TNPSC Thervupettagam

புதிய ஒளி... புதிய காற்று...!

August 27 , 2020 1605 days 775 0
  • அனல் மின் நிலையங்களின் காலம் விரைவிலேயே முடிவுக்கு வரும் என்கிற நிலைமை உருவாகி வருகிறது. அனல் மின் நிலையங்களை, சோலார், காற்றாலை, புனல், அணு, பயோமாஸ் ஆகிய மாற்று எரிசக்திகள் அடுத்த சில ஆண்டுகளில் தேவையற்றதாக மாற்றிவிடும் சூழல் உருவாகியிருக்கிறது.
  • இந்தியாவின் மின்சக்தித் தேவையில் 80%-ஐ அனல் மின் நிலையங்களின் மூலம்தான் நாம் இப்போது பெற்று வருகிறோம். நமது அனல் மின் நிலைய நிலக்கரித் தேவைக்காக அவ்வப்போது நிலக்கரியை இறக்குமதியும் செய்கின்றன.
  • நிலக்கரிச் சுரங்கங்களில் அந்நிய முதலீடும் தனியார்மயமும் அறிமுகப்படுத்தப்பட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஊக்குவித்திருக்கிறது.
  • இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மாற்று எரிசக்தி மூலம் பெறும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு அனல் மின்சாரத்தைவிட குறைந்துவரும் நிலையில், நிலக்கரியின் தேவையில்லாத நிலைமை ஏற்படக்கூடும்.

சூரிய ஒளி மின்சாரம்

  • இந்தியாவின் 62% அனல் மின் நிலையங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைவிட குறைந்த செலவில் சோலார் மூலமும் காற்றாலை மூலமும் மின்சாரம் இப்போது உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
  • காற்றாலை மின்சாரமும், சோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரமும் அனல் மின்சாரத்தின் மொத்த விற்பனை விலையைவிட 20% குறைவாக இருக்கிறது என்கிற வியப்பளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.
  • கடந்த ஓராண்டில் மின்சாரத்துக்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில், இந்தியாவின் 65% அனல் மின்சாரம் மாற்று எரிசக்திகளைவிட அதிக விலை கோரப்பட்டிருந்தது.
  • கடந்த சில ஆண்டுகளாக மாற்று எரிசக்தியின் விலை பாதிக்குப் பாதியாகக் குறைந்ததும், நிலக்கரியின் விலை கடுமையாக அதிகரித்ததும் அதற்கு காரணங்களாகக் கூறப்படுகிறது.
  • நிலக்கரியின் விலையைக் குறைத்து மாற்று எரிசக்தியுடன் அனல் மின் நிலையங்கள் போட்டி போடுவதற்காகத்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் அந்நிய முதலீட்டுக்கும் தனியார்மயத்துக்கும் வழிகோலப்பட்டிருக்கிறது.
  • சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, சூரிய ஒளி மின்சாரத்தின் உற்பத்திச் செலவு யூனிட் ஒன்றுக்கு சுமார் ரூ.2.5 என்று சொன்னால், அனல் மின் நிலையங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.5.
  • இரவு நேரத்தில் உற்பத்தியான சூரிய ஒளி மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கு விலை உயா்ந்த பேட்டரிகள் தேவைப்படுகின்றன. அப்படியிருந்தும்கூட, கடந்த எட்டு மாதங்களில் மின்சாரத்துக்காக நடத்தப்பட்ட பல ஏலங்களில் அனல் மின்சாரத்தைவிட சூரிய ஒளி மின்சாரத்தை குறைந்த விலையில் வழங்க அதன் தயாரிப்பாளா்கள் முன்வந்திருக்கிறார்கள் என்பது சூற்றுச்சூழல் ஆா்வலா்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
  • அனல் மின் நிலையங்கள் வெளியேற்றும் கரியமில வாயுவால் ஏற்படுத்தப்படும் காற்றுமாசுதான் இந்தியாவின் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.
  • முன்பே குறிப்பிட்டதுபோல, இந்தியாவின் 80% மின்சாரத் தேவையை இதுவரை அனல் மின் நிலையங்கள்தான் ஈடுகட்டி வந்தன. அதற்கு மாற்று ஏற்படுத்த வேண்டும் என்கிற முயற்சி இப்போது கைகூடி வந்திருக்கிறது.
  • சூரிய மின்சக்தி, அனல் மின்சக்தி இரண்டுக்குமான உற்பத்திச் செலவு குறித்து ஆய்வொன்று நடத்தப்பட்டது. அதன்படி, ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தியின் யூனிட் ஒன்றின் விலை ரூ.2.62 என்றும், அதே அளவிலான அனல் மின்சாரத்தின் விலை ரூ.3.5 என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, அனல் மின்சாரத்தைவிட சூரிய ஒளி மின்சாரம் 14% விலை குறைவு.
  • அதேபோல, இந்தியாவில் காற்றாலை மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.3.36. இப்போதைய நிலையில் அனல் மின்சாரத்தைவிட காற்றாலை மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்தாலும்கூட, அதன் தயாரிப்புச் செலவும் சூரிய ஒளி மின்சாரத்தைப்போல விரைவிலேயே படிப்படியாகக் குறைந்து காற்றாலை மின்சாரமும் அனல் மின்சாரத்தை ஓரங்கட்டும் என்பது உறுதி.
  • மத்திய அரசும் மாற்று எரிசக்தி உற்பத்திக்கு அதிக அளவில் மானியம் வழங்க முன்வந்திருப்பது வரவேற்புக்குரியது.

சூரிய ஒளி மின்சாரத்தின் முக்கியத்துவம்

  • கடந்த ஐந்தாண்டுகளில் காற்றுமாசு ஏற்படுத்தாத மாற்று எரிசக்தித் துறையில் மட்டும் 6.1 பில்லியன் டாலா் (சுமார் ரூ.46,000 கோடி) அளவிலான அந்நிய நேரடி முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
  • 2022-இல் 20 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2018-லேயே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
  • இந்தியாவின் அனல் மின் நிலையத் துறை இன்றைய நிலையில் வங்கிகளுக்குத் தர வேண்டிய வாராக்கடன் தொகை ரூ.40 முதல் 60 பில்லியன் டாலா்.
  • வங்கிகளுக்கு மிகப் பெரிய சுமையாக அனல் மின் நிலையங்களின் வாராக்கடன் மாறியிருப்பது மட்டுமல்ல, அதனால் மாற்று எரிசக்தித் திட்டங்களுக்கு உதவ முடியாத நிலைக்கும் வங்கிகள் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • இந்தச் சூழலில் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் அனல் மின் நிலையங்களை மேலும் ஊக்குவிப்பதோ, அவற்றில் முதலீடு செய்வதோ விரயமாகத்தான் இருக்கும்.
  • காற்றுமாசை ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்களுக்கும் சூழலியலை பாதிக்கும் நீா் மின் நிலையங்களுக்கும் மனித இனத்துக்கே ஆபத்தாக மாறக்கூடிய அணு மின் நிலையங்களுக்கும் விடை கொடுத்து இயற்கை இந்தியாவுக்கு தாராளமாக வழங்கியிருக்கின்ற சூரிய ஒளி மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் நமது தேவையை ஈடுகட்டும் நிலைமை ஏற்படுமானால், அதுதான் இந்தியாவின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும்.

நன்றி: தினமணி (27-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்