பிழைப்பை அழிக்கும் பெருமுதலீடு
- விவசாயிக்கு விதைநெல் போல, கடற்குடிக்கு சங்காயம் என்னும் பொடிமீன் முக்கியமானது. இன்றைய மீன் குஞ்சுகளே வரவிருக்கும் வருடங்களின் மீன்வளம். கடும் பஞ்சத்தில்கூட ஒரு விவசாயி விதைநெல்லைத் தின்றழிக்கமாட்டார். விதைநெல் என்பது நாளையைக் குறித்த மனிதர்களுடைய நம்பிக்கையின் அடையாளம்.
- கடல் சூழல் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. கட்டற்ற தொழில்நுட்பங்களும் மிகை முதலீடும் மீனவர்களுக்குத் தேவையற்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. முதலீட்டையும் பயணச் செலவினத்தையும் ஈடுசெய்யும் வகையில் குறைந்தபட்ச அறுவடை கிடைத்தால்தான் கட்டுப்படியாகும் என்கிற நெருக்கடி. இந்திய மீன்பிடி விசைப்படகுகள் வெளிநாடுகளில் சிறைபிடிக்கப்படும் செய்திகளை இந்தப் பின்னணியில் பார்க்கலாம்.
மீன்வளப் பேரிடர்:
- 2014இல் வேராவலில் (குஜராத்) இழுவை மடிப் படகுகள் சாவாளைக் குஞ்சுகளை வாரியெடுத்துக் கொண்டிருந்தன. ஜுனாகட் மாவட்ட உயர் அதிகாரிகள் சிலருடன் ஒரு படகில் ஏறிச் சிறிது தொலைவு பயணித்துத் திரும்பியபோது நான் கண்ட காட்சி அது. வேராவெல் இந்தியாவின் உயர்தொழில்நுட்ப மீன்பிடி கிராமம். 8,000 இழுவைமடிப் படகுகள் அங்கே இயங்கிக்கொண்டிருந்தன. அதிகாரிகள் உள்பட, குஞ்சு மீன்களை அழித்தொழிப்பது பற்றிய கரிசனம் அங்கே யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
- தூத்துக்குடி, ராமேஸ்வரம் துறைமுகங்களில் மலைபோல் கிடந்த பொடிமீன் குவியல்களைக் கண்டு அயர்ச்சியடைந்து போயிருக்கிறேன். கோழித் தீவனத்துக்கு அல்லது உரத்துக்கு மட்டுமே பயன்படுகிற கூளம் அது. கடலில் இருந்திருந்தால் நாளைய மீன்வளம். தொண்டி மீனவர் சுப்பிரமணியன் சொல்வதுபோல, இந்தியாவின் மீன்வளப் பேரிடர் என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல, இழுவைமடித் தொழில்நுட்பம் இந்தியக் கடல்களில் நுழைந்தபோதே தொடங்கிவிட்டது.
- கப்பல்களும் விசைப் படகுகளும் பெரிய மீன்களைக் குறிவைப்பதில் தொடங்கி, உணவுச் சங்கிலியின் கீழ்மட்டத்திலுள்ள குஞ்சு மீன்கள்வரை வாரியெடுக்கத் தொடங்கி விட்டன. தேர்ந்தெடுத்த இனங்களைத் தொடர்ந்து மிகை அறுவடை செய்வதும், குஞ்சு மீன்களை அழிப்பதும் கடல் சூழலியலின் அழிவுக்கு முக்கியமான காரணங்கள்.
பெருந்தொழிலான குஜராத் மீன்வளம்:
- குஜராத் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்கிறார்கள். இந்திய அறுவடையில் 22% குஜராத்தில் கரைசேர்கிறது. இதில் 10% கூட உள்ளூர்ச் சந்தைக்குப் போவதில்லை. குஜராத்திகள் சைவ உணவு விரும்பிகள். அறுவடையில் தரமான ஒரு பகுதி பதனிடப்பட்டு ஏற்றுமதியாகிறது. மீதி பனிக்கட்டியிடப்பட்டு டெல்லி, மகாராஷ்டிரம் கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களுக்குத் தரை வழியாகக் கொண்டுசெல்லப்படுகின்றன.
- இந்தியாவின் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட குஜராத்தில் (1,660 கி.மீ.) 1,058 கிராமங்களில் வாழும் 6 லட்சம் பேரில் 2.18 லட்சம் பேர் நேரடியாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள். அலையாத்திகள், உவர்ச் சதுப்புகள், கடற்புல்படுகைகள் உள்ளிட்ட பலவகைச் சூழலியல் கட்டமைப்புகள் கொண்ட குஜராத்தின் கரைக்கடலில் 300க்கு மேற்பட்ட மீனினங்கள் இருந்தன. கண்ட்லா உள்ளிட்ட பல துறைமுகங்கள் அண்மைக் காலத்தில் நிறுவப்பட்டவைதான். பெருந்துறைமுகங்களும் கனரகத் தொழிற்சாலைகளும் கடற்கரை நெடுக நிறுவப்பட்ட பிறகு, ஏராளமான மீனினங்கள் அழிந்துவிட்டன.
தொழிற்சாலை மாசு:
- குஜராத்தின் 60% தொழிற்சாலைகள் கடற்கரையில்தான் அமைந்துள்ளன. தெற்கு குஜராத்தில் அங்க்லேஷ்வர், வாபி கடற்கரைகளில் வேதித் தொழிற்சாலைகள், வதோதராவில் பெட்ரோலியத் தொழிற் சாலைகள், சௌராஷ்டிரக் கடற்கரைகளில் ரேயான் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், கட்ச் கடற்கரை களில் அனல்மின் நிலையங்கள் என்பதாக ஒட்டுமொத்த குஜராத் கரைக்கடலும் மாசுபட்டுப் போயிருக்கிறது. 2020-’21 புள்ளி விவரங் களின்படி, குஜராத்திலுள்ள மீன்பிடி விசைப்படகுகளின் எண்ணிக்கை 28,355.
- வேராவல் இந்தியாவின் உயர்தொழில்நுட்ப மீன்பிடி கிராமம் என்று சொல்லப்படுகிறது. 2014இல் அங்குள்ள நல்லிகொட்டி மீன்பிடி துறைமுகத்துக்குச் சென்றிருந்தேன். நல்லி கொட்டி உள்பட, அங்குள்ள ஆறு படகணையும் துறைகளில் 8,000 விசைப்படகுகள் அணை வதாகச் சொல்லப்பட்டது.
- ஓரிரு தலைமுறைக்கு முன்னால் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது 50, 100 விசைப்படகுகளின் முதலாளிகளாக இருக்கிறார்கள். அவர்களின் படகுகளில் பெரும்பாலும் ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் மாத ஊதிய அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.
- முழுவதுமாக மாசுபட்டுப் போன குஜராத்தின் கரைக்கடல்களில் இத்தனை படகுகள் தொடர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் மீன்வளம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. விசைப்படகுகள் இனிமேல் ஆழ்கடலுக்குத்தான் போயாகவேண்டும். அம்மாதிரியான தொழில்முறைக்குப் பழக்க மில்லாத நிலையில் பிழைப்பை ஓட்டுவதற்கு சாவாளைக் குஞ்சுகள் போன்ற பொடிமீன்களை அரித்துப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றனர்.
- கடலின் உணவு வலைப்பின்னலை ஊடறுக்கும் இம்மீன்பிடி முறை காரணமாக, உணவுச் சங்கிலியில் பெரியவகை மீன்களின் இடம் காலியாகி, அந்த இடத்தைக் கழிவு நெகிழிக் குன்றுகள் கைப்பற்றியிருக்கின்றன. சங்காயம் என்னும் பொடிமீன் அறுவடை மீன்வள இருப்புக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது. சௌதி போன்ற வளைகுடா நாட்டுக் கடல்களில் படகுகள் பயன்படுத்தும் இழுவைமடியின் கடைமடைக் கண்ணிகளைக் கடற்படையினர் அவ்வப்போது படகில் ஏறிப் பரிசோதனை செய்கின்றனர். விதியை மீறினால் தண்டனை கடுமையாக இருக்கும்.
குஜராத் வழியில் மன்னார் கடல்?
- முத்துக்குளித் துறையின் வட எல்லையில் ராமேசுவரம் தீவு அமைந்திருக்கிறது. மன்னார் வளைகுடாவின் வளம் கொழிக்கும் கடலுயிர்க் கோளத்தின் இந்திய எல்லை ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலிக் கடற்கரைகளை உள்ளடக்கியது. பவளத்திட்டுகளும் கடற்கோரைகளும் 21 தீவுகளும் மன்னார் கடலுயிர்க் கோளத்தின் 3,600 வகை உயிரினங்களின் உயிர்நாடியாகும். ராமேசுவரம் தீவு, மண்டபம் ஆகிய இரண்டு மீன்பிடி மையங்களிலும் இயங்கும் விசைப்படகுகள் விசை இழுவைமடியைப் பயன்படுத்துகின்றன.
- இரட்டைமடி (இரண்டு விசைப்படகுகள் இணைந்து இழுக்கும் மடி), சுருக்குவலை ஆகிய தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் மன்னார் குடா கடலுயிர்க் கோளம் அழிந்து கொண்டிருக்கிறது. விசை இழுவை மடிகளால் இங்குள்ள பவளத்திட்டுகளும் கடற்கோரைப் படுகைகளும் அழிந்து வருகின்றன.
மிகை முதலீட்டின் விளைவு:
- தமிழகத்தின் பிற கடற்கரைப் பகுதிகளைப் போன்று இங்கும் தொழில்நுட்பப் பயன்பாடு வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் தொழில்நுட்பங்களும் இயந்திர விசையின் குதிரைத்திறனும் உயர்ந்துகொண்டே போகின்றன. இரட்டை மடித் தொழிலின் வெற்றி என்பது ஓடும் மீனின் வேகத்துக்கு ஈடுகொடுத்து மடியை வேகமாக இழுப்பதில் அடங்கியிருக்கிறது. அவ்வாறு, இரட்டைமடி விசைப் படகுகள் மீன்துறை அனுமதித்துள்ள குதிரைத்திறனைவிடப் பலமடங்கு சக்தி கொண்ட இயந்திரங்களைப் பயன்படுத்து கின்றன.
- நாட்டுப்படகு மீனவர்கள் சாதாரண குதிரைத்திறன் கொண்ட உள்பொருத்து இயந்திரங்களைப் படகைச் செலுத்து வதற்குப் பயன்படுத்துகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிப் பொருத்து இயந்திரப் பயன்பாடு முற்றிலுமாகத் தடைசெய்யப் பட்டுள்ள அதே வேளையில், விசைப்படகு/ வத்தைகளின் (பாரம்பரியப் படகுகள்) எண்ணிக்கை கண்காணிக்கப்படவில்லை என்பது மற்றொரு கசப்பான உண்மை.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 03 – 2025)