- பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் பூச்சிகள் பிரிவிற்கான காப்பாளர் பணிக்கு வேலைக்குச் சென்றிருந்த ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, “உங்கள் அருங்காட்சியகம் திடீரென்று தீப்பற்றிவிடுகிறது, நீங்கள் உடனடியாக என்ன செய்வீர்கள்? அதற்கு அவர் அளித்த பதில், “பாடம்செய்து வைக்கப்பட்டுள்ள ஏப்டேரியோசா க்ரோசா (Apteroessa grossa) எனும் புலி வண்டினை (Tiger Beetle) முதலில் பாதுகாப்பாக எடுத்துப் பத்திரப்படுத்துவேன்”. அது என்ன ஒரு வண்டு அவ்வளவு மதிப்பு வாய்ந்ததா? ஆம், இவ்வுலகில் அந்த வகைப் புலி வண்டின் பாடம் செய்யப்பட்ட மாதிரிகள் (specimen) மூன்றே மூன்றுதான் உள்ளன. அதில் ஒன்று பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.
- அங்குள்ள மிகப் பழமையான உயிரின மாதிரிகளில் ஒன்றுதான் அந்தப் புலி வண்டு. அது எப்போது, எங்கிருந்து, சேகரிக்கப்பட்டது தெரியுமா? சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் 1700களில் தமிழ்நாட்டி லிருந்துதான். இந்தப் புலி வண்டை பொ.ஆ. (கி.பி.) 1781இல் அறிவியலுக்கு அறிமுகப் படுத்தியவர் டேனிஷ் விலங்கியலாளரான யோஹான் சார்லஸ் ஃபேப்ரிகஸ். வகைப் பாட்டியலின் தந்தை என்றழைக்கப்படும் கார்ல் லின்னேயஸின் மாணவர் இவர். ஃபேப்ரிகஸ் இதை வகைப்படுத்தும்போது, இந்தப் புலி வண்டு சோழ மண்டலக் கடற்கரையில் உள்ள தரங்கம்பாடியிலிருந்து பெறப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
- எனினும் இது அங்கிருந்து சேகரிக்கப்பட்டிருக்க சாத்தியம் இல்லை எனவும், திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை அடிவாரத்தில் உள்ள அம்மைநாயக்கனூர் பகுதியில்தான் இது கண்டறியப்பட்டது எனவும் பின்னாளில் நம்பப்பட்டது. எனினும் இதற்கான உறுதியான ஆதாரங்களும் குறிப்புகளில் இல்லை. எதுவாக இருந்தாலும் இருக்கும் மூன்று உயிரின மாதிரிகளும் ஒரே இடத்தில்தான் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
புரியாத புதிர்
- இந்தப் புலி வண்டை அதற்குப் பிறகு யாரும் பார்க்கவேயில்லை. இதுபோல வேறு எந்த இடத்திலாவது பார்க்கப்பட்டதா? இது இப்போது இருக்கிறதா, இல்லையா என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிராக நீடிக்கிறது. இந்தியப் புலி வண்டுகளை அடையாளம் காண உதவும் களக்கையேட்டில் இதற்கு Enigmatic Tiger Beetle என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது புதிரான புலி வண்டு! புலி வண்டு ஆராய்ச்சியாளர்கள் இவற்றைப் பல முறை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவை இருந்த வாழிடம் இப்போது நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை.
- ஆகவே, இவை முற்றிலும் அழிந்து போயிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. மேலும், மற்ற புலி வண்டுகளைப் போலல்லாமல், இவற்றால் பறக்க முடியாது. உருவத்தில் பெரியது, சுமார் ஓர் அங்குல நீளம் இருக்கும். உடலின் மேல்பகுதி கறுப்பாகவும் அதன் மேல் மூன்று பெரிய மஞ்சள் புள்ளிகளும் காணப்படும். தடித்த கால்களையும், பெரிய தலையையும் கொண்டவை. குறிப்பிட்ட வாழிடங்களில் மட்டுமே இவை தென்படும் எனவும், இரவாடியாக இருக்கலாம் எனவும் அனுமானிக்கப்படுகிறது.
புலி வண்டு ஓர் அறிமுகம்
- உலகில் உள்ள பூச்சி இனங்களில் சுமார் 40 சதவீதம் பொறிவண்டுகள் (Beetles) தாம். வண்டுகளில் பல வகைகள் இருந்தாலும், வண்ணமயமான உடலும் விசித்திரமான பண்புகளும் கொண்ட புலி வண்டுகள் வியப்பிலாழ்த்துபவை. இந்தியாவில் இதுவரை 241 வகையான புலி வண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 119 வகைகள் இந்தியாவில் மட்டுமே தென்படும் ஓரிடவாழ்விகள். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 49 புதிய புலி வண்டு வகைகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் இன்னும் பல புதிய புலி வண்டு வகைகள் கண்டறியப்படாமலேயே இருக்க சாத்தியம் அதிகம்.
- மற்ற வண்டுகளிலிருந்து புலி வண்டுகளை எப்படிப் பிரித்தறிவது
- சற்றுக் கூர்ந்து கவனித்தால் நம் கண்ணில் முதலில் படுபவை, அவற்றின் முகத்தில் உள்ள இரண்டு கதிர் அரிவாள் போன்ற வளைந்த கூர்மையான முனையைக் கொண்ட கீழ்த்தாடைப் பற்கள் (Mandibles), தலையில் இரண்டு உணர் நீட்சிகள் (Antenna). பெரிய கண்களைக் கொண்டிருக்கும். ஓடுவதற்கு ஏற்றவாறு நீண்ட, மெல்லிய ஆறு கால்கள் இருக்கும். இவற்றின் முன்இறக்கைகள் மாறுபாடு அடைந்து உறுதியான கவசம்போல் உடலின் மேல் பகுதியில் இருக்கும். இதற்கு எளிட்ரா (Elytra) என்று பெயர். புலி வண்டுகள் முதலில் இந்த எளிட்ராவை மேலே தூக்கி, அதனடியில் உள்ள இறக்கைகளைப் பின்னர் அசைத்துப் பறக்கும். இந்த எளிட்ரா பல நிறங்களிலும், மேல் பகுதியில் பல புள்ளிகள், அழகிய வடிவமைப்பையும் கொண்டிருக்கும். இந்த அடையாளங்களை வைத்துப் புலி வண்டுகளை இனம்காணலாம்.
இந்தியப் புலி வண்டுகளை அடையாளம் காண உதவும் களக் கையேடு
- வாழிடம்: பொதுவாக ஈரப்பதம் மிகுந்த நீர்நிலைகளின் ஓரங்கள், கடற்கரையோரங்கள், ஈரப்பதமுள்ள காட்டுப் பாதைகள், காட்டு ஓடைகளின் ஓரம், அங்குள்ள பாறைகள் ஆகிய வாழிடங்களில் இவற்றைக் காணலாம். வெயில் காயும் வேளைகளில் இவை சுறுசுறுப்பாக ஓடி இரை தேடும். தரையில் முட்டையிடக்கூடியவை. இவற்றின் தோற்றுவளரிகள் (லார்வாக்கள்) மண்ணுக்குள் துளையிட்டு தலை மேலே இருக்குமாறு மறைந்திருக்கும். சில வகைப் புலி வண்டுகளின் தோற்றுவளரிகள் செடிகளின் தண்டுப் பகுதியில் துளையிட்டு உள்ளே வாழும்.
கண்மண் தெரியாத ஓட்டம்
- புலி வண்டுகள் அதிவேகமாக ஓடி இரைதேடும் பண்புள்ளவை. சிறிய பூச்சிகள், புழுக்கள், சிலந்தி போன்றவற்றை வேட்டையாடி உண்ணும். தூரத்தில் இரையைக் கண்டால் அத்திசையை நோக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிடும். பின்பு சட்டென நின்று மீண்டும் ஒரு நோட்டம்விடும். ஏனெனில், கண்மண் தெரியாமல் ஓடுவது என்போமே, அப்படித்தான் அதன் ஓட்டம் இருக்கும். ஆகவே, சிறிது தூரம் ஓடி, பின்னர் நின்று இரையைக் கண்டு கணநேரத்தில் அவற்றைத் தமது கூர்மையான கீழ்த்தாடையால் கவ்விப் பிடிக்கும். இந்தக் கீழ்த்தாடையில் உள்ள சிறிய ஓட்டையின் வழியே சுரக்கும் ஒரு நொதி, பிடித்த இரையை விரைவில் செரிக்க வைக்கும்.
பயன்கள்
- புலி வண்டுகள் சூழலியல் சுட்டிக் காட்டிகளாகத் (Bioindicators) திகழ்கின்றன. அதாவது, இவை இருக்கும் இடங்களின் தூய்மைத்தன்மையை அறிய உதவுகிறது. இவை பெரும்பாலும் குறிப்பிட்ட வாழிடங்களில் மட்டுமே தென்படுவதால் இவற்றின் எண்ணிக்கை, வகை போன்ற காரணிகளை வைத்து அந்த வாழிடம் நல்ல நிலையில் உள்ளதா, சீரழிந்த நிலையில் உள்ளதா என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மேலும் இவை பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பலவற்றை உண்பதால் இயற்கைப் பூச்சிக்கொல்லிகளாகக் கருதப்படுகின்றன. இவை பல பறவைகளுக்கும் பெரிய பூச்சிகளுக்கும் உணவாகின்றன.
புலி வண்டுகளைப் படமெடுத்தல்
- காட்டுயிர்களைப் படமெடுப்பது என்பது அவ்வளவுசுலபமான காரியம் இல்லை. அதுவும் புலி வண்டுகளைப் படமெடுக்க அதீதப் பொறுமையும் நல்வாய்ப்பும் வேண்டும். பெரிய கண்களைக் கொண்டுள்ளதால் நாம் அருகில் செல்லும்போதே, அவை ‘கண்மண்’ தெரியாமல் ஓடும். ஆனால், துவண்டுவிடாமல் பொறுமையாக இவற்றைப் பின்தொடர்ந்து அவற்றைத் தொந்தரவு செய்யாமல் படமெடுத்துவிட்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. சரியாக அடையாளம் காண வேண்டுமானால், இவற்றைப் பல கோணங்களில் படமெடுக்க வேண்டும். புலி வண்டின் மேல்பகுதியிலிருந்தும் பக்கவாட்டிலிருந்தும் (கால்கள் நன்குத் தெரியும்படி), முன்பக்கத்திலிருந்தும் தெளிவாகப் படமெடுப்பது அது எந்த வகை என்பதை அறிய உதவும்.
படிக்கவும் படமெடுக்கவும் பகிரவும்
- அண்மையில் வெளிவந்த ‘A field guide to the Tiger beetles of India’ எனும் களக்கையேடு இந்தியாவில் உள்ள 241 வகையான புலி வண்டுகளை அடையாளம் காணவும், அவற்றின் பண்புகள், பரவலை அறிந்துகொள்ளவும் உதவுகிறது. இயற்கை ஆர்வலர்கள் புலி வண்டுகளைப் படமெடுத்துத் தம்மிடமே வைத்துக்கொள்ளாமல், iNaturalist (https://www.inaturalist.org/), India Biodiversity Portal, Wikimedia Commons போன்ற மக்கள் அறிவியல் திட்ட வலைத்தளங்களில் பகிர்ந்தால் நிபுணர்களின் உதவியால் அவற்றைச் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
- மேலும், நாம் படமெடுத்த புலி வண்டு போன்ற சிற்றுயிர்களைப் பார்த்த இடம், தேதி, எண்ணிகை, பண்பு போன்ற விவரங்களை மக்கள் அறிவியல் திட்டங்களில் பகிரும்போது அது அறிவியல் ஆராய்ச்சிக்கும், அவற்றின் பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவும். பலரும் புலி வண்டுகளை அவதானிக்க ஆரம்பித்தால் ஒரு வேளை புதிய வகைப் புலி வண்டுகள்கூடக் கண்டறியப்படலாம், ஏன்? 200 ஆண்டுகளாகப் பார்க்கப்படாத புதிர் போடும் புலி வண்டைக் காணும் பாக்கியம்கூடக் கிடைக்கலாம்!
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 12 – 2023)