TNPSC Thervupettagam

புதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா?

January 14 , 2021 1292 days 584 0
  • நாடாளுமன்ற வளாக கமிட்டி, பாரம்பரியப் பாதுகாப்பு கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் வழங்கிய அனுமதிகளில் பிரச்சினை ஏதும் இல்லை என்று நீதிபதிகள் கான்வில்கரும் தினேஷ் மகேஷ்வரியும் கருதினார்கள்.
  • நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்ற விஷயங்களில் ஒத்துப்போனாலும் இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் பொதுமக்கள் பங்கேற்பு இல்லை என்பதில் மட்டும் கருத்து வேறுபாடு தெரிவித்தார். மக்கள் சார்பில் திட்டங்கள் தீட்டுவதற்கு அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்றாலும் பொறுப்புத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு நீதித் துறையின் சீராய்வு தேவை.
  • ஒட்டுமொத்தக் கட்டுமானச் செலவு எவ்வளவு இருக்கும் என்று இன்னும் துல்லியமாகக் கூற முடியாது என்றாலும் ரூ.13,450 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மத்திய தலைமைச் செயலகம், துணைக் குடியரசுத் தலைவர் வளாகம், பிரதமர் இல்லம், ரூ.971 கோடி செலவிலான புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் கட்டப்படவிருக்கின்றன.
  • நாடு முழுவதும் இதைப் பற்றி ஒருமித்த கருத்து இருந்திருந்தால் 2022-ல் நாம் கொண்டாடவிருக்கும் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டின் சிகர சாதனை போல இருந்திருக்கும். ஆனால், முன்னுதாரணமற்ற வகையில் கரோனா பெருந்தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் என்று நாடே முடங்கிக்கிடக்கும்போது இது தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பொதுநலனுக்குத் தன் கவனத்தை முழுதாக அரசு செலுத்த வேண்டிய நேரத்தில் இது ஆடம்பரமாகவே மக்களால் பார்க்கப்படும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
  • நீதிபதி கன்னா சுட்டிக்காட்டியபடி, ஒரு திட்டத்தை மக்கள் மதிப்பிடுவதற்கு ஏற்ற வகையில் அவர்களின் கருத்துகளை அறிதல் என்பது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியம். இதற்கு அவர்களுக்கு அந்தத் திட்டத்தைப் பற்றிய முறையான தகவல்கள் கிடைக்கப்பெற வேண்டும், போதுமான நேரமும் வேண்டும். அவர்களின் பார்வையானது இறுதி முடிவில் பிரதிபலிக்க வேண்டும்.
  • பொதுமக்களின் கருத்தறிதல் என்ற கூறு ஏற்கெனவே சட்டங்களில் இருக்கிறது; குறிப்பாக டெல்லி மேம்பாட்டுச் சட்டத்தில் இருக்கிறது. இது ஒரு திட்டத்தின் அமலாக்கத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. ஆகவே, புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டுவதில் தேவையற்ற அவசரமும் பதற்றமும் காட்டுவதைத் தவிர்த்துவிட்டு, ஒன்றிய அரசானது பொதுமக்களின் கருத்துகளை அறிந்து, கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் பணிகளைத் தொடங்க வேண்டும்.
  • 2022-க்கு முன்பாக எல்லா குடிமக்களுக்கும் ஆரோக்கியத்தை உறுதிசெய்வது, கல்விக்குப் புத்துயிர் கொடுப்பது, வலுவான நல்வாழ்வை வழங்குவது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போன்ற விஷயங்களில் எழும் சவால்களை எதிர்த்து ஒன்றிய அரசு போராடிவரும் நிலையில், புதிய நாடாளுமன்ற வளாகம் போன்ற விஷயம் முன்னுரிமையற்ற ஒன்றாகவே கருதப்பட வேண்டும்.

நன்றி: தி இந்து (14 – 01 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்