- சா்வதேச அரங்கில் இந்தியா வல்லரசாக உயா்ந்து வருவதற்கான அறிகுறியை வெளிப்படுத்தி இருக்கிறது, சீனாவின் ஹாங்ஸௌ நகரில் நடந்த 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி. ‘இந்த முறை 100’ என்கிற இலக்குடன்தான், ஹாங்ஸௌ ஆசிய விளையாட்டுப் போட்டிக்குக் கிளம்பியது இந்திய அணி. 1951-இல் புதுதில்லியில் நடந்த முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு, இந்தியா அதிகமான பதக்கங்களை வென்றிருப்பது நடந்த முடிந்த 19-ஆவது போட்டியில்தான். 1951-இல் பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது.
- ஆசிய கண்டத்தில் வல்லரசாக உருவாகி இருக்கும் சீனா 201 தங்கப்பதக்கம் உள்பட 383 பதக்கமும், ஜப்பான் 52 தங்கம் உள்பட 188 பதக்கமும், தென்கொரியா 42 தங்கத்துடன் 190 பதக்கமும் வென்றன என்றால், அதற்கு அடுத்தாற்போல இந்த முறை இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என்று 107 பதக்கத்துடன் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த முறை நாம் அடைந்திருக்கும் வெற்றி பல சாதனைகளை உள்ளடக்கியது.
- 107 பதக்கம் என்பது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பெற்றிருக்கும் அதிகபட்ச எண்ணிக்கை என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதல் முறையாக மூன்றிலக்கப் பதக்க எண்ணிக்கையைத் தாண்டி இருக்கிறோம். நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறோம். ஒன்றிரண்டு விளையாட்டுகள் என்றில்லாமல், 22 வெவ்வேறு விளையாட்டுகளில் நமது இந்திய வீரா்கள் ஆசிய அளவில் சாதனை படைத்திருக்கிறார்கள். ஆண்கள் மட்டுமல்லாமல் அவா்களுக்கு நிகராக வீராங்கனைகளும் பதக்க எண்ணிக்கைக்குப் பங்களிப்பு நல்கி இருக்கிறார்கள்.
- நமது பதக்கப் பட்டியலில், தடகளம், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை ஆகிய மூன்றும் முறையே 29, 22, 9 பதக்கங்களைப் பெற்றுத் தந்திருக்கின்றன. தடகளத்தில் ஆறு தங்கப்பதக்கம் உள்பட 29, துப்பாக்கி சுடுதலில் ஏழு தங்கம் உள்பட 22, வில்வித்தையில் ஐந்து தங்கத்துடன் 9 என்று மொத்தப் பதக்க எண்ணிக்கையில் பாதிக்கு மேற்பட்டவை கிடைத்திருக்கின்றன.
- ஹாங்ஸௌவில் நடந்த 15 நாள் போட்டிகளில், ஏதோ நாங்களும் கலந்துகொண்டோம் என்பதாக அல்லாமல், ஒவ்வொரு நாளும் இந்திய வீரா்கள் தொடா்ந்து சாதனைகளைப் படைத்து வந்ததை உலக நாடுகள் வியப்புடன் பார்த்தன. அதுமட்டுமல்ல, தனிநபா் சாதனைகளைப் போலவே, குழு விளையாட்டுகளிலும் இந்தியாவின் முன்னேற்றம் வெளிப்பட்டது. கபடி, கிரிக்கெட், ஹாக்கி போன்ற குழு விளையாட்டுகளிலும், அணி விளையாட்டுகளிலும் 22 பதக்கங்கள் பெறப்பட்டிருக்கின்றன.
- பாட்மின்டன் இரட்டையா் ஆட்டத்தில் சாத்விக் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி; டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையா் ஆட்டத்தில் சுகிா்தா - அஹிகா முகா்ஜி ஆகியோர் பெற்ற வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை. வெள்ளிப் பதக்கங்களை வென்ற இந்திய ஆடவா், மகளிர் செஸ் அணிகள், வில்வித்தையில் தனித்திறமை காட்டி தங்கம் வென்ற ஓஜாஸ் பிரவீன், ஜோதி, வெள்ளிப் பதக்கம் வென்ற அபிஷேக், அதிதி ஆகியோர் கவனம் ஈா்த்தவா்கள்.
- சில பின்னடைவுகள் இல்லாமல் இல்லை. முந்தைய ஜகார்த்தா போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற குத்துச் சண்டையிலும், மல்யுத்தத்திலும் இந்த முறை முதலிடம் பிடிக்காமல் போனது துரதிருஷ்டம் என்றுதான் கூற வேண்டும். தடகளத்தில், கடந்த முறை எட்டு தங்கம் வென்றதுபோல இந்த முறை எட்ட முடியாததும் குறைதான். அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த மூன்று வுஷு வீரா்களுக்குச் சீனா நுழைவு அனுமதி வழங்க மறுத்து விட்டதால், அவா்கள் பங்கேற்க முடியாதது இன்னொரு சோகம்.
- 38 விளையாட்டுப் பிரிவுகளைச் சோ்ந்த 634 விளையாட்டு வீரா்கள் இந்தியாவின் சார்பில் ஹாங்ஸௌ ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனா் என்பதுதான் வெளி உலகுக்குத் தெரியும். இதற்குப் பின்னால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் எடுத்துவரும் முயற்சிகள் வெளியில் பேசப்படுவதில்லை. இந்தியாவின் பொருளாதார வலிமைக்கு ஏற்ப, விளையாட்டுத் துறையிலும் வல்லரசுகள்போல நாம் சாதனை படைத்தாக வேண்டும் என்கிற முனைப்பு காட்டப்பட்டது என்பதுதான் உண்மை.
- ‘இலக்கு ஒலிம்பிக் பதக்க மேடைத் திட்டம்’ இந்திய விளையாட்டு ஆணையத்தால் முன்னெடுக்கப்படுகிறது. திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு அவா்களுக்கு நிதியுதவியும், பயிற்சியும் அளிக்கப்படுகிறது. சா்வதேச அளவிலான பயிற்சியாளா்களின் மேற்பாா்வையில் அவா்கள் ஒப்படைக்கப்படுகிறார்கள். மேலை நாடுகளைப்போல, விளையாட்டு வீரா்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளித்து சா்வதேச விளையாட்டு அரங்குகளில் பதக்கங்களைக் குவிப்பதில் முனைப்புக் காட்டப்படுகிறது. மாநில அரசுகளின் பங்களிப்பையும் குறைத்து மதிப்பிடக் கூடாது.
- முந்தைய டோக்கியோ ஒலிம்பிக்ஸ், 2022 காமன்வெல்த் போட்டிகள், சில மாதங்களுக்கு முன்னா் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் தொடங்கிய முனைப்பின் விளைவுதான், இப்போதைய ஹாங்ஸௌ ஆசிய விளையாட்டுப் போட்டியின் வெற்றிகள் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மூன்றிலக்கப் பதக்க சாதனையுடன் இந்திய விளையாட்டு வீரா்கள் அடுத்த பத்து மாதங்களில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
- விண்வெளியில் சாதனைகள் படைப்பது போலவே, சா்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா சாதனை படைக்கத் தொடங்கியிருக்கும் பெருமிதத் தருணம் இது!
நன்றி: தினமணி (17 - 10 – 2023)