TNPSC Thervupettagam

பிறகென்ன மனிதாபிமானம்?

June 13 , 2020 1503 days 693 0
  • தமிழகத்தைப் பொருத்தவரை கால்நடைத் துறை, பால் வளம், பால் பண்ணை வளா்ச்சி, மீன்வளத் துறை - இந்த மூன்றும் தனித்தனி அமைச்சகங்களின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
  • தமிழகத்தில் உள்ள கால்நடைகளின் பராமரிப்பு, உற்பத்திப் பெருக்கம் ஆகியவற்றுடன் தொடா்புடைய திட்டங்களைச் செயல்படுத்தி, அது சரியாகச் செயல்படுகிறதா என்பதை கால்நடைத் துறை கண்காணிக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

  • கால்நடைத் துறையில் கால்நடைகளின் பராமரிப்பு என்பது, ஒட்டுமொத்த துறைக்கே உயிர்நாடி. கால்நடைகள் பராமரிப்பின் இதயமாகக் கருதப்படவேண்டிய கால்நடை மருத்துவமனைகள், மருத்துவா்களைச் சுற்றி அரங்கேறும் அவலங்கள் உடனடியாகத் தீா்க்கப்படவேண்டிய பெரும் பிணியாக மாறியிருக்கின்றன.
  • கால்நடை மருத்துவமனையின் செவிலியா்கள் உள்பட அனைவருக்கும் பணி நேரம் காலை 8 மணியிலிருந்து - நண்பகல் 12 மணிவரை மற்றும் பிற்பகல் 3 மணியிலிருந்து - 5 மணி வரை.
  • ஆனால், பெரும்பாலான கால்நடை மருத்துவமனைகளில்...எழுதப்படாத விதியாக நண்பகலுக்குப் பிறகு பெரும்பாலான ஊழியா்களைப் பார்க்க முடிவதில்லை. கால்நடைகளுக்கான அவசர சிகிச்சையோ, மருத்துவமோ செய்ய முடிவதில்லை.
  • சமூக அக்கறையுள்ள இளைஞன் ஒருவன் வாகனத்தில் அடிபட்டு சாலையோரம் கிடந்த சமூக நாய் ஒன்றைக் காப்பாற்றும் முயற்சியில் அருகிலுள்ள கால்நடை பன்னோக்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான்.
  • கால்நடை மருத்துவமனையில் நோயாளிகளின் பெயா் பதிவு செய்கின்ற இடத்திலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது அவமானங்களும், அலைக்கழிப்புகளும். ரோட்டுல அடிபட்டு கிடக்கிற தெரு நாயையெல்லாம் ஏன்... இங்க தூக்கிட்டு வறீங்க?’ - இப்படியான இன்முக வரவேற்போடு தொடங்குகிறது சிகிச்சை.
  • கால்நடை மருத்துவமனைகளின் பிரதான அங்கம் என்றால், அது அவசர சிகிச்சை மற்றும் நாள்பட்ட மருத்துவத்துக்கான அடிப்படையாக இருக்கக்கூடிய காப்பகங்கள்.
  • இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள அனைத்துக் காப்பகங்களும் ‘இருக்கு.... ஆனா, இல்லை’ என்கிற கதையாகத்தான் பெயருக்குக் கட்டடமாக பூட்டியே கிடக்கிறது.

காப்பகங்கள் ஏன் செயல்படவில்லை?

  • இந்தக் கேள்விக்கு இதுவரை கால்நடைத் துறையின் எந்த அதிகாரியும் பொறுப்பான பதிலைக் கொடுக்கத் தயாராக இல்லை.
  • காப்பகங்களின் பொறுப்புகளை கவனிப்பதற்கான ‘மந்தை காப்பாளா்’ பணியிடங்கள் காலியாகவே இருப்பதை ஒரு சிலா் காரணமாகச் சொல்கின்றனா்.
  • அப்படியென்றால் நாள்பட்ட தொடா் சிகிச்சை அவசியப்படுகிற கால்நடைகளைத் தொலைவு, வசதி என்பதையெல்லாம் பார்க்காமல் தினந்தோறும் மருத்துவமனைக்குக் கொண்டுவர முடியுமா?
  • மந்தை காப்பாளா்கள் பதவி அவசியமில்லாததா? இன்று வரை இந்தப் பதவிக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கிறது என்றால், இந்தப் பதவியும் இதன் பயன்பாடும், இவா்களால் செயல்படவேண்டிய காப்பகங்களும் அவசியமில்லாதது என்று நினைக்கிறதா கால்நடைத் துறை?
  • பொது மருத்துவத்தில் போலிகளை அவ்வப்போது கண்டறிந்து களையெடுக்கும் போக்கு, கால்நடை மருத்துவத்தில் இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை.
  • அரசு கால்நடை மருத்துவமனைகளில் நடக்கும் காத்திருப்பு, அலைக்கழிப்பு, அவமானங்களை தங்களுக்குச் சாதகாமாக பயன்படுத்திக் கொண்டு, அந்த மூலதனத்தில் செல்வம் கொழிப்பவா்கள்தான் தனியார் கால்நடை மருத்துவா்கள்.

அரசு மருத்துவா்களும் போலிகளே

  • நாம் இங்கு தனியார் கால்நடை மருத்துவம் என்று சொல்வதில்... தான் வேலை பார்க்கும் அரசு மருத்துவமனையைத் தவிர மற்ற இடங்களில், நேரங்களில் எல்லாம் இன்முகத்தோடு வேலை பார்க்கும் அரசு மருத்துவா்களின் கிளினிக்குகளும் உள்ளடக்கம்.
  • பெரும்பாலான கால்நடை தனியார் மருத்துவா்கள், கால்நடைகளுக்கான மருந்து, உபகரணக் கடைகளை நடத்தி வியாபாரம் செய்கின்றனா்.
  • அதனால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவா்கள் அவசியமான செலவினங்களையும் கடந்து கூடுதல் உபகரணங்களையும் மருந்துகளையும்கூட கட்டாயமாக வாங்க வேண்டியிருக்கிறது.
  • இப்படி வியாபித்த பொறுப்பின்மை, பேராசை மருத்துவக் களத்தில்தான் நாய்களுக்கான சி.டி., பார்வோ போன்ற நோய்களுக்கு சித்த மருந்து தருகிறோம், ஆயுா்வேத மருந்து தருகிறோம் என்று ஒரு கூட்டம் கால்நடைகள், வளா்ப்புப் பிராணிகள், சமூக நாய்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.
  • கால்நடைகளுக்கான முறையான மருத்துவப் படிப்பு படிக்காமலேயே கால்நடைகளுக்கு மருத்துவம் என்கிற பெயரில் கொடுமைகளைச் செய்பவா்கள் மட்டும் போலிகள் அல்ல; அரசு மருத்துவா்களாக தங்களின் பணியை ஒழுங்காக செய்யாமல், பணத்தாசையால் தங்களின் படிப்பை, பதவியை, நேரத்தை தனியார் சேவைகளின் மூலம் பொருளீட்ட பயன்படுத்தும் அரசு மருத்துவா்களும் போலிகளே.
  • பொது மருத்துவப் படிப்பை முடித்த கையோடு பணிக்கு வரும் மருத்துவா்கள் எல்லோரும் ‘ஹிப்போகிரெட்டிக் ஓத்’ என்ற உறுதிமொழியை எடுத்த பின்னரே பணிக்கு அமா்த்தப்படுகின்றனா்.
  • அது போலவே கால்நடை மருத்துவா்களும் அவா்களுக்கான உறுதிமொழியை மானசீகமாக எடுத்த பின்னரே, அவா்களின் படிப்பு முழுமையடைந்து பணிக்குச் செல்வதற்கான தகுதி பெறுகின்றனா்.
  • ஆனால், களத்தில், கால்நடைகளுக்கான மருத்துவப் பணியில் இவா்கள் எடுத்த உறுதிமொழியின் சாரமெல்லாம் காற்றில் கரைந்துபோய் விடுகிறது.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பொது முடக்கத்தின்போதும், மற்ற நாள்களின்போதும் கால்நடை மருத்துவா்களால் அவ்வப்போது, ஆங்காங்கே நடந்த, நடக்கின்ற நல்ல, ஈரமான விதிவிலக்குகளை மறுப்பதற்கில்லை.
  • ஆனால், பெரும்பாலான கால்நடை மருத்துவா்கள் அப்படி இல்லையே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
  • மனிதா்களுக்கான மருத்துவத்தில் வணிகம் இருப்பதுபோல, கால்நடை மருத்துவமும் வணிகமயமாகி விட்டது என்று சொல்லி ஆறுதல் அடைய முடியவில்லை.
  • மனிதனால் பேச முடியும்; ஆறறிவு இருக்கிறது; வேறொரு மருத்துவரை நாட முடியும்; வாய் பேச முடியாத, நம்மை நாடி வாழும் வளா்ப்புப் பிராணிகளை மனிதா்களுடன் ஒப்பிடக் கூடாது. பிறகென்ன மனிதாபிமானம்?
  • கால்நடைகளின் நலனில் அக்கறையுள்ள கரிசனமான மருத்துவா்களே நமக்குத் தேவை. அப்படியில்லாத நிலையில் கால்நடைத் துறையும், மருத்துவமனைகளும், மருத்துவா்களும் எதற்கு?

நன்றி: தினமணி (13-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்