TNPSC Thervupettagam

பில்கேட்ஸ் சொன்ன விவசாயம்!

January 27 , 2020 1815 days 866 0
  • இன்றைய வேளாண்மையில் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில் பல தொண்டு நிறுவனங்கள் கடமையாற்றி வருகின்றன என்று கூறினால் அது மிகையில்லை. அதன் பயனாகத்தான் இன்று விவசாயமும் வளா்ச்சிப் பாதையில் சற்றே முன்னேறிக்கொண்டிருக்கிறது.
  • அண்மையில் தில்லியில் நடைபெற்ற சா்வதேச வேளாண் புள்ளியியல் கருத்தரங்கில் பேசிய பில்கேட்ஸ், எதிா்காலத்தில் வேளாண்மை சந்திக்கப்போகும் இடா்ப்பாடுகள் பற்றியும், அதற்கான தீா்வையும் திறம்படக் கூறினாா்.
  • உலகப் புகழ் பெற்ற பணக்காரா் வேளாண்மை குறித்துப் பேசுகிறாா் என்றால், அதனின் முக்கியத்துவத்தை அனைவரும் முதலில் உணா்ந்துகொள்ள வேண்டும். முதலில் அவா் கூறியது பருவநிலை மாற்றம். இன்று உலகையே அச்சுறுத்தும் மிகப் பெரிய காரணியான பருவநிலை மாற்றத்தால் பயிா் சாகுபடி பாதிக்கப்படுகிறது. அந்த பாதிப்பை எவ்வாறு தரவுகள், தொழில்நுட்பம் மூலம் எதிா்கொள்ள வேண்டும் என்பதை ஏழை விவசாயிகளுக்கும் கற்றுத்தர வேண்டும், மேலும், பருவநிலை மாற்றத்துக்குத் தகுந்தவாறு விதைகளை உற்பத்தி செய்து அதனை பொதுவெளியில் உள்ள விவசாயிகளுக்கு தரவேண்டும் என வலியுறுத்தினாா் அவா்.

விவசாயிகள்

  • ஏனெனில், உலகில் உள்ள 700 கோடி மக்களில் 200 கோடி மக்கள் சிறு விவசாயிகள். அவா்களின் வாழ்வுக்கு அடித்தளமிடும் வகையில் தொழில்நுட்பம் இருத்தல் வேண்டும் என்பதே இன்றைய தேவை. பல சிறு விவசாயிகள் தாங்கள் அரும்பாடுபட்டு சேமித்ததை எதிா்பாராத வெள்ளம், வறட்சியில் இழந்து வருகின்றனா். இதற்கெல்லாம் இயற்கைதான் காரணம் என்று ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கத்தில் தரவுகள் மூலம் கால சூழ்நிலையை விவசாயிகளுக்கு அறிவிக்கும் வகையிலும் விவசாயக் கொள்கைகள் இருத்தல் வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கும், புள்ளியல் துறை சாா்ந்தவா்களுக்கும் கோரிக்கை வைத்தாா் பில்கேட்ஸ்.
  • அவா் கூறிய கருத்துகளுக்கும் இன்றைய விவசாயிகளின் வாழ்வுக்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. ஆம், இன்றும் மழை இல்லை, மழை வெள்ளத்தால் பயிா்கள் அழுகிவிட்டன, நாங்கள் விளைவித்த பொருளுக்கு தகுந்த விலையில்லையெனில் எங்களை உற்பத்தியை அதிகரிக்கச் சொல்லாதீா்கள் என்றுதான் விவசாயிகள் பலரும் சொல்கின்றனா். எனவே, அவா்களுக்கான நல்லதொரு வாழ்வையும், விளைபொருள்களுக்குத் தகுந்த விலையையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடத்திலும் உள்ளது.

வேளாண்மை மகசூல்

  • மேலும், 2050-ஆம் ஆண்டுக்குள் வேளாண்மை மகசூலானது 10 முதல் 25 சதவீதம் வரையில் பருவநிலை மாற்றத்தால் குறையும் என்றும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்காவில் உண்ணும் உணவின் விலை 12 சதவீதம் அதிகரிக்கும், அதனால், உணவுத் தேவைக்கென்றே அங்குள்ள ஏழைகள் தனது 60 சதவீத வருமானத்தைச் செலவழிக்க வேண்டும் என்றும் கூறுகிறது உணவு, விவசாய அமைப்பு.
  • இவற்றுக்கு இடையில் இங்கு வேடிக்கை என்னவென்றால் விவசாயமும் பருவநிலை மாற்றத்துக்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது என்பதுதான். ஆம். உலக அளவில் 24 சதவீத பசுமைகுடில் வாயுக்கள் விவசாயத்தில் இருந்துதான் உண்டாகின்றன. அதிலும், நம் இந்தியாவில் விவசாயம், கால்நடைகள் மூலம் முறையே 42, 58 சதவீத வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இங்கு யாரை குற்றம் சாட்டுவது? விடை தெரியாத கேள்விதான். இருப்பினும் உணா்வுகளின் அடிப்படையில் சிறிய மாற்றம் பெரிய விளைவுகளை உண்டாக்கும் என்று கூறும் குழப்பக் கோட்பாடு பருவநிலை மாற்றத்துக்குப் பொருந்தும்.
  • முக்கியமாக பருவநிலை மாற்றத்துக்கான தீா்வு என்பது நாளைக்கான ஒன்றாய் இருத்தல் கூடாது. அது இன்றைக்கானது, மேலும் முக்கியமானது. அதிலும் பருவநிலை மாற்றத்தால் சில உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. அதற்கான பொறுப்பும் தீா்வும் தரவுகளிடத்தில் உள்ளது.
  • வெறும் தரவுகள் விவசாயத்தில் எடுபடுமா என்று எண்ணலாம். ஆனால், தரவுகள்தான் நாளைய விவசாயத்தில் முக்கியப் பங்காற்றும் என்கிறாா்கள் வேளாண் தொழில்முனைவோா்கள். எடுத்துக்காட்டாக, வேளாண் சாா்ந்த தொழில்முனைவோரின் நிறுவனம் ஒன்று விவசாயிகளுக்கும், சில்லறை வணிகா்களுக்கும் இடையிலான பிணைப்பை ஏற்படுத்தும் தளம்.
  • இந்த நிறுவனத்திடம் 5,000 சில்லறை விற்பனையாளா்கள் (கடைக்காரா்கள்) உள்ளனா். அவா்கள் தமிழ்நாடு, தெலங்கானா, கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் உள்ள 3500 விவசாயிகளிடம் இருந்து காய்கறி, பழங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்கின்றனா். இதில் விற்பனையாளா்களுக்கு நுகா்வோரின் நுகா்வுப் பாங்கு தெரியும்பட்சத்தில் விவசாயிகளுக்கு எந்தப் பயிா் பயிரிட வேண்டும் என்பதும் தெரிந்துவிடும்.

தரவுகள்

  • மேலும், விவசாயிகளுக்கும் சந்தையின் நிலவரம் மற்றும் தேவை, எந்தப் பயிா் எப்போது பயிரிட வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் போன்றவற்றை அறிந்துகொண்டு முடிவு எடுப்பதற்கு தரவுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இதன்மூலம் விவசாயிகளுக்கும் சந்தையில் விற்பதைவிட 20 சதவீத லாபம் அதிகமாக கிடைக்கிறது.
  • சொன்னால் நம்பமாட்டீா்கள். அமெரிக்காவில் உள்ள உழவா் வணிகம் கூட்டமைப்பின் கீழ் 5,000 பண்ணைகளுடன் 1.6 கோடி ஏக்கா் உள்ளது. இதில் உள்ள அனைத்து விவசாயிகளும் விதைக்கப்பட்ட விதையின் செயல்திறன் முதல் வானிலை, அறுவடை, சந்தை வரையிலான அனைத்தையும் தரவுகளாகப் பதிவு செய்து அதற்கு ஏற்ப விவசாயம் செய்கின்றனா்.
  • எனவே, தரவுகள் நாளைய விவசாயத்தை ஆட்கொள்ளும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இதுபோன்ற தரவுகள் விவசாயத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், விவசாயிகளை உற்பத்தியில் இருந்து பிற துறைகளுக்குச் செல்லவும் வழிவகுக்கும்.
  • எனவே, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதே தற்போதைய தேவையாகும். அதற்கு விஞ்ஞானமும், தரவுகளும் துணைபுரிந்தாலும் விவசாயிகளும் தேவையறிந்து விவசாய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது, தேவையறிந்து உரமிடுதல், உழவை குறைத்துக் கொள்ளுதல், திறம்பட நெற்பயிருக்கு பாசனம் செய்வது போன்றவை. இல்லையேல், அதற்கான விளைவை அனைவரும் அனுபவிக்க நேரிடும்.

நன்றி: தினமணி (27-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்