TNPSC Thervupettagam

புதிய விண்வெளிக் கொள்கை 2023

April 19 , 2023 445 days 262 0
  • இந்தியாவின் ‘புதிய விண்வெளிக் கொள்கை 2023’க்கு பாதுகாப்பு அமைச்சரவைக் குழு ஏப்ரல் 6 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. ‘இந்திய விண்வெளிக் கொள்கை 2023’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் புதிய கொள்கையானது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL), இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஆகிய அமைப்புகளின் பணிகளையும் பொறுப்புகளையும் வரையறுக்கிறது. மேலும், இந்திய விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பை அனுமதிப்பது குறித்தும் பேசுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி

  • 1961இல், அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு விண்வெளி ஆராய்ச்சிக்கும் பயன்பாட்டுக்குமான பொறுப்பை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபாவின் தலைமையில் இயங்கிவந்த அணுசக்தித் துறையிடம் ஒப்படைத்தது; இதைத் தொடர்ந்து தேசிய விண்வெளித் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக, டாக்டர் விக்ரம் சாராபாயைத் தலைவராகக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம் 1962இல் அமைக்கப்பட்டது.
  • இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் ஆலோசனைக் குழுவாக 1969இல் இது மறுநிர்மாணம் செய்யப்பட்ட நிலையில், அதே ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிறுவப்பட்டது. 1972இல் இந்திய அரசு விண்வெளி ஆணையத்தை அமைத்து, விண்வெளித் துறையையும் நிறுவியது. 1972 ஜூன் 1 அன்று இஸ்ரோ விண்வெளித் துறையின்கீழ் கொண்டுவரப்பட்டது. இத்துறையின் அமைச்சராகப் பிரதமர் செயல்பட்டுவருகிறார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக எஸ்.சோமநாத் செயல்பட்டுவருகிறார்.

விண்வெளித் துறை இன்று:

  • உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தின் இன்றைய மதிப்பு சுமார் 360 பில்லியன் அமெரிக்க டாலர் எனும் பிரம்மாண்ட அளவை எட்டியிருக்கிறது. விண்வெளி ஆய்வில் முன்னணியில் இருக்கும் நாடாக இந்தியா விளங்கினாலும், விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 2%தான். விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடும் முக்கிய நாடுகளில், தனியார் துறையின் பங்கெடுப்பு கடந்த 20 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது.
  • ஸ்பேஸ்எக்ஸ், புளூஆரிஜின், வெர்ஜின் காலக்டிக், ஏரியன்ஸ்பேஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் புத்தாக்க முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளன; செலவுகளைக் குறைத்து துறையை முன்னகர்த்தியுள்ளன. எனவே, உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கினை அதிகரிக்க, அரசு சாரா நிறுவனங்களின் பங்கெடுப்பை இந்திய விண்வெளித் திட்டத்தில் ஈடுபடுத்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
  • இந்திய விண்வெளித் துறையின் மதிப்பு, 2025இல் 50 பில்லியன் டாலரை எட்டுவதற்கும், 2030க்குள் உலகச் சந்தையில் 9% வரை இந்தியா கைப்பற்றுவதற்குமான சாத்தியங்கள் உள்ளதாக இந்திய விண்வெளித் துறை கருதுகிறது.

புதிய விண்வெளிக் கொள்கை:

  • புதிய விண்வெளிக் கொள்கையானது, இந்திய விண்வெளித் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை அதிகரிப்பதில் தனியார் துறை பங்கு வகிக்க ஓர் இடத்தை வழங்குகிறது. இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்கெடுப்பை அனுமதிப்பதன் மூலம், மேம்பட்ட விண்வெளித் தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விண்வெளி ஆய்வு மற்றும் பிற வணிக நோக்கமற்ற பணிகள் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்த இப்புதிய கொள்கை இஸ்ரோவை அனுமதிக்கிறது.
  • விண்கலம், செயற்கைக்கோள், ஏவுகலன் ஆகியவற்றை உருவாக்குவது, தரவு சேமிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என ஆரம்பம் முதல் முடிவு வரையிலான பணிகளில் தனியாரின் பங்களிப்பு ஈடுபடுத்தப்படவுள்ளது.

இஸ்ரோவின் பணிகள்:

  • இஸ்ரோ உள்ளிட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளின் (NSIL, IN-SPACe) பணிகளையும் பொறுப்புகளையும் தெளிவாக வரையறுத்திருப்பது இப்புதிய கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் புதிய கொள்கையானது, கல்வியாளர்களையும் ஆய்வுச் சமூகத்தினரையும் உள்ளடக்கிய அரசு சாரா நிறுவனங்களின் பங்கேற்புடன் ஒட்டுமொத்த இஸ்ரோ பணிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேலும், விண்வெளித் துறைக்கான உற்பத்திப் பணிகள் உள்ளிட்ட எந்தச் செயல்பாடுகளிலும் ஈடுபடுவதை விடுத்து புதிய தொழில்நுட்பங்கள், அமைப்புகள், ஆராய்ச்சி ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு இஸ்ரோ தன் ஆற்றலை முழுமையாகக் குவிக்கவிருக்கிறது என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். அதன்படி, இஸ்ரோ இதுவரை கையாண்டுவந்த உற்பத்திச் செயல்பாடுகள், விண்கலம் ஏவுதல் உள்ளிட்ட பணிகள் இனிமேல் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.

நன்றி: தி இந்து (19 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்