- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக "தடகளத் தாரகை' பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தாவிட்டால், இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தகுதி நீக்கம் செய்யப்போவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இறுதி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. இல்லையென்றால், முன்புபோல கோஷ்டிப் பூசல்களால் தேர்தல் தள்ளிப் போடப்பட்டு பழைய நிலைமையே தொடர்ந்திருக்கும்.
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு, பழைய நிலைமையிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. முந்தைய நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர்கூட புதிய குழுவில் இல்லை. நிர்வாகக் குழுவில் பாதிக்குப்பாதி உறுப்பினர்கள் விளையாட்டு வீரர்கள்.
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 15 உறுப்பினர்கள் கொண்ட சிறப்புக் குழுவில் (பேனல்) ஆறு முன்னாள் வீரர், வீராங்கனைகள் இடம் பெறுகிறார்கள். ஒலிம்பிக் பதக்கம் பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் - துணைத் தலைவர்; அகில இந்திய கால்பந்து சங்கத் தலைவர் கல்யாண் செளபே - இணைச் செயலாளர்; யோகேஷ்வர் தத், டோலா பானர்ஜி, மேரி கோம், சரத் கமல் ஆகியோர் உறுப்பினர்கள். அதனால் சிறப்புக் குழுவிலும் விளையாட்டு வீரர்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கும்.
- 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, பல ஆண்டுகளாக ஏதாவது ஒரு வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருந்த பலர் அகற்றி நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நுழைந்து சங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு ஆரம்பத்திலேயே முறியடிக்கப்பட்டிருக்கிறது.
- இந்திய ஒலிம்பிக் சங்கம் என்பது ஒலிம்பிக், ஆசியான், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் எல்லா விளையாட்டுகளின் சங்கங்களையும் தன்னுள் அடக்கிய மிகப் பெரிய அமைப்பு. விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதுடன் எல்லா விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் பெரும் பொறுப்பு அந்த சங்கத்திற்கு உண்டு. அப்படிப்பட்ட சங்கத்தின் தலைவராக, முதன்முறையாக விளையாட்டு வீராங்கனை ஒருவர் பொறுப்பேற்றார் என்பது வரலாற்று நிகழ்வு.
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 95 வருட வரலாற்றில் முதன்முறையாக, ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கேற்ற ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். நான்கு ஆசிய விளையாட்டு போட்டி சாம்பியனான பி.டி. உஷா, மாநிலங்களவை உறுப்பினரும்கூட என்பதால், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தேவைகளை நாடாளுமன்றத்தில் உரக்க ஒலித்து அந்த அமைப்பை வலுப்படுத்த முடியும்.
- விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் விளையாட்டு சங்கங்களில் முடிவு எடுக்கும் பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்பது நீண்ட நாள்களாக உச்சநீதிமன்றம் வலியுறுத்திவந்த கருத்து. தேசிய விளையாட்டு விதிகள், சர்வதேச ஒலிம்பிக் சங்க விதிகள் ஆகியவையும் விளையாட்டு வீரர்களின் கட்டுப்பாட்டில்தான் சங்கங்களின் நிர்வாகம் நடைபெற வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கின்றன.
- உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி நாகேஸ்வர ராவின் தலைமையில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்தியாவின் விளையாட்டு சங்கங்களை நடத்தும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய விதிமுறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்கி தேர்தலுக்கு வழிகோலினார் அவர். எதிர்ப்பாளர்கள் யாரும் இல்லாமல் ஒருமனதாக பி.டி. உஷா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், அந்த அமைப்பில் காணப்பட்ட கோஷ்டி மனப்பான்மை இனிமேல் இருக்காது எனலாம்.
- 77 உறுப்பினர்கள் கொண்ட இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் 25% பேர் முன்னாள் விளையாட்டு வீரர்கள். அவர்களில் ஆண்களைவிட (38), பெண்கள் (39) அதிகம். பி.டி. உஷா உள்ளிட்ட தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் எட்டு பேர் அதில் காணப்படுவது இன்னோர் ஆரோக்கியமான மாற்றம். சில மாதங்களுக்கு முன்னர் அகில இந்திய கால்பந்து சங்கத் தலைவராக கல்யாண் செளபேவும், ஹாக்கி இந்தியா அமைப்பிற்கு திலீப் திர்கேயும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா தேர்வு செய்யப்பட்டிருப்பதால், புதிய பரிமாணத்தை நோக்கி இந்தியா பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.
- பதவியுடன் பொறுப்பும் வரும் என்பதை பி.டி. உஷா உணராதவரல்ல. எத்தனையோ தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற அவருக்கு, அவற்றைவிட சவாலாக இந்தப் பொறுப்பு இருக்கக் கூடும்.
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் இயங்கும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள், கோஷ்டி அரசியலாலும், நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாமையாலும் தடுமாறுகின்றன. விளையாட்டு மைதானங்கள் அவற்றின் நோக்கத்தை மறந்து கண்காட்சிகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றன. பொய்யான வயது, ஊக்க மருந்து போன்றவற்றின் பிடியில் பல இளம் விளையாட்டு வீரர்கள் சிக்கியிருக்கிறார்கள். விளையாட்டுப் பதக்கங்கள் மூலம் அரசு நிறுவனங்களில் வேலை பெறுவதற்காக போலிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் மோசடியும் நிலவுகிறது.
- 2024-இல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராக வேண்டும். 2030-இல் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆசைப்படுகிறது. பி.டி. உஷாவும் அவரது குழுவினரும் எல்லா பிரச்னைகளையும் துணிந்து எதிர்கொண்டு அடக்கியாக வேண்டும்.
- "பய்யோளி எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்படும் தடகளத் தாரகை பி.டி. உஷாவின் அடுத்த ஓட்டம், புதியதொரு "டிராக்'கில் தொடங்கியிருக்கிறது!
நன்றி: தினமணி (14 – 12 – 2022)