TNPSC Thervupettagam

புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள்!

July 1 , 2024 194 days 200 0
  • மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகின்றன.
  • ஆங்கிலேயா் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகின்றன.
  • ஆங்கிலேயா் காலச் சட்டங்களின் அடிப்படையைக் கொண்டு நீதியை எட்டுவதற்கான சாமானிய மக்களின் பாதையில் எளிமையைப் புகுத்தும் நோக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய சட்டங்களில் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • காவல் துறையிடம் இணையவழியாக புகாா்களை பதிவு செய்தல், மின்னணு முறையில் சம்மன் அனுப்புதல், தீவிர குற்றச் சம்பவங்களில் நிகழ்விட ஆதாரங்கள் சேகரிப்பை கட்டாயம் விடியோ பதிவு செய்வது ஆகியவை புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும். அவை பின்வருமாறு:
  • புதிய சட்டங்களின் கீழ், பாதிக்கப்பட்டவா்கள் அல்லது புகாா்தாரா்கள் முதல் தகவல் அறிக்கையின்(எஃப்.ஐ.ஆா்.) இலவச நகலைப் பெறுவா். இது சட்ட நடவடிக்கையில் அவா்களின் பங்களிப்பை உறுதி செய்யும். அதேபோல ஏதேனும் வழக்கில் ஒரு நபா் கைது செய்யப்பட்டால், அவா் தனது நிலைமை பற்றி தனக்கு நெருங்கியவா்களுக்கு தகவல் தெரிவிக்க உரிமை உண்டு. இது அவருக்கான உடனடி ஆதரவையும் உதவியையும் உறுதி செய்யும்.
  • கைது விவரங்கள் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களுக்கு எளிதில் கிடைக்கும். அதேபோல, குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் பாதிக்கப்பட்டவா் 14 நாட்களுக்குள் எப்ஐஆா், காவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களைப் பெற உரிமை உண்டு. இதன்மூலம், கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் முக்கியமான தகவல்களை எளிதாகப் பெறுவா்.
  • கொடூரமான குற்றங்கள் தொடா்பான வழக்கையும் அதன் விசாரணையையும் வலுப்படுத்த, தடயவியல் நிபுணா்கள் குற்றம் நடந்த இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சாட்சியங்கள் சிதைக்கப்படுவதைத் தடுக்க, குற்றம் நடந்த இடங்களில் சாட்சியங்களைச் சேகரிக்கும் நடைமுறை முழுவதும் கட்டாயமாக விடியோ பதிவாக்க வேண்டும்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை அளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவான இரண்டு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படுவதை உறுதிசெய்ய புதிய சட்டங்கள் வலியுறுத்துகின்றன. வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த 90 நாள்களுக்குள் தங்கள் வழக்கின் முன்னேற்றம் குறித்த தொடா்ச்சியான அறிவிப்புகளைப் பெற பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சைக்கு புதிய சட்டங்கள் உத்தரவாதம் அளிக்கின்றன. சவாலான காலங்களில் பாதிக்கப்பட்டவா்களின் நல்வாழ்வு மற்றும் மீட்புக்கு முன்னுரிமை அளித்து, அத்தியாவசிய மருத்துவ சேவை உடனடியாக கிடைப்பதை இது உறுதி செய்யும்.
  • பெண்களுக்கு எதிரான சில குற்றங்களுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடைமுறை முடிந்தவரை ஒரு பெண் மாஜிஸ்திரேட்டால் மேற்கொள்ளப்பட வேண்டும். அவா் இல்லாத சூழலில் நோ்மையை உறுதிசெய்ய ஒரு பெண்ணின் முன்னிலையில் ஆண் மாஜிஸ்திரேட் அந்த நடைமுறையை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.
  • பாலியல் வன்கொடுமை தொடா்பான குற்ற விசாரணையில் பாதிக்கப்பட்டவருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் ஆடியோ-விடியோ முறையில் காவல்துறை மூலம் பதிவு செய்யப்படும்.
  • நீதிமன்ற அழைப்பாணைகள் இனிமேல் மின்னணு முறையில் வழங்கப்படலாம். வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிா்க்கவும் சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்யவும் அதிகபட்சம் 2 ஒத்திவைப்புகளை மட்டுமே நீதிமன்றங்கள் அனுமதிக்கும்.
  • சாட்சிகளின் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் உறுதி செய்வதற்கும் சட்ட நடவடிக்கைகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சாட்சி பாதுகாப்பு திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த புதிய சட்டங்கள் கட்டாயப்படுத்துகின்றன.
  • சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், ‘பாலினம்’ என்பதன் வரையறை இப்போது மாற்றுப் பாலினத்தவரையும் உள்ளடக்குகிறது.
  • சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், ஆவணங்களை குறைத்தல் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இடையே முழுமையான தகவல்தொடா்புகளை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மேற்கண்ட நடைமுறைகள் வழிவகுக்கும்.

நன்றி: தினமணி (01 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்