TNPSC Thervupettagam

புதுப்புது அவதாரம் எடுக்கும் சட்டவிரோத கடன் செயலிகள்

July 1 , 2024 193 days 166 0
  • இந்தியாவில் சட்டவிரோதமான கடன் செயலிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் செயல்படும் கடன் செயலிகள் புழக்கத்தில் இருந்தாலும் புற்றீசல் போல மோசடி கடன் செயலிகளின் பயன்பாடும் இணையத்தில் அதிகமாகி உள்ளது.
  • இதுபோன்ற கடன்செயலிகளை முடக்க மத்திய அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், புதுப் புதுப் பெயர்களில் தங்களை மேம்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
  • திடீர் பொருளாதார நெருக்கடியை ஈடு செய்ய பலர் ‘குயிக் லோன் ஆப்’ எனப்படும் நொடிகளில் கடன் வழங்கும் செயலிகளை நாடி வருகின்றனர். ஏனெனில் அவை வங்கிகளைப் போல ஆவணங்களைக் கோரி இழுத்தடிக்காமல் கடன் தொகையை நொடிகளில் வழங்கி விடுகின்றன.
  • தனிப்பட்ட ஒருவரிடம் கெஞ்சிக் கூத்தாடி கடன் வாங்குவதை விட இதுபோன்ற செயலி மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே சுலபமாக கடன் வாங்குவது முதலில் சிறந்தது போலத்தான் தோன்றும். ஆனால், செயலியில் உள்மறைந்திருக்கும் ஆபத்துகளை கடன் வாங்குவோர் அப்போது கருத்தில் கொள்வதில்லை.

பணயமாகும் உயிர்:

  •  ஆன்லைன் கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் நொடியிலிருந்து நமது ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கழுகைப்போல் கண்காணித்துக் கொண்டே இருப்பர். நம்முடைய தொடர்புகள், வாய்ஸ் ரெக்கார்டர், கால் ரெக்கார்டர், செய்தியை படிப்பது, மை பைல்ஸில் உள்ள தகவல்களை திருடுவது என மொத்தத்தில் நமது ஸ்மார்ட்போனை ரிமோட் முறையில் இயக்குவதற்கான அனைத்து அனுமதிகளையும் நம்மையும் அறியாமல் மோசடி கும்பலிடம் வழங்கி விடுகிறோம். அவர்களும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு நம்மை ஆட்டிப்படைக்க தொடங்கிவிடுகின்றனர்.
  • மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த ஒரு குடும்பம் கடன் செயலியால் தற்போது காணாமல் போய்விட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 35 வயதான பூபேந்திர விஸ்வகர்மா என்ற நபர் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திவிட்ட போதும் கூடுதலாக பணத்தை கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
  • கேட்ட பணத்தை கொடுக்கவில்லையென்றால் அவரின் நிர்வாணப்படத்தை அவரின் உறவினர்களுக்கு பகிர்வதுடன் சமூக வலைதளத்திலும் வெளியிடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டியதையடுத்து, அவர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாடு முழுவதும், கடன் செயலிகளால் இதுபோன்ற மரணங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாமும் இதனை தினசரி செய்தியாக படித்துவிட்டு எளிதாக கடந்து சென்றுவிடுகிறோம்.

கடன் வலை:

  • பொதுவாக கடன் செயலிகள் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் லட்சங்கள் வரை கடனாக வழங்குகின்றன. மாதாந்திர வட்டி 20 முதல் 30 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. செயலாக்க கட்டணம் என்ற வகையில் 15 சதவீதம் வரைபிடித்தம் செய்யப்படுகிறது. கடன் ஒப்புதல் அளித்த 15 நாட்களுக்குப் பிறகு அந்த மோசடி கும்பல் தங்களது துன்புறுத்தல் வேலையை வாடிக்கையாளர்களிடம் காட்டத் தொடங்கி விடுகிறது.
  • இந்தியாவில் 700-க்கும் அதிகமான கடன் செயலிகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதில், பெரும்பாலானவை சீனர்களுக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தியர்களிடம் எளிதாக பேசி வசூல் வேட்டையை தொடர்வதற்கு அந்த செயலியை நிர்வகிக்கும் பொறுப்பு இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுகிறது.
  • கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள் உள்ளிட்ட சில குறைந்தபட்ச தரவுகளைத் தவிர வேறு எந்த விவரங்களையும் வைத்திருக்க கூடாது என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெளிவாக அறிவுறுத்தியுள்து. ஆனால், இதுபோன்ற சட்டவிரோத செயலிகள் வாடிக்கையாளரின் தொடர்புகள், ஸ்மார்ட்போனில் உள்ள அந்தரங்க தகவல்களை திருடி அதனை மார்பிங் செய்து கடன் வாங்குபவர்களை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
  • லோக்கல் சர்க்கிள் அமைப்பு நடத்திய ஆய்வின்படி 2020 ஜூலை முதல் 2022 ஜூலை வரையிலான இரண்டு ஆண்டுகளில் 14 சதவீதஇந்தியர்கள், கடன் செயலி வலையில் சிக்கியதாக கூறப்பட்டுள்ளது. அதீத வட்டியை செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளானதாக 58 சதவீதம் பேரும், மிரட்டி பணம் பறிக்கப்பட்டதாக 54 சதவீதம் பேரும் தங்களது மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கட்டுப்படுத்துவதில் சிக்கல்:

  • செயலியில் கடன் வாங்கி துன்புறுதலுக்கு ஆளாவோர் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தாலும் அவர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பது பெரும்பாலானோரின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனை மத்திய பிரதேசத்தை சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவரும் ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ சைபர் குற்றங்களை சமாளிக்க காவல்துறைக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை.
  • இப்பிரிவில் பணியாற்றும் பல காவலர்களுக்கு அடிப்படை இணைய அறிவு கூட இல்லை. அதேநேரத்தில் சைபர் குற்றவாளிகள் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கின்றனர். அதனால்தான் அவர்களை சமாளிப்பது சவாலானதாக உள்ளது” என்கிறார். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் பொதுவாக வங்க தேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து கிளவுட் அடிப்படையிலான மெய்நிகர் எண்களைப் பயன்படுத்துவதால் அவர்களை கண்காணிப்பது சிரமமான பணியாக உள்ளது.
  • காளான் போல் அதிகரித்து வரும் சட்டவிரோத கடன் செயலிகளை கட்டுப்படுத்த டிஜிட்டல் இந்தியா டிரஸ்ட் ஏஜென்சியை (டிஜிட்டா) நிறுவுவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் முறையான அனுமதியுடன் இயங்கும் செயலிகளை மக்கள் எளிதாக அடையாளம் காண உதவும்.

கவனம் அவசியம்:

  • உரிய வகையில் பதிவு செய்யப்படாத, நெறிமுறைகளை கடைப்பிடிக்காத செயலிகள் மூலம் கடன்வாங்குவது நிச்சயம் ஆபத்தானது என்பதை கடன் வாங்குவோர் உணர வேண்டும். வட்டி விகிதம் அதிகம் என்பதுடன் மிரட்டலுக்கு பயந்து வாங்கிய கடனைவிட பலமடங்கு பணத்தை திரும்பச் செலுத்த வேண்டிய மோசமான நிலையும் ஏற்படும்.
  • லோன் ஆப்ஸ் மூலம் யாரேனும் உங்களை ஏமாற்றினாலோ அல்லது மிரட்டினாலோா அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம். மோசடியாளர்களுக்கு 3 ஆண்டு சிறையும், 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
  • இதுபோன்ற சட்டவிரோத கடன் செயலிகளில் தனியுரிமை, பாதுகாப்பை அறவே எதிர்பார்க்க முடியாது. இவற்றை முடிந்தவரையில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தாமல் தவிர்ப்பதுதான் சிறந்தது. கடன் பெறுவதில் தாமதமானலும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்களை நாடுவது மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்