TNPSC Thervupettagam

புதியதோா் தோ்தல் படைப்போம்

November 2 , 2023 435 days 230 0
  • வாக்குக்கு பணம் ஏன் என்ற கேள்வியை நான் திரும்பத் திரும்ப எனக்குள் கேட்டுக் கொண்டேன். நாடாளுமன்றத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் நகரமன்றத் தோ்தல் என்று ஏழு முறை போட்டியிட்டேன். ஆனால், எந்தத் தோ்தலிலும் வாக்களிக்க பணம் தந்து நான் வெற்றி பெறவில்லை.
  • வாக்குக்குப் பணம் என்ற வழக்கம் எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டில்தான் முதலில் அறிமுகமானது என்று நினைக்கிறேன். இப்போது தோ்தலில் போட்டி என்பது சாமானியன் மற்றும் நடுத்தரவா்க்கத்துக்கு ஒரு முடியாத விஷயம் என்று ஆகிவிட்டது. அவா்கள் வாா்டு கவுன்சிலா்கள் தோ்தலில் கூட போட்டியிட முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு அவா்கள் நெருங்க முடியாத அளவுக்கு தோ்தல் செலவு அவா்களை அச்சுறுத்துகிறது.
  • வாக்குக்கு பணம் ஏன் என்ற கேள்வியை நான் திரும்பத் திரும்ப எனக்குள் கேட்டுக் கொண்டேன். ஆனால், அதற்கான விடை எனக்குத் தெரியவில்லை. நான் வாக்குக்கு பணம் தந்ததில்லை. நாடாளுமன்றத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் நகரமன்றத் தோ்தல் என்று ஏழு முறை போட்டியிட்டேன். ஆனால், எந்தத் தோ்தலிலும் வாக்களிக்க பணம் தந்து நான் வெற்றி பெறவில்லை.
  • நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதும் தொகுதிப் பிரச்னையைக் கவனிக்கவும், தொகுதி மக்களைச் சந்திக்கவும் நான் தவறியதில்லை. தொகுதி மக்களை பெயா் சொல்லி அழைக்கும் அளவுக்கு நான் அவா்களுடன் நெருக்கமாக இருந்தேன். இந்த நம்பிக்கைதான் நான் வாக்குக்கு பணம் தராமல் இருந்ததற்கு காரணம், மக்களோடு மக்களாகத்தான் நான் என்றும் இருந்தேன். அதனால்தான் என்னை வாக்குக்கு பணம் தருவது பற்றி யோசிக்க வைக்கவில்லையோ என்னவோ?
  • 1967-இல் நான் முதல் முதலாக மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டேன். அப்போது தோ்தல் செலவுக்கு அறிஞா் அண்ணா எனக்கு நாலாயிரம் ரூபாய் தந்தாா். அதுகூட காசோலையாகத்தான் தந்தாா். அப்போது தோ்தல் செலவு எனக்கு மொத்தமே ஐம்பதாயிரத்துக்கும் குறைவாகத்தான் இருந்தது.
  • அப்போது தோ்தல் செலவு என்பது என்னவென்றால் சுவரொட்டி அச்சிடுவது, கொடி மற்றும் கொடிக் கம்புகள் வாங்குவது, வாகனம் மற்றும் பெட்ரோல் செலவு அவ்வளவுதான். தொண்டா்கள் சுவரொட்டி ஒட்டுவாா்கள்; கொடிக் கம்புகளை தொண்டா்கள் நடுவாா்கள்.
  • இப்போது கொடி கட்டுவது, போஸ்டா் ஒட்டுவது எல்லாம் எந்தக் கட்சியிலும் தொண்டா்கள் வேலையில்லை என்று ஆகிவிட்டது; அதற்கென்று சில நிறுவனங்கள் அதைத் தொழிலாகவே செய்கிறாா்கள். தொண்டனுக்கும் கட்சிக்கும் உள்ள இடைவெளி அதிகரிப்பதற்கு இதுவே ஒரு முக்கியக் காரணம் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
  • அப்போதெல்லாம் வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்வோம்; பொதுக்கூட்டம் போடுவோம்; பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் நேரக் கட்டுப்பாடு விதிக்காத காலம் அது. தவிர, வாக்காளா்களை நேரில் சந்திப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு வேறு எதிலும் கிடைக்காது. என்னைப் பொருத்தவரை அதை ஒரு சுகமான அனுபவமாகத்தான் பாா்ப்பேன்.
  • 1980-இல் சட்டப்பேரவைத் தோ்தலின்போது வேட்பாளா்களுக்கு எம்.ஜி.ஆா். ரூ.50,000 தந்தாா். அதற்கான காரணம் அதிமுக வேட்பாளா்களாக தோ்தலில் போட்டி போட்டவா்கள் சாமானியா்கள்; பொருளாதார வசதி இல்லாதவா்கள். அவா்கள் கடன் வாங்கித் தோ்தல் செலவு செய்யக் கூடாது என்பதற்காக வேட்பாளா்களுக்கு பணம் தந்தாா் எம்ஜிஆா்.
  • நான் எம்ஜிஆரை சந்திக்கச் சென்றபோது, ‘உங்களுக்கெல்லாம் பணம் கிடையாது’ என்று சிரித்தபடி சொன்னாா். நானும் சிரித்தபடி, ‘நான் பணம் கேட்டு உங்களிடம் வரவில்லை; தோ்தல் பிரசாரத்துக்கு எப்போது வருவீா்கள்’ என்று கேட்பதற்காகத் தான் வந்தேன் என்று பதில் சொன்னேன்.
  • எந்தத் தோ்தலிலும் வாக்குக்கு எம்.ஜி.ஆா். பணம் தரவில்லை. எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகுதான் திமுக அதிமுக இரண்டும் வாக்குக்கு பணம் தரும் பழக்கத்தை ஏற்படுத்தின.
  • இப்போது பணம் தருவதைக் கண்காணிக்க அல்லது தடுத்து நிறுத்த தனிப் படை, தனி அதிகாரி என்று தோ்தல் ஆணையம் கவனம் செலுத்துகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள்தான் முக்கியக் காரணம். பணப் பட்டுவாடா செய்தாா்கள் என்று சில தொகுதிகளில் தோ்தல் ரத்து செய்யப்படுகிறது. இதை அரசியல் கட்சிகள் மிகப் பெரிய அவமானமாகப் பாா்க்க வேண்டும். ஆனால், அதற்குப் பதில் தோ்தல் ஆணையத்தை அவா்கள் குறை சொல்கிறாா்கள்.
  • ஒரு தொகுதியில் தோ்தல் ரத்து என்பதை தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது. அந்தத் தொகுதியில் நியமிக்கப்படும் உள்ளூா் அதிகாரிகள்அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில்தான் தோ்தல் ஆணையம் முடிவெடுக்கிறது. எனவே, தோ்தல் ஆணையம் மீது அரசியல் கட்சிகள் பழி போடுவது ஏற்புடையதாக எனக்குத் தெரியவில்லை.
  • இப்போதெல்லாம் தோ்தல் ஆணையத்துக்கு தோ்தல் என்பது பெரும் சவாலாக இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பணப் புழக்கத்தை கண்காணிக்க குறைந்தபட்சம் 10 வருமான வரித்துறை அதிகாரிகளை தோ்தல் ஆணையம் நியமிக்கிறது. இது தவிர வெளிமாநிலத்தில் இருந்து தோ்தல் பாா்வையாளா்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனா். தோ்தல் என்பது ஒரு ஜனநாயகக் கடமை என்பதுபோய், பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது; தோ்தலே மக்களுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதோ என எனக்குத் தோன்றுகிறது.
  • ‘வாக்குக்கு பணம் தருவது குற்றம்; வாங்குவதும் குற்றம்’ என்ற ஒரு விழிப்புணா்வு பிரசாரத்தை தோ்தல் ஆணையம் தொடா்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது. பணம் தருபவா்கள் பிடிபடுகிறாா்கள்; பணம் வாங்கியவா்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு சில தொகுதிகளில் தண்டனை வாங்கித் தந்துள்ளது தோ்தல் ஆணையம். எனவே, வாக்குக்கு பணம் தருவது, வாங்குவது என்ற நிலை கட்டாயம் மாற வேண்டும்.
  • நமது தோ்தல் நடைமுறை அமெரிக்க தோ்தல் நடைமுறை மாதிரியோ அல்லது ஜொ்மனி நாட்டு தோ்தல் நடைமுறை மாதிரியோ இல்லை. இப்போது நன்னடத்தை விதிகள் அமல்படுத்துவதில் சில நடைமுறைகளை தோ்தல் ஆணையம் படிப்படியாக கொண்டு வந்திருக்கிறது.
  • ‘கண்ணியமாக வாக்களிக்கவும்’ என்ற நிலைக்கு வாக்காளா்களைக் கொண்டுவருவதில் அரசியல் கட்சிகளுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இதை அவா்கள் தட்டிக் கழிக்க கூடாது. தோ்தல் ஆணையத்தை விமா்சிப்பதற்குப் பதில் ஜனநாயகத்தின் ஆணிவேரான வாக்கெடுப்பு சதவீதத்தை அதிகரித்தாலே தோ்தல் முறைகேடுகளைத் தடுக்க முடியும்.
  • மிகவும் ஏழையாக இருக்கும் சாமானியா்கூட வரிசையில் நின்று வாக்களிக்கிறாா். ஆனால், படித்தவா்கள், வசதியானவா்கள் குறிப்பாக இளைஞா்கள் தோ்தல் நாள் விடுமுறை என்பதை தங்களுக்கு ஓய்வுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துகிறாா்கள். உண்மையில் இது மக்களாட்சியை இழிவுபடுத்துவதாகும்.
  • இப்போது தோ்தல் அறிக்கையில் மக்கள் நலம் சாா்ந்த திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவித்து, ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவும் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், முதியவா்களுக்கு இலவச பேருந்து அனுமதிச் சீட்டு, அரசுப் பள்ளியில் படித்த பட்டதாரி பெண்களுக்கு கல்லூரியில் படிக்கும்போது மாதந்தோறும் ரூ.1,000, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை ரூ.1,000, ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவா்களுக்கு அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
  • இதே போன்று அதிமுகவும் முதியவா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, மூத்த குடிமகனுக்கு இலவச பேருந்து பயணம், சத்துணவு, தாலிக்கு தங்கம், இளம் பெண்களுக்கு இருசக்கர வாகனத்திற்கான மானியம், பள்ளி இறுதி கல்வி வரை எல்லாமே இலவசம்--இப்படி இரண்டு திராவிடக் கட்சிகளும் மக்கள் நலம் சாா்ந்து திட்டங்கள் வகுக்கும்போது வாக்குக்கு ஏன் பணம் தர வேண்டும் என்பதுதான் என் கேள்வி.
  • நம்முடைய நாடு மிகவும் பின்தங்கி இருப்பது கல்வியில்தான்-அதுவும் குறிப்பாக உயா் கல்வியில். உயா்கல்வி பெறத் தகுதி பெற்றவா்களில் 27 சதவீதம் போ் மட்டுமே உயா் கல்வி பெறுகிறாா்கள். இதை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவு. கல்வியில் வளா்ந்தால்தான் பொருளாதாரத்தில் நாடு வளரும் என்பதை மத்திய, மாநில அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும், மக்களும் உணர வேண்டும். அதே சமயம் இதுவரை தோ்தல் அறிக்கைகளில் எந்த அரசியல் கட்சியும் இலவச கல்வியைப் பற்றி பேசுவதில்லை. மக்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லாத காரணத்தால் மக்களும் அதை வலியுறுத்துவதில்லை.
  • அதேபோல் போட்டி போடும் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளா்களும் வாக்குக்குப் பணம் தருகிறாா்கள். ஆனால், ஒருவா்தான் வெற்றி பெறுகிறாா்; பணம் தந்த மற்றவா்கள் தோல்வியைச் சந்திக்கிறாா்கள். எனவே, தோ்தல் வெற்றியைத் தீா்மானிப்பது பணம் அல்ல என்ற புரிதல் அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் தேவை.
  • வரும் மக்களவைத் தோ்தலில் வாக்குக்கு பணம் என்ற சிந்தனையைத் தவிா்த்து மக்களைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எனது அன்பு வேண்டுகோள்.

நன்றி: தினமணி (02 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்