TNPSC Thervupettagam

பிறகென்ன தகவல் பெறும் உரிமை?

September 9 , 2020 1592 days 708 0
  • சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சட்டங்கள் அவ்வப்போது நிறைவேற்றப்படாமல் இல்லை. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும், நீதித்துறையும் அவ்வப்போது சில உத்தரவுகளைப் பிறப்பித்து, அந்தச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றனர் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை எடுத்தியம்ப முடியும்.
  • அந்தப் பட்டியலில் விரைவிலேயே தகவல்பெறும் உரிமைச் சட்டமும் இணைந்துவிடும் என்று தோன்றுகிறது.
  • நீதிமன்ற செயல்பாடுகள் தொடர்பான எந்தவொரு பிரச்னையிலும் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைவிட, உயர்நீதிமன்ற விதிமுறைகள்தான் முன்னுரிமை பெறும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
  • கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்கள் கையில் மிக சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கும் தகவல்பெறும் உரிமைச் சட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத பின்னடைவு இது.
  • தகவல் ஆணையர்கள் நியமனத்தில் மாற்றங்களைச் செய்து மத்திய அரசு ஏற்கெனவே அவர்களை வலுவிழக்கச் செய்திருக்கிறது. இப்போது தகவல்பெறும் உரிமைச் சட்டமே இந்தத் தீர்ப்பால் வலுவிழக்கக் கூடும்.
  • குஜராத் மாநில தலைமை தகவல் ஆணையருக்கும், குஜராத் உயர்நீதிமன்றத்துக்கும் இடையேயான பிரச்னையில்தான், உயர்நீதிமன்றத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

வலு சேர்ப்பதாக இல்லை

  • ஒரு குடிமகன், உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்து தகவல் பெறுவதற்கு, அந்தந்த உயர்நீதிமன்ற விதிகளின்படிதான் விண்ணப்பிக்க வேண்டுமே தவிர, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் தகவல் கோர முடியாது என்பதுதான் அந்தத் தீர்ப்பின் சாராம்சம்.
  • இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இனிமேல் எல்லாத் துறைகளுமே அவரவர் விதிமுறையின் கீழ் தகவல் கோர வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பி தகவல்பெறும் உரிமைச் சட்டத்தை செயலிழக்கச் செய்துவிட முடியும்.
  • குஜராத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு தொடர்பான சில ஆவணங்களின் நகல்களை ஒருவர் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.
  • உயர்நீதிமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகலைப் பெறுவதற்கு உயர்நீதிமன்ற விதிகளின்படி கட்டணம் செலுத்தி, அதற்கான நீதிமன்ற கட்டண முத்திரைத் தாளில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.
  • குஜராத் உயர்நீதிமன்ற விதிகளின்படி, என்ன காரணத்துக்காக ஆவணங்களின் நகலைப் பெற விரும்புகிறார் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
  • வழக்கு விசாரணைக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் எந்தவோர் ஆவணமாக இருந்தாலும் அதில் தன்மறைப்புநிலை (பிரைவஸி) இருக்க முடியாது.
  • அப்படி இருக்கும்போது எதற்காக ஒருவர் நகல் கோருகிறார் என்பதைத் தெரிவித்தால், தவறான அல்லது பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தால் சுதாரித்துக் கொண்டுவிடுவார்கள்.
  • மக்கள் தொடர்பு அதிகாரியின் முடிவை எதிர்த்து தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர், குஜராத் உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமைப்பில் முறையிட்டார்.
  • அந்த அமைப்பும் உயர்நீதிமன்ற விதிமுறைகளைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்று கூறிவிட்டது.
  • விண்ணப்பதாரர் அந்த முடிவை எதிர்த்து குஜராத் மாநில தகவல் ஆணையத்தில் முறையிட்டார். தகவல் ஆணையம், ஆவணங்களின் நகலை வழங்கும்படி குஜராத் உயர்நீதிமன்ற மக்கள் தொடர்பு அதிகாரிக்கு உத்தரவிட்டது.
  • உயர்நீதிமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி, தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழங்கிய இடைக்கால உத்தரவின்படி, ஆவணங்களின் நகலை தகவல்பெறும் உரிமைச் சட்ட மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
  • அதே நேரத்தில் அந்த உத்தரவு, தகவல்பெறும் உரிமைச் சட்டம் உயர்நீதிமன்ற விதிகளை கட்டுப்படுத்தும் என்று கருதிவிடக் கூடாது என்றும், அது குறித்து இறுதித் தீர்ப்பில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • இப்போது மீண்டும் உயர்நீதிமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி உயர்நீதிமன்றத்தை அணுகியபோது தகவல் ஆணையரின் உத்தரவை டிவிஷன் அமர்வு ரத்து செய்தது.
  • உயர்நீதிமன்றத்தில் எந்த ஆவணத்தைப் பெறுவதாக இருந்தாலும் அது உயர்நீதிமன்ற விதிகளின்படிதான் கோரப்பட வேண்டுமே தவிர, தகவல்பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டது.
  • இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தவோர் ஆவணத்தைப் பெறுவதற்கும் காரணம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • அதேபோல, உயர்நீதிமன்ற விதிகளுக்கும் தகவல்பெறும் உரிமைச் சட்ட விதிகளுக்கும் இடையே பிரச்னை எழுமானால், தகவல்பெறும் உரிமைச் சட்டம்தான் முன்னுரிமை பெற வேண்டும். ஏனென்றால், அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, என்பது மனுதாரரின் வாதம்.
  • உயர்நீதிமன்ற விதிமுறைகளின்படி ஆவணங்களைப் பெற வழியிருக்கும்போது, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கோரப்படத் தேவையில்லை என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடுகிறது.
  • 36 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பு, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் பல்வேறு விதிமுறைகள் குறித்து விரிவாக அலசி இருப்பது என்னவோ உண்மை.
  • ஆனால், வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதித்துறையின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதாக இருக்கிறதே தவிர, தகவல்பெறும் உரிமைச் சட்டத்துக்கு வலு சேர்ப்பதாக இல்லை.

நன்றி:  தினமணி (09-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்