TNPSC Thervupettagam

புக்கர் பரிசு: கைரோஸ்

May 26 , 2024 230 days 259 0
  • 2024-க்கான சர்வதேசப் புக்கர் பரிசு ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கைரோஸ்’ (Kairos) என்கிற நாவலுக்கு வழங்கப்படுகிறது. எழுதியவர் பெண் எழுத்தாளர் ஜென்னி எர்பின்பெக் (Jenny Erpenbeck). மொழிபெயர்த்தவர் மைக்கல் ஹாஃப்மன் (Michael Hofmann).
  • கைரோஸ் எனும் சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருளை நாவலாசிரியர் தன் தொடக்க உரையிலேயே விளக்கிவிடுகிறார்: ‘கைரோஸ், நல்வாய்ப்பைத் தரும் கடவுள். அவன் நெற்றிக்கு மேல் ஒரு கொத்து முடி தொங்கும். அதனைப் பிடித்துத்தான் அவனை இழுக்க முடியும். அவன் நகர்ந்து போய்விட்டால், அவனைப் பிடிக்க முடியாது. ஏனென்றால், அவனைப் பிடித்திழுக்க முடியாதபடி அவன் தலையின் பின்புறம் வழுக்கையாக இருக்கும்’.
  • தொடக்கத்தில் இது ஒரு காதல் கதை. கிழக்கு ஜெர்மனியில் நடைபெறுகிறது. ஹான்ஸ், காத்ரீனா ஆகிய இருவரும் 1986 ஜூலை 11இல் ஹங்கேரியப் பண்பாட்டு மையம் செல்லும்போது, முதன்முறையாகச் சந்திக்கிறார்கள். மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. மாலை 6 மணிக்கு மூட வேண்டிய மையத்தை அன்று சற்று முன்னதாகவே மூடிவிட்டார்கள். ஏமாற்றத்துடன் திரும்பும்போது, அவன் அவளிடம் “கொஞ்சம் காஃபி சாப்பிடுவோமே” என்றான். அவள் “சரி” என்றாள்.
  • அவன் அவளைப் பத்தாண்டுகளுக்கு முன் பார்த்திருப்பதாகச் சொல்கிறான். அவள் சிறுமியாக இருக்கும்போது ஒரு நாள் அவளுடைய அம்மா அவளைப் பண்பாட்டு மையத்துக்கு அழைத்து வந்திருக்கிறாள். தெருவெல்லாம் சிறுமி அழுதுகொண்டு வந்ததையும், அவளை அவள் அம்மா தோளில் தூக்கிக்கொண்டபோது அழுகையை நிறுத்தியதையும் நினைவுபடுத்திச் சொல்கிறான். ‘தன்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதி, முன்பின் தெரியாத ஒருவர் மனதில், பத்து வருடங்களாக நிலைபெற்று இருந்திருக்கிறது’ என்று நினைத்து அவள் மெய்சிலிர்த்துப் போனாள். பேச்சுவாக்கில் அவன் தனக்குத் திருமணமாகிவிட்டதாகவும் பதினான்கு வயதில் பிள்ளை ஒருவன் இருக்கிறான் என்றும் சொல்கிறான். ஆயினும் அவன் தன்னைக் கழற்றிவிடுவதற்காகப் பொய் சொல்கிறான் என்று நினைத்துக்கொள்கிறாள். இப்படித்தான் அவர்கள் காதல் அரும்புகிறது. இருவருக்கும் இது ஒரு நல்வாய்ப்பாகத் தெரிகிறது.

காதல் மட்டுமல்ல

  • ஆயினும் ஒரு சிக்கல். காதலி காத்ரீனாவுக்கு வயது 19. காதலன் ஹான்ஸுக்கு வயது 53. இருவருக்கும் இடையே 34 வருட இடைவெளி. காதலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் அவர்கள் விலை கொடுக்க வேண்டியிருந்தது. அவனுக்குத் திருமண வாழ்க்கை குறுக்கிடுகிறது. நாடகத் துறையைச் சார்ந்த அவன் காதலி, சில ஆண் நண்பர்களோடு பழகுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. இப்படியாக, அவர்கள் வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்துவிடுகிறது. பொருந்தாக் காதலில் இதெல்லாம் நடப்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால், இந்த நாவலுக்கு வேறொரு பக்கமும் இருக்கிறது. அதைத்தான் புக்கர் விருதுக் குழு சுட்டிக்காட்டுகிறது: “காலம், தனிமனிதத் தெரிவுகள், வரலாற்றுச் சக்திகள் ஆகியவற்றை ‘கைரோஸ்’ ஒரு தத்துவார்த்த நோக்கில் ஆய்வுசெய்கிறது”.
  • அந்த வகையில், இது வெறும் காதல் கதையல்ல. ஓர் உருவகக் கதை. முக்கியமான ஒரு வரலாற்றுப் பின்னணியோடு இது சொல்லப்பட்டிருக்கிறது. சம்பவங்கள் நிகழும் இடம் கிழக்கு ஜெர்மனி. நிகழும் காலகட்டம் 1986 முதல் 1992 வரை. இது அந்நாட்டின் வரலாற்றின் ஒரு திருப்புமுனை.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனி மேற்கு ஜெர்மனியாகவும் (FRG – Federal Republic of Germany) கிழக்கு ஜெர்மனியாகவும் (GDR - German Democratic Republic) பிளவுபட்டுவிட்டது. மேற்கு ஜெர்மனியில் மேற்கத்திய நாடுகளும் கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் ரஷ்யாவும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஹான்ஸ் போலந்து நாட்டிலிருந்து மேற்கு ஜெர்மனியில் குடியேறியவன். அங்கு நிகழ்ந்த பேரழிவுகளை நினைத்து மனம் நொந்தவனாய் கிழக்கு ஜெர்மனிக்கு வந்து தங்கிவிடுகிறான். அவன் ஓர் எழுத்தாளன், நாவலாசிரியன். அரசியல் பின்புலம் கொண்டவன்.
  • இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது அவனுக்கு வயது ஆறு. ஜெர்மனி பிளவுபடுவதற்கு முன் பிறந்தவன். சிறுவனாக இருக்கும்போது எதுவும் அறியாதவனாக இருந்தாலும், நடந்து முடிந்த வரலாற்று வக்கிரங்கள் அவனுக்கு மன அழுத்தத்தைத் தருகின்றன. 1986 வாக்கில் கிழக்கு ஜெர்மனி பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பின்னடைவைச் சந்தித்துக்கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் பொதுவுடைமைத் தத்துவத்தில் முழு நம்பிக்கை கொண்டிருந்தோரில் அவனும் ஒருவன்.

போருக்கு முன்னும் பின்னுமாக...

  • காத்ரீனா போருக்குப் பிறகு பிறந்தவள். போரின் உக்கிரத்தை அறியாதவள். இருப்பினும், அவளும் கடந்தகால நிகழ்வுகளை உணர ஆரம்பிக்கிறாள்: “அவளுக்கு ஒன்று தெளிவாகியிருந்தது. இறந்தவர்கள் எலும்புகளையும், எரிந்தவர்கள் சாம்பலையும் மறைத்திருக்கும் மணல் பரப்பு அடர்த்தியானதல்ல. ஜெர்மனியில் நடப்பதென்றால் இறந்தவர்களின் மண்டை ஓடுகள் மீதும், கண்கள் மீதும், வாய்கள் மீதும்தான் நடக்க வேண்டியிருக்கும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் குழிகளின் ஆழங்களை வெளிப்படுத்தும்”.
  • இந்நிலையில், ஹான்ஸ் கிழக்கு ஜெர்மனியோடு ஒன்றிப்போய்விட்டான். மேற்கு ஜெர்மனியோடு இணைவதில் ஆர்வம் காட்டவில்லை. காத்ரீனாவோ மேற்கு ஜெர்மனியோடு இணைவதை ஏற்றுக்கொள்கிறாள். இதுவே, இரண்டு தலைமுறைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு. எவ்வாறு இருப்பினும், 1990இல் மேற்கு ஜெர்மனிக்கும் கிழக்கு ஜெர்மனி்க்கும் இடையே இருந்த பிரம்மாண்டச் சுவர் தகர்த்தெறியப்படுகிறது. ஜெர்மனியின் இரண்டு பகுதிகளும் மீண்டும் இணைகின்றன. இந்த இணைப்புக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னரே கிழக்கு ஜெர்மனி மெல்லமெல்ல வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது. அதுபோலத்தான் காத்ரீனா – ஹான்ஸ் காதலும்.
  • நாவலில் ஒரே நேர்க்கோட்டில் கதை சொல்லப்படவில்லை. நாவலின் தொடக்கத்தில் அவள் வேறொருவனுடன் திருமணமானவளாகக் காட்டப்படுகிறாள். அப்போது அவளுடைய பழைய காதலன் இறந்த செய்திவருகிறது. அவள் நடந்தவற்றையெல்லாம் பின்னோக்கி நினைத்துப் பார்க்க ஆரம்பிக்கிறாள். எர்பின்பெக்கிடம் எப்படி இக்கதை உருவானது என்று கேட்டபோது, அவர் “என் ஆவலைத் தூண்டியது இந்தக் கேள்விதான்: எவ்வாறு முதலில் சரியாகத் தோன்றியதெல்லாம் பின்னர் தவறாகத் தோன்றுகிறது?”
  • இந்த நாவலுக்கு வலுச்சேர்க்கும் விதமாக மொழிபெயர்ப்பு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாவலாசிரியர் மேற்கோள்குறிகள் இல்லாமல் எழுதுகிறார். சில சமயங்களில் எது கேள்வி, எது பதில் என்று சொல்ல முடியாமலிருக்கும். இதுபோன்ற சவால்களையெல்லாம் மொழிபெயர்ப்பாளர் மைக்கல் ஹாஃப்மன் வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பதைத் திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டிஇருக்கின்றனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்