TNPSC Thervupettagam

புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா

June 1 , 2023 543 days 315 0
  • புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் வாயில்கள் மே 28 அன்று திறக்கப்பட்டன. அதற்கு முன்னரே அந்தக் கட்டிடம் சர்ச்சைகளால் நிறைந்திருந்தது. நமது அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தலைவர், குடியரசுத் தலைவர் ஆவார். அவருக்கு அழைப்பில்லை. துணைக் குடியரசுத் தலைவர் என்பவர் மேலவைத் தலைவர் ஆவார். அவருக்கும் அழைப்பில்லை.
  • ஆகவே, 21 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவைப் புறக்கணித்தன. அடுத்தது செங்கோலின் கதை. சில ஆண்டுகளுக்கு முன்பு அதை வாட்ஸப் பண்டிதர்கள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. பண்டிதர்கள் வரலாற்றுப் புனைக் கதையும் எழுதுவார்கள்.
  • செங்கோல் கதையில் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக அவர்கள் மவுண்ட்பேட்டனையும் ராஜாஜியையும் கதாபாத்திரங்களாகச் சேர்த்துக்கொண்டனர். இப்போது ஒன்றிய அரசின் ஊடகத் துறை (PIB) இந்தக் கதையை ஓர் ஆவணப்படமாக்கி வலையேற்றிவிட்டது. அதாவது ஒரு வாட்ஸப் கதை வரலாறாக நிலைபெற்றுவிட்டது.
  • அடுத்த சர்ச்சை மதச்சார்பின்மை பற்றியது. சைவ ஆதீன மடாதிபதிகள் செங்கோல் வழங்க, அந்தணர்கள் ஆகுதி வளர்த்து வேத பாராயணம் முழக்க, நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நமது அரசமைப்புச் சட்டத்தின் ஆதார சுருதியான மதச்சார்பின்மைக்கு இது எதிரானது இல்லையா என்பது விமர்சகர்களின் கேள்வி. அடுத்த சர்ச்சை, சாவர்க்கர் பிறந்த நாளில் இந்தக் கட்டிடம் திறக்கப்பட்டது. இது எதேச்சையானது அல்ல என்பது விமர்சகர்களின் குற்றச்சாட்டு.
  • எனில், இந்தக் களேபரத்தில் ஒரு முக்கியமான அம்சம் விமர்சகர்களால் அதிகம் கண்டு கொள்ளப் படவில்லை. அது புதிய நாடாளுமன்றம் அளவில் பெரியது. கீழவையில் 888 இடங்கள் இருக்கும் (இப்போது 534). மேலவையில் 384 இடங்கள் (இப்போது 250). இரண்டு அவைகளும் இப்போதைய அவைகளின் பரப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.
  • மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவையில் கூடுதல் உறுப்பினர்கள் இருப்பது நல்லது தானே? நிச்சயமாக. ஆனால், இந்தக் கூடுதல் பிரதிநிதித்துவம் வட மாநிலங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துபோகும் என்றும் ஓர் அச்சம் நிலவுகிறது. நாம் சற்றுப் பின்னாலிருந்து தொடங்கலாம்.
  • நமது அரசமைப்புச் சட்டத்தின் 81ஆவது கூறு, ஒவ்வொரு மாநிலமும் அதனதன் மக்கள் தொகையின் வீதத்தில் நாடாளுமன்ற இடங்களைப் பெறும் என்கிறது. 1962 பொதுத் தேர்தலில் 1951 மக்கள்தொகை கணக்கீட்டின்படி நாடாளுமன்ற இடங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு 41 இடங்களைப் பெற்றது. 1967 பொதுத் தேர்தலில் 1961 மக்கள்தொகை கணக்கீடு பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை 39ஆகக் குறைந்தது. 1971 தேர்தலிலும் அதுவே நீடித்தது.
  • 1976 நெருக்கடிநிலை காலகட்டத்தில் இந்திரா காந்தியின் அரசு 42ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்தது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு (அதாவது 2001 வரை) மாற்றப்படாமல் இருக்கும். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதுதான் நோக்கம். 2002இல் வாஜ்பாய் அரசும் இன்னொரு திருத்தத்தின் வாயிலாக இந்தக் கால அவகாசத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு (2026 வரை) நீட்டித்தது. 2026க்குப் பிறகு இந்தச் சட்டம் மீண்டும் திருத்தப் படாவிட்டால் என்ன ஆகும்?

தெற்கு தேய்ந்துவிடும்!

  • இதற்கு அலிஸ்டர் மாக்மில்லன் எனும் அரசியல் விஞ்ஞானி பதில் சொல்கிறார். 2001 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி நாடாளுமன்ற இடங்கள் ஒதுக்கப்பட்டால், தமிழ்நாடு ஏழு இடங்களை இழக்கும், உத்தர பிரதேசம் மேலதிகமாக எட்டு இடங்களைப் பெறும். 
  • தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, ஆகிய ஐந்து தென் மாநிலங்கள் கூட்டாக 18 இடங்களை இழக்கும். உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய இந்தி பேசும் மாநிலங்கள் 22 கூடுதல் இடங்களைப் பெறும். இது 2001 கணக்கு. 
  • இதில் 2021இன் கணக்கெடுப்பு இன்னும் நடக்கவில்லை. அதன்படி தென் மாநில இருக்கைகள் இப்போதைய 24%இலிருந்து 19%ஆகக் குறைந்துபோகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது; இந்தி பேசும் மாநில இருக்கைகள் இப்போதைய 40%லிருந்து 46%ஆக உயரும். தெற்கு செல்வாக்கை இழக்கும். இந்தி பேசும் மாநிலங்களில் வெற்றிபெறும் பெரிய கட்சி தென் மாநிலங்களின் உதவியின்றி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும்.

மூன்று ஆலோசனைகள்

  • இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கல்விப்புலத்தில் இயங்கும் ஆய்வாளர்கள் அவ்வப்போது பேசிவருகிறார்கள். அவற்றுள் மூன்று கருத்துகள் முக்கியமானவை.
  • முதலாவது, அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இடங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பது. இப்போதையத் தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை பெருமளவில் வேறுபடுகிறது. ஒரு தமிழ்நாட்டு உறுப்பினர் சராசரியாக 18 லட்சம் மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். அதேவேளையில் ஒரு உத்தர பிரதேச உறுப்பினர் 25 லட்சம் மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். இதைச் சமன்படுத்த வேண்டும் என்கிறார்கள் முதல் பிரிவினர். நியாயம் தான்! அப்படிச் செய்தால் தென் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் சக்தி இழக்குமே, அதற்கு என்ன மாற்று, என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. 
  • இரண்டாவது, உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டிவிடலாம் என்பது. கேரளத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 20. இதை நிலைநிறுத்திக்கொண்டு, அந்த விகிதித்தில் மற்ற மாநிலங்களின் உறுப்பினர்களை நிர்ணயிக்க வேண்டும் என்பது மாக்மில்லன் போன்றவர்கள் வழங்கும் ஆலோசனை. இதன்படி தமிழ்நாடு 49 உறுப்பினர்களைப் பெறும் (இப்போது 39). உத்தர பிரதேசம் 143 உறுப்பினர்களைப் பெறும் (இப்போது 80). அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 848ஆக உயரும். (இது புதிய நாடாளுமன்றத்தின் 888 இடங்களுக்கு நெருக்கமாக இருப்பதைக் கவனிக்கலாம்). இதன்படி தமிழ்நாடு உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும். ஆனால், அவையில் அதன் விகிதம் இப்போதைய 7.2%லிருந்து (39 / 543) 5.8%ஆகக் (49 / 848) குறைந்துவிடும். மாறாக உத்தர பிரதேச உறுப்பினர்களின் வீதம் 14.7%லிருந்து 16.9%ஆக உயர்ந்துவிடும். இந்தத் திட்டத்தின் கீழும் தென் மாநில இருக்கைகள் 19%ஆகவும் இந்தி மாநில இருக்கைகள் 46%ஆகவும் இருக்கும். இந்த ஆலோசனையும் தென் மாநிலங்களுக்கு உகந்ததாக இராது.
  • மூன்றாவது, மக்களவையின் இடங்களை மக்கள்தொகை அடிப்படையில் மாற்றிவிட்டு, மாநிலங்களவையில் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவிலான இடங்களை நிர்ணயித்துவிடலாம் என்பது. இதிலும் மக்களவையில் தென் மாநிலங்கள் இழக்க நேரும்; மேலும், அந்த இழப்பு மாநிலங்களவையில் ஈடுகட்டப்படாது.
  • இந்தியாவின் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வாக்குதான். இதனால் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் போன்ற பெரிய, வளமான, அதிக வரி வருவாய் ஈட்டுகிற மாநிலங்களால் தங்களது சக்திக்கு ஏற்ற குரலைக் கவுன்சில் கூட்டங்களில் எழுப்ப முடிவதில்லை. ஆகவே, இந்த மூன்றாவது ஆலோசனையும் தென் மாநிலங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது.

எண்களும் மனிதமும்

  • இதுபோன்ற ஆலோசனைகள் இந்தப் பிரச்சினையை கணக்குகளாக மட்டும் பார்க்கின்றன. இது மனிதர்களின் பிரச்சினை. தென் மாநிலங்களால் எப்படி மக்கள்தொகையைக் கட்டுப் படுத்த முடிந்தது?
  • ஒரு பெண் சராசரியாகப் பிரசவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, கருவள விகிதம் எனப்படுகிறது. இந்த விகிதம் 2.1ஆக இருந்தால் அது பதிலீட்டு விகிதம் எனப்படும். அதாவது, ஒரு பெண் சராசரியாக 2.1 குழந்தைகளை ஈன்றால் அந்தச் சமூகத்தில் மக்கள்தொகை நிலையாக இருக்கும். தமிழ்நாட்டில் கருவள விகிதம் 1981இல் 3.4ஆக இருந்தது, இது பதிலீட்டு விகிதத்தைவிட அதிகம்; 2017இல் இது 1.6 (Census Report 2018) ஆகிவிட்டது, அதாவது பதிலீட்டு விகிதத்தைவிடக் குறைந்துவிட்டது.
  • இதே காலகட்டத்தில் பிஹாரின் கருவள விகிதம் 5.7 என்பதிலிருந்து 3.2 ஆகியிருக்கிறது. இந்த அறிக்கையின் படி எல்லாத் தென் மாநிலங்களின் கருவள விகிதமும் பதிலீட்டு விகிதத்தைவிடக் குறைவாகவும், உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ஜார்கண்ட் முதலான வட மாநிலங்களின் கருவள விகிதம் பதிலீட்டு விகிதத்தைவிட அதிகமாகவும் இருக்கிறது.
  • மருத்துவ வசதிகள் மக்களின் கையெட்டும் தூரத்தில் இருந்தால் அது மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு உதவும். இதை இன்னொரு அலகால் மதிப்பிடலாம் - சிசு மரண விகிதம் (IMR). உத்தர பிரதேசத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 43 குழந்தைகள் முதல் பிறந்த நாளைக் காண்பதில்லை. இந்த விகிதம் தமிழ்நாட்டில் 15, கேரளத்தில் 7. கேரள விகிதத்தை அமெரிக்காவுடனும், தமிழ்நாட்டு விகிதத்தை எகிப்துடனும், உத்தர பிரதேச விகிதத்தை ஆப்கானிஸ்தானுடனும் ஒப்பிடலாம். 
  • மக்கள்தொகையைப் பரப்புரையால் மட்டும் கட்டுப்படுத்திவிட முடியாது. சிறிய குடும்பங்கள் உருவாக, அது கல்வியில் சிறந்த சமூகமாக இருக்க வேண்டும். பெண்கள் கல்வியிலும் உழைப்பிலும் உற்பத்தியிலும் பங்கெடுக்க வேண்டும். அப்போது மக்கள்தொகைப் பெருக்கம் மட்டுப்படுவது மட்டுமல்ல, தொழில் பெருகும், பொருளாதாரம் வளரும், வரி வருவாய் கூடும். தமிழ்நாட்டில் அதுதான் நடக்கிறது.

சமன் செய்யாத கோல்

  • இந்தியாவின் 5.96% மக்களைக் கொண்டுள்ள தமிழ்நாடால் நாட்டின் மொத்த உற்பத்தியில் 9% பங்களிக்க முடிகிறது. நாட்டின் 16.51% மக்களைக் கொண்டிருக்கும் உத்தர பிரதேசமும் அதே அளவுக்குத்தான் பங்களிக்கிறது. ஆனால் வரி வருவாயில் தமிழகத்திற்கு 4% வழங்கும் ஒன்றிய அரசு, உத்தர பிரதேசத்துக்கு 18% வழங்குகிறது. இது 15வது நிதிக்குழுவின் (XVFC) பங்கீடு. இதன்படி ஒன்றியம் வழங்கும் மொத்த  நிதியிலிருந்து பீகார் 10% பெறும். கர்நாடகமும் கேரளமும் முறையே 3.7%, 1.9% நிதியோடு திருப்தியடைய வேண்டும்.
  • தமிழ்நாடு வரி வருவாயாக ஒன்றியத்துக்குச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் 29 காசுகளே திரும்பப் பெறுகிறது. அதேவேளையில் உத்தர பிரதேசம், தான் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ 2.73 பெறுகிறது. பிஹாரோ ரூ.7.06 பெறுகிறது.
  • நமது மாநிலங்கள் ஒன்றியத்தின் பங்கீட்டை நம்பியே இருக்கின்றன. ஏனெனில், மாநிலங்களின் நிதி வருவாய் சுருங்கிவிட்டது. அது பிராதானமாக மூன்று வழிகளில் மட்டுமே கிடைக்கிறது. அவை: பத்திரப் பதிவு, மது விற்பனை, பெட்ரோல் வரி ஆகியன. மற்றைய வரிகளெல்லாம் ஒன்றியத்துக்குச் செல்கின்றன. ஒன்றியம் பங்கு வைக்கிறது. அதில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய, கல்வியிலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன.

என்ன செய்யலாம்?

  • தென் மாநிலங்கள் ஏன் நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று விரும்புகின்றன? ஏனெனில், நமது அமைப்பில் ஒன்றியத்திடம்தான் அதிகாரமும் நிதியும் குவிந்து கிடக்கிறது. அதைப் பரவலாக்கிவிட்டால் இந்தக் கோரிக்கை இராது. மாநில அரசுதான் மக்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லக் கடமைப்பட்டது. நிதி நிர்வாகம் மாநில அரசுகளின் கைகளில் இருந்தால்தான் தங்களது தேவைக்கேற்ற விதத்தில் அவற்றால் திட்டமிட முடியும்.
  • அமெரிக்கா போன்ற வளர்ந்த ஜனநாயகங்களில் பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், குடிவரவு முதலான துறைகள் மட்டுமே ஒன்றிய அரசின் கைகளில் இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஒன்றிய அரசும் அரசும் மாநில அரசுகளும் ஊராட்சிகளும் தனித்தனியாக வரி வசூலித்துக்கொள்ளும்.
  • ஹாங்காங் இன்னொரு எடுத்துக்காட்டு. ஹாங்காங் சீனாவின் ஒரு மாநிலம்தான். ஆனால், ஒரு தேசம் ஈராட்சி (One Country Two Systems) எனும் முறையின் கீழ் தன்னாட்சியுடன் இயங்கும் மாநிலம். ஹாங்காங்கின் அரசமைப்புச் சட்டம் தனியானது (Basic Law). நாணயம், குடிவரவு போன்றவைகூட ஹாங்காங் அரசின்கீழ்தான் வரும். கட்டற்ற வணிக மையமான ஹாங்காங்கின் தனித்துவம் அதன் தன்னாட்சித் தத்துவத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது.
  • எனில், ஹாங்காங் உதாரணமோ அமெரிக்க உதாரணமோ நாம் முழுமையாகப் பின்பற்றத்தக்கதல்ல. நமக்கு ஏற்ற தன்னாட்சி வடிவத்தை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இப்படிச் சொல்வது பிரிவினை ஆகாது. அண்ணா மாநிலங்களவையில் இப்படிப் பேசினார்: “நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். இதனால் நான் ஒரு வங்காளிக்கோ, ஒரு மராட்டியருக்கோ, ஒரு குஜராத்திக்கோ எதிரானவன் அல்லன்.”
  • பல்லாற்றானும் வளர்ந்து நிற்கிற தென் மாநிலங்கள் தங்களது நிதியையும் கல்வியையும் மருத்துவத்தையும் தாங்களே நிர்வகித்துக்கொள்வதுதான் முறையாக இருக்கும். அந்தச் சூழலில் மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இடங்கள் வழங்கப்பட்டால், அது தென் மாநிலங்களுக்கு பெரிய இழப்பாக இருக்காது. ஆனால், இப்போதைய ஒன்றிய அரசு ஒரே இந்தியா என்கிற சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால், இந்த இந்தியாவுக்குள் ஆப்கானிஸ்தானும் இருக்கிறது, அமெரிக்காவும் இருக்கிறது. இரண்டுக்கும் ஒரே திட்டத்தைச் செயல்படுத்துவது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதைக் காலம் நிரூபிக்கும்.
  • மாநிலங்கள் தன்னாட்சி பெறுகிறவரை, நாடாளுமன்றம் இப்போதைய இடப் பகிர்வின் அடிப்படையிலேயே இயங்க வேண்டும். அதுதான் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நீதியாக இருக்கும். அதற்காகச் சட்டம் திருத்தப்பட வேண்டும். தென்னிந்தியாவின் எல்லா அரசியல் இயக்கங்களும், மக்களும் அதற்காக ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். 

நன்றி: அருஞ்சொல் (01 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்