TNPSC Thervupettagam

புதிய அரசு மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்

June 11 , 2024 20 days 57 0
  • நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகியிருக்கிறார். ஜூன் 9 அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மோடியுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 71 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களில் 30 பேர் மத்திய (கேபினெட்) அமைச்சர்கள். ஐந்து பேருக்கு மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 36 இணை அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
  • அனுபவம் மிக்கவர்கள் மட்டுமல்லாமல், புதுமுகங்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் நிதிக்கொள்கைகள் குறித்த விமர்சனங்களைத் தாண்டி, நிர்மலா சீதாராமன் மீண்டும் மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை மோடி தலைமையிலான அரசு பல விஷயங்களில் முந்தைய அரசுகளிலிருந்து வேறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது. ஜெய்சங்கர் மீண்டும் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பதன் மூலம் அரசு அதே பாதையில் பயணிக்க விரும்புவதை உணர முடிகிறது.
  • கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையில் ஏழு முன்னாள் மாநில முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராகப் பதவிவகித்த சிவராஜ் சிங் செளஹான் இதில் முக்கியமானவர். 2023 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக முதல்வர் பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. எனினும், மக்களவைத் தேர்தலில் எட்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றதன் மூலம் கட்சிக்குள்ளும் வெளியிலும் தனது அரசியல் செல்வாக்கை அவர் நிலைநிறுத்தியிருக்கிறார்.
  • புதிய அமைச்சரவையில் அனைத்து சாதிகள், சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவம் அளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த 27 பேர், பட்டியல் சாதியினர் 10 பேர், பட்டியல் பழங்குடியினர், சிறுபான்மைச் சமூகங்களிலிருந்து தலா ஐவர் அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளனர். இந்த முறை இஸ்லாமியர் ஒருவர்கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
  • அமைச்சரவையில் 24 மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சுரேஷ் கோபி, திரைப்படங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் தனக்கு ஒதுக்கப்பட்ட இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதாகச் செய்திகள் வெளியாகின. எனினும், அந்தத் தகவல்கள் தவறானவை என்று அவர் மறுத்துள்ளார். கேரளத்திலிருந்து ஜார்ஜ் குரியன் அமைச்சராக்கப்பட்டுள்ளது, கிறிஸ்துவர்களைக் கவரும் பாஜகவின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கக்கூடும். விரைவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களிலிருந்து முறையே 6, 3 பேர் அமைச்சர்கள் ஆகியுள்ளனர்.
  • முன்னதாக ஜூன் 7 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, ‘அனைத்து மதங்களும் சமம்’ என்னும் கொள்கையில் கூட்டணி உறுதியுடன் இருப்பதாகவும், அரசின் அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்துடன் செயல்படுத்தப்படும் என்றும் கூறியது நம்பிக்கை அளிக்கிறது. அனைத்து விஷயங்களிலும் ஒருமித்த கருத்தினை எட்டுவது கடினம். ஆனால், முக்கியமான விஷயங்கள் குறித்துப் போதுமான அளவு விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தப்படுவது அவசியம். இது கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும்.
  • 2024 மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசுக்குப் பெரும்பான்மை அளிக்கவில்லை என்றாலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு வலுவான பிரதிநிதித்துவத்தை அளித்துள்ளனர். இரண்டு தரப்பினரும் மக்கள் தீர்ப்பின் அர்த்தத்தை உணர்ந்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்