- தமிழில் குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றிய விரிவான பொருள்சார் பண்பாட்டு ஆய்வு நூல்கள் என்பன மிகவும் குறைவு, விரல்விட்டுக்கூட எண்ணிவிடலாம், பனைமரமே, பனைமரமே, உப்பிட்டவரை, தமிழர்களின் தாவர வழக்காறுகள், நாணயங்கள், தோணி போன்று.
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னெடுப்பில், பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவரான முனைவர் இரா. காமராசு எழுதியுள்ள ஆய்வு நூல், புகையிலை - வரலாறும் வழக்காறும்.
- தாவர வழக்காறு என்ற வகைமைக்கு எடுத்துக்காட்டான இந்த நூலில் எண்ணற்ற நூல்களிலிருந்தும் புகையிலை தொடர்பான தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளதுடன் மட்டுமின்றிப் புகையிலைச் சாகுபடி செய்யும் வேதாரண்யம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்வழி கிடைத்த தகவல்களும் தரவுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
- நூலின் தொடக்க இயலில் பொருளும் பண்பாடும் பற்றி விரிவாக அறிமுகம் செய்யும் ஆசிரியர், ஆய்வின்பாற்பட்டுப் புழங்குபொருள், நுகர்பொருள் பற்றியும் விவரிக்கிறார்.
- வரலாற்றில் புகையிலை இயலில் எளிய வாசகர்கள் அறிந்திராத ஏராளமான தகவல்கள் – எங்கே இருந்தது, விளைந்தது? எவ்வாறு பரவியது? புகையிலையின் தரத்தை விர்ஜீனியா என அடையாளப்படுத்துவது ஏன்? கொலம்பஸ் கண்ட ‘கொள்ளிக்கட்டைகளை வாயில் கவ்வியபடி உலவும் மனிதர்கள்’ யார்? இந்தியாவுக்குள் நுழைந்தது எப்போது? செல்வாக்குப் பெற்றது எவ்வாறு? என எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கின்றன.
- உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், தக்காளி, மிளகாய், புகையிலை ஆகியவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை அறிமுகப்படுத்தும் ஆசிரியர், நல்ல குடும்பத்தில் பொல்லாதவன் பிறந்தது போல புகையிலை வந்து பிறந்துவிட்டது என்ற எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் வரியைக் குறிப்பிடுகிறார். புகையிலை என்ற தாவரத்தின் இயல்புகளையும் சாகுபடி விவரங்களையும் விரிவாகப் பதிவு செய்யும் ஆசிரியர், ஒவ்வொரு புகையிலைச் செடியும் பத்து லட்சம் விதைகளை உற்பத்தி செய்யும் என்ற வியப்பளிக்கும் தகவலைக் குறிப்பிடுகிறார்.
- இலக்கியத்தில் புகையிலை இயல் நூலாசிரியரின் வாசிப்பின் விரிவை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தனிப்பாடல்கள் தொடங்கிப் புதுக்கவிதைகள் வரை, நாட்டார் கதைகள் தொடங்கி நாவல் இலக்கியம் வரை இடம் பெற்றிருக்கும் புகையிலை பற்றிய முக்கியமான செய்திகள் நூலில் தரப்பட்டுள்ளன.
- பாட்டுடைத் தலைவன் பழநி முருகனிடம் காதல் கொண்ட தலைவி ஒருத்தி புகையிலையைத் தூதாக அனுப்புகிற ‘புகையிலை விடு தூது’ பற்றிய குறிப்புகள் வாசகர்களைத் தேடிப் படிக்கத் தூண்டுபவை.
- நாட்டார் வழக்காற்று மரபில் தெய்வங்களுக்குப் புகையிலை நிவேதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், விராலிமலையில் பெருந்தெய்வமான முருகனுக்கு ஏன் படைக்கப்படுகிறது? என்பது பற்றிய விளக்கம் நூலில் இடம் பெற்றுள்ளது. புகையிலை விடு தூது விஷயத்தில் தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் பங்களிப்பைப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார் ஆசிரியர்.
- மலிபுகழச் சென்னையினில் தினம் இரண்டு மாரி கண்டேன் எனச் சென்னை மாநகரில் தோன்றும் செயற்கை மழையும் இடியும் பற்றி விவரிக்கும் தனிப்பாடல் பிரமாதம். இப்படியாக, புகையிலை பற்றி எத்தனையெத்தனை பாடல்கள், அதுவும் வெண்பா, சீர், கலம்பகம் என வகைவகையாக.
புகையிலையின் கேட்டை விவரிக்கும் பாரதிதாசன், தன்னுடைய கவிதையை நிறைவு செய்யும் விதம் கூர்மை
- மாசில்லாத செந்தமிழ்நாடு, வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
- முச்சந்தி இலக்கியத்தில் கிடைக்கும் புகையிலை சார்ந்த இரு பதிவுகளையும் – மூக்குத்தூள் புகழ் பதம் இகழ் பதம், புகையிலைச் சிந்து எனத் தேடிப்பிடித்து நூலில் பதிவு செய்துள்ளார் இரா. காமராசு.
- வழக்காறுகளில் புகையிலை பற்றிய இயலில் ஏராளமான விஷயங்களைக் குறிப்பிட்டுள்ள நூலாசிரியர், அ. அழகியநாயகி அம்மாள் திரட்டிய புகையிலையின் தீமை பற்றிய பாடலொன்றைச் சுட்டியுள்ளார் - தாய்தாலி அறுக்கும் போயிலே / தகப்பன் குடியக் கெடுக்கும் போயிலே / வித்தாரக் கொண்டய / கொலச்சும் போயிலே / மேனி மினுங்கக் / கெடுக்கும் போயிலே / வெத்திலைக்குச் சத்துரு - இப் / போயிலையாச்சே / சத்துக் கெட்ட (போயிலய பாத்துக்) கடி / முத்து ஞானப் பெண்ணே.
- வழிபாடுகள், நம்பிக்கைகள், வழக்காறுகள் பற்றிய விவரிப்புகளில் எங்கெங்கெல்லாம், எத்தகைய சூழ்நிலைகளில் புகையிலை இடம் பெறுகிறது என்ற தகவல்கள் – நாடு கடந்தும் – இடம் பெற்றுள்ளன.
- புகையிலைப் பொருள்கள் இயலில் புகழ்பெற்ற அங்குவிலாஸ் புகையிலை வெற்றி பெற்ற வரலாறு மட்டுமின்றி, சுருட்டு, சிகரெட், பீடி பற்றிய விரிவான தகவல்களும் இடம் பெறுகின்றன. இன்று உலகில் அதிகப் பயன்பாட்டில் உள்ள ஒரே புகையிலைப் பொருள் – சிகரெட், இந்தியாவின் புகையிலை நுகர்வில் 48 சதவிகிதம் பீடி!
- கள ஆய்வைத் தொடர்ந்து, புகையிலைச் சாகுபடி, பாடம் செய்தல் பற்றிய விவரங்களும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
- நூல் நெடுகிலும் ஆய்வறிஞர்கள் ஆ. சிவசுப்பிரமணியன், பக்தவத்சல பாரதி போன்றோரின் ஏராளமான மேற்கோள்கள் விரவிக்கிடக்கின்றன.
- கல்விப் புலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் துறைகளுக்கு வெளியே நல்ல எழுத்தாளர்களாகவும் திகழ்வது குறைவே. இந்த இடத்தை நிறைவு செய்பவர்களில் ஒருவர் முனைவர் இரா. காமராசு. கவிதை, விமர்சனம் எனத் தொடாத துறைகள் இல்லை எனலாம். கல்விப் பணியில் இருப்பவர்கள் கற்பித்தலையும் தாண்டித் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டியுள்ள கடமைகளை நினைவூட்டி முன்னேராக வழிகாட்டுகிறது, புகையிலை – வரலாறும் வழக்காறும்.
நன்றி: தினமணி (06 – 01 – 2024)