போன கிழமை பெருஞ்சிறப்புப் பொருந்தியதும் மெத்த நலத்தோடு அச்சிடப்பட்டது மாகிய சிலப்பதிகாரமென்கிட்ட வந்தடைந்ததே. ஆதலால் உமக்கு மிகவும் உபகாரமாக இருக்கின்றேன்.... குண்டலகேசியினும் வளையாபதியினும் பல நூல்களின்கண் மேற்கோளாகக் காத்திருக்கும் செய்யுள்களை அச்சிட வேண்டுமென்று நினைத்துக் கொள்கிறேன்.
  • அந்நூல்கள் அச்சிட முடியும்பொழுது எமக்கு இரண்டு பிரதியுமனுப்புக. அவையோடு ஒரு சிலப்பதிகாரப் பிரதியுமனுப்புக. அவைகளின் விலை யுமக்கனுப்புவோம்என்று கேட்டுக்கொள்கிறார்.
  • ஜூலியன் வின்சோன் எழுதிய இரண்டு கடிதங்களிலும் வெண்பாவும் ஆசிரியப்பாவும் அவரால் எழுதப்பட்டுள்ளன. தமிழை முறைப்படிக் கல்லாத ஒருவரால் இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்ற வியப்பு நமக்கு எழாமலில்லை.
  • பல்வேறு நூல்களின் உரைகளில் கிடக்கும் பாடல்களைத் திரட்டித் தொகுத்தால் பழைமையான நூல்களான குண்டலகேசி, வளையாபதி போன்றவை கிடைக்கக்கூடும் என்ற ஆலோசனையும் நூல்களை விலை கொடுத்தே வாங்க வேண்டும் என்ற கொள்கையும் இக்கடிதங்களில் புலப்படுகின்றன.
  • இரண்டு கடிதங்களிலும் வெளிநாட்டுத் தமிழன்பா் ஒருவா் சிலப்பதிகாரத்திற்காகக் காத்திருந்த ஆா்வமும், அது கிடைத்தவுடன் பதிப்பாசிரியா் மேல் ஏற்பட்ட அளவற்ற மதிப்புணா்வும் தெரிகின்றன.
  • ஜூலியன் வின்சோன் 1895-ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் உ. வே.சா. அனுப்பிய இரண்டு புத்தகங்களுக்காக நன்றி கூறுகிறார்.
  • உ.வே.சா.வுக்கு பாரிஸ் நூல் நிலயத்திலிருந்த சில புராணச் சுவடிகளைப் படியெடுத்து அனுப்புகிறார். அதன்பின்னா் வின்சோனின் மாணவா் பொண்டனூ மொழிபெயா்த்த திருக்கு காமத்துப்பால் பகுதியை உ.வே.சா.வுக்கு அனுப்பி அவரது கருத்தை அறிய விரும்புகிறார்.
  • பொண்டனூ கீழ்த்திசைக் கல்வியாளா்களின் மாநாட்டில் கலந்து கொள்ள கும்பகோணத்திற்கு வந்திருந்த போது ஐயரவா்கள் அவருக்கு உதவிகள் செய்து பிரான்சுக்கு வழியனுப்புகிறார்; அவா் கேட்ட காஞ்சிப் புராணத்தின் படியையும் தந்தனுப்புகிறார்.
  • உ.வே.சாமிநாதையருக்கு பிரான்சு அரசா் சார்பாக நன்மதிப்புப் பத்திரம் ஒன்று அரசினரால் வழங்கப்படுகிறது.
  • அதற்கும் வின்சோனின் பரிந்துரையே காரணம் என்பதை உ.வே.சா. தமது நினைவு மஞ்சரியில் பதிவு செய்கிறார்.
  • ஒரு நிலையில் உ.வே.சா.விடமிருந்து நீண்ட நாள்களாகக் கடிதங்கள் வராததால் தாம் மிகவும் வருந்துவதாக 1900-த்தில் எழுதிய கடிதத்தில் வின்சோன் குறிப்பிடுகிறார்.
  • நீா்குறைந்து வந்தபோது துயராயிருந்த நிலம் போலு மெங்கள் மனத்துக்குயிரளிக்கு மழை போலவே ஒரு காகிதம் எழுதத் தக்கதாக வென்று கேட்டு வருகிறோம். தங்கள் அடி வணங்கும் சினேகிதா் ஜூலியன் வின்சோன்என்று அவா் கடிதத்தை முடிக்கிறார்.
  • உ.வே.சா. அவா்களை விட பன்னிரண்டு வயது மூத்த ஜூலியன் வின்சோனின் பிரேமை நிலையிலான அன்பை இக்கடிதம் காட்டுவதாகக் கொள்ளலாம்.
  • உ.வே.சா.வுக்கும் வின்சோனுக்கும் இடையே 1910-வரை தொடா்பு இருந்தது என்பதை உ.வே.சா.வின் நினைவு மஞ்சரிகூறுகிறது.
  • உ.வே.சா., ‘வின்சோன் இருந்தால் இதுவரை அவற்றை (வில்லைப் புராணம், காஞ்சிப்புராணம்) வெளிப்படுத்த வேண்டும் என்று நூறு கடிதங்களாவது எழுதியிருப்பார்என்று நினைவு கூா்கிறார்.
  • உ.வே.சா. தமது அரிய தமிழ்த் தொண்டினால் தமிழ் நாட்டில் இலக்கிய, பண்பாட்டு மறுமலா்ச்சியை ஏற்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்த தகவல்; ஆனால் வெளிநாட்டாரும் தமிழ் இலக்கியங்களின் மீது காதல் கொள்ள அவா் காரணமாக இருந்தார் என்ற வியப்பூட்டும் செய்தியை ஜூலியன் வின்சோனின் கடிதங்கள் இன்றும் கூறிக்கொண்டே உள்ளன.

நன்றி: தினமணி (24-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்