TNPSC Thervupettagam

பிளவிலிருந்து மீளுமா அ.இ.அ.தி.மு.க.

November 9 , 2022 640 days 385 0
  • பிளவில் புதுத் தலைமை உருவாகும் என்பதற்கு ஈ.வெ.ரா. பெரியார் தலைமையிலான திராவிடர் கழகத்திலிருந்து முன்னுதாரணம் தொடங்குகிறது. பெரியாரின் தொண்டரான அண்ணாதுரை, பல்வேறு காரணங்களினால் தி.க.விலிருந்து விலகி 1949, செப்டம்பர் 17 அன்று "திராவிட முன்னேற்றக் கழகம்' தொடங்கினார்.
  • தி.மு.க., 1952-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சில கட்சிகளுக்கும், சுயேச்சைகள் சிலருக்கும் ஆதரவளித்தது.
  • 1957-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டு 15 இடங்களில் வென்றது; 1962-இல் 50 இடங்களில் வென்றது; 1967-இல் ஆட்சியைப் பிடித்தது.
  • 1952-இல் தி.மு.க.வில் சேர்ந்த எம்.ஜி.ஆர்., 1957 முதல் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். தி.மு.க.வின் அழுத்தமான சக்தியாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது அப்போதிலிருந்துதான்.
  • தி.மு.க.வில் அண்ணாவைப் போல் மேடைப் பேச்சு சாதுரியமுள்ள முன்னணி நிர்வாகியாகத் திகழ்ந்த மு. கருணாநிதி, கண்ணதாசன், ஈ.வி.கே. சம்பத், சிவாஜி கணேசன் ஆகியோர் தி.மு.க.வை விட்டு விலகிச் செல்ல காரணமாக இருந்தார் என்ற அவப்பெயர் உண்டு.
  • சிவாஜி கணேசன், அதைத்தான் கமல்ஹாசனுக்கு "பொம்மை' சினிமா மாத இதழுக்காக அளித்த பேட்டியில் கருணாநிதியின் பெயர் குறிப்பிடாது, "எம்.ஜி.ஆர். மட்டுமே தாக்குப் பிடித்தார், தி.மு.க.வின் சதி அரசியலில்' என்று மறைமுகமாகச் சொன்னார்.
  • 1967-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வென்றது. அத்தேர்தலில் எம்.ஜி.ஆர். (துப்பாக்கியால் சுடப்பட்டதால்) கழுத்தில் கட்டுடன் கைகூப்பி வணங்குவது போன்ற புகைப்படம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டது. அது தி.மு.க.வின் வெற்றிக்குப் பேருதவி புரிந்தது.
  • 1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது, அண்ணா, எம்.ஜி.ஆருக்கு மந்திரி பதவி தர விரும்பினார். ஆனால், எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்.
  • 1969-இல் அண்ணா மறைவிற்கு பின் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். முடிவெடுக்கும் சக்தியாக இருந்தார். கருணாநிதியை முதல்வராக்கியபோது, அவரே கட்சித் தலைவராகவும் இருந்தால்தான் கட்சியும் ஆட்சியும் சரியான திசையில் செல்ல முடியும் என்று எண்ணினார் எம்.ஜி.ஆர்.
  • அதற்குப்பின் தி.மு.க. நிர்வாகிகள் கட்டுப்பாடு இன்றி செயல்பட வழிவிட்டார் கருணாநிதி. ஆட்சிக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பியதும், 1972-இல் நடக்கவிருந்த தேர்தல் வரை தாக்குப் பிடிக்க முடியாது என்றுணர்ந்த கருணாநிதி, ஆட்சியைக் கலைத்துவிட்டு இந்திரா காந்தியின் செல்வாக்கால் வெற்றி பெறத் தீர்மானித்து சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாரானார்.
  • வங்கிகள் தேசிய மயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு உள்ளிட்ட முடிவுகளால் அப்போது பிரதமர் இந்திரா காந்திக்கு மக்கள் ஆதரவு உச்சத்தில் இருந்தது. அதனுடன் எம்.ஜி.ஆரின் செல்வாக்கும் சேர்ந்து கொண்டபோது, தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் பெரிதாகத் தெரியவில்லை. 1967- இல் வென்றதைவிட, 1971-இல் அதிகமாக 184 இடங்களில் வென்றது தி.மு.க. அந்த வெற்றி, கருணாநிதியின் போக்கை மேலும் திசை திருப்பியது.
  • எம்.ஜி.ஆர்., திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் முனு ஆதிக்கு மந்திரி பதவி தரும்படி கருணாநிதியிடம் கேட்டார். ஆனால், கருணாநிதி மறுத்துவிட்டார். இதைத்தான் பின்னர் கருணாநிதி "எம்.ஜி.ஆர். சுகாதாரத்துறை மந்திரி பதவி கேட்டார்' என்று திசை திருப்பினார்.
  • 1972 ஆகஸ்ட் மாதம் மதுரையில் தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திட்டமிட்டு எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதனால் மதுரை விழாவில் கருணாநிதிக்கு முன்னதாக எம்.ஜி.ஆர். பேசி முடித்துவிட்டுப் போய்விட்டார். அத்தோடு கூட்டமும் கலையத் தொடங்கியது. கருணாநிதி எழுந்து பேச முற்பட்டபோது பெரும்பகுதி கூட்டம் போய்விட்டது.
  • எம்.ஜி.ஆர்., கட்சியின் பொருளாளராக இருந்ததால், தி.மு.க.வின் வரவு - செலவுகளை ஒழுங்குபடுத்த விரும்பினார். பல செலவினங்கள் தன் அனுமதியின்றி கையாளப்பட்டதை அறிந்த எம்.ஜி.ஆர்., அவற்றுக்கு விளக்கம் கேட்டார். ஆனால் அவருக்கு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.
  • 1972 அக்டோபர் 8 அன்று மாலையில் திருக்கழுக்குன்றத்திலும், இரவு சென்னை ராயப்பேட்டையிலும் தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற எம்.ஜி.ஆர்., கட்சியின் கணக்கையும், திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்களையும் பகிரங்கமாகக் கேட்டார். தி.மு.க. தலைமை அதிர்ந்தது.
  • எம்.ஜி.ஆருக்கு விளக்கம் தர 15 நாள் அவகாசம் கூட தராமல், பொதுக்குழுவைக் கூட்டி கட்சியில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கினர். அதனைத் தொடர்ந்து தனக்கு ஆதரவாக தி.மு.க. தொண்டர்களும், எம்.ஜி.ஆர். மன்றத்தினரும் தினமும் திரண்டு வரும் எழுச்சியைக் கண்டு, அக்டோபர் 17 அன்று ராயப்பேட்டையில் உள்ள சத்யா திருமண மண்டபத்தில் (இன்றைய அ.இ.அ.தி.மு.க. தலைமை நிலையம்) "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியின் பெயர்ப் பலகையை திறந்து வைத்து, அண்ணா உருவம் பொறித்த கட்சி கொடியை ஏற்றி வைத்தார் எம்.ஜி.ஆர்.
  • அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பின், சட்டப்பேரவை கூடியபோது பேரவைத் தலைவர் மதியழகன், துணை சபாநாயகர் பெ. சீனிவாசன் ஆகிய இருவரையும் கொண்டு கூட்டம் நடத்தப்பட்டது. மதியழகன் எம்.ஜி.ஆரை ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகத்தில் அவரை நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கூச்சலும் குழப்பமும் நிலவ, எம்.ஜி.ஆர். மீது செருப்புகளை வீசினர். அதனால் அவர் "சட்டப்பேரவை செத்து விட்டது' என்று கூறி வெளியேறினார்.
  • இந்த சூழ்நிலையில் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வந்தது. அ.தி.மு.க. சார்பில் மாயத் தேவர், திமுக சார்பில் பொன். முத்துராமலிங்கம், ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி. சித்தன், இ. காங்கிரஸ் சார்பில் கரு. சீமைச்சாமி ஆகியோர் போட்டியிட்டனர்.
  • கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளித்து எம்.ஜி.ஆர். திண்டுக்கல் தொகுதியில் வலம் வந்தார். 1973 மே 11-இல் வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தின் வெற்றியும், வசூலும் அவருக்குத் தெம்பைத் தந்தன. மே 20-இல் நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலிலும் அது எதிரொலித்தது.
  • இந்தியாவே எதிர்பார்த்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 2.60 லட்சம் வாக்குகள் பெற்று முதலிடத்திலும், ஸ்தாபன காங்கிரஸ் 1.20 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாமிடத்திலும், தி.மு.க. 93 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாமிடத்திலும் வந்தன. இ.காங்கிரஸ் 4-வது இடத்திற்கு வந்து டெபாசிட்டை பறிகொடுத்தது.
  • தொடர்ச்சியாக 1974 - இல் கோவையில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட இ. கம்யூனிஸ்ட் வேட்பாளர் பார்வதி கிருஷ்ணன் வெற்றி பெற்றார். கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அரங்கநாயகம் வென்றார். அதே சமயம் பாண்டிச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. 15 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்திற்கு பாலா பழனூர் நின்று வென்றார்.
  • இந்தத் தேர்தல்களிலெல்லாம் அ.தி.மு.க.விற்கு இருந்த பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து தீர்வு கண்டவர் ஆர்.எம். வீரப்பன். அது 1984 - வரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் எம்ஜிஆருக்கு உதவியாக இருந்தது.
  • 1977 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. ஆனால் எம்.ஜி.ஆரை எதிர்கொள்ள தி.மு.க. சாதுரியமாக இ. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 1980 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் அ.தி.மு.க. இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. திமுக - காங்கிரஸ் கூட்டணி, மற்ற அனைத்து இடங்களையும் கைப்பற்றின. அதனால், அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.
  • அடுத்து வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.
  • 1984-இல் எம்.ஜி.ஆர், அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது இங்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு வென்றது. அக்கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து சாதனை புரிந்தது. 1987-இல் எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று அ.தி.மு.க. பிளவுபட்டதன் விளைவு சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. முதல்வராகப் பொறுப்பேற்ற ஜானகி எம்ஜிஆருக்கு, கைகொடுப்பதாகக் கூறிய காங்கிரஸ் திடீரென்று கைவிட்டதால், பெரும்பான்மை பலமின்றி ஆட்சி கவிழ்ந்து ஆளுநர் ஆட்சி வந்தது.
  • 1989-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வென்று ஜானகி, ஜெ. அணிகள் தோற்றன. அதனால் ஜானகி எம்ஜிஆர், விட்டுக் கொடுத்ததால் அ.தி.மு.க. மீண்டும் ஒன்றுபட்டு, முடக்கப்பட்டிருந்த இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்தது. அடுத்த இரண்டு மாதங்களில் நடந்த மருங்காபுரி, மதுரை இடைத்தேர்தல்களில், ஆட்சியிலிருந்த தி.மு.க.வின் அதிகார பலத்தையும் மீறி அ.தி.மு.க. வெற்றிபெற்றது.
  • ஜெயலலிதாவிடம் கட்சித் தலைமையை பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்துவிட்டு அரசியலிலிருந்து விலகிக்கொண்டார் ஜானகி. அதன் பிறகு ஜெயலலிதா தலைமையில் 1991 தேர்தலில் அ.தி.மு.க. அபார வெற்றி பெற்றது. 1996-இல் தோல்வி; 2001-இல் வெற்றி; 2006-இல் தோல்வி; 2011, 2016 தேர்தல்களில் தொடர்ந்து அ.தி.மு.க. வென்று ஜெயலலிதா முதல்வராக இருந்தார். 2016 இறுதியில் அவர் இயற்கை எய்தினார்.
  • அ.தி.மு.க. மீண்டும் பிளவுபடும் சூழ்நிலையில் சசிகலா நியமித்த எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் ஆனார். சில பரிவர்த்தனைகளின்படி ஓபிஎஸ்., அவரோடு இணைய 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை சுமுகமாகவே சென்றது. அதற்குப்பின் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி, அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி என்று அ.தி.மு.க.விற்கு ஏற்பட்ட பிரச்னைகளில் மீண்டும் இ.பி.எஸ். அணி, ஓ.பி.எஸ். அணி என்று கட்சி பிளவுபட்டுள்ளது.
  • அண்ணாவிற்கு பின் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், மு.க. ஸ்டாலின் என்று "தலைமை' சுற்றிச் சுழன்று நிற்கும் என்பது போல் அ.தி.மு.க.விற்கு விடையொன்று காத்திருக்கிறது. என்றாலும் தி.மு.க. எதிர்ப்பு அரசியல், அதிலும் ஊழல் எதிர்ப்பு அரசியல் என்று இயங்கி வந்த அ.தி.மு.க., அதற்குத் தகுதியானதாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி மக்கள் மனதில் இருக்கிறது. பிளவுகளிலிருந்துதான் வலிமையான தலைமை உருவாகும் என்பது வரலாறு. அ.இ.அ.தி.மு.க. மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

நன்றி: தினமணி (09 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்