- நவீன ஒலிம்பிக் வரலாற்றில் மூன்றாவது முறையாக பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
- 1900இல் பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர்கள் கலந்துகொண்டனர். 1924இல் இரண்டாவது முறை பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 44 நாடுகளைச் சேர்ந்த 3,089 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். 2024 ஒலிம்பிக் போட்டியில் 10,500 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
- கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற 2 ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.
- கோடைக் கால ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாட்டிலேயே பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.
- ‘வேகம், உயரம், வலிமை’ என்பது ஒலிம்பிக்கின் குறிக்கோள்.
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 4 புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- கிரேக்க நாட்டின் ஒலிம்பியா நகரில் ஏப்ரல் 17 அன்று ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஓட்டம் மே 8 அன்று ஆரம்பித்தது. பல்வேறு நாடுகளுக்குச் சென்ற ஒலிம்பிக் ஜோதி, ஜூலை 14, 15இல் பாரிஸ் நகரில் இருந்தது. போட்டிகள் ஆரம்பிக்கும் வரை பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.
- சுமார் 11 ஆயிரம் பேர் இந்த ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
- ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா ஜூலை 26 அன்று நடைபெறுகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஒரு மைதானத்தில் விழாவை நடத்தாமல், பாரிஸின் முக்கியமான சீன் நதிக் கரையில் நடைபெற இருக்கிறது. 6 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் அணிவகுப்பை ஆற்றின் கரைகளில் இருந்து பார்வையாளர்கள் கண்டுகளிப்பர்.
- ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துக் கொண்டிருப்பதால், ரஷ்யாவும் அதை ஆதரிக்கும் பெலாரஸ் வீரர்களும் அந்த நாட்டுக் கொடிகளுடன் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது. நடுநிலைக் கொடியின் கீழ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் முழக்கம் Games Wide Open. இது தனித்தன்மை, பரந்த மனப்பான்மை, அணுகுதல் ஆகியவற்றின் மூலம் பாரிஸ் விளையாட்டைக் காணவும் விளையாடவும் அனைவரையும் வரவேற்கிறது.
- பாரிஸ் ஒலிம்பிக்கின் சின்னம் ஃபிரீஜ் (Phryge). பிரெஞ்சு சிவப்புத் தொப்பியைக் குறிக்கிறது.
- ஒலிம்பிக் வரலாற்றிலேயே கோடைக்கால ஒலிம்பிக் போட்டிக்கும் அடுத்து நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் ஒரே சின்னம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- பாரிஸ் போட்டிக்கான முத்திரை, பிரெஞ்சு ஒலிம்பிக் வரலாற்றின் 3 முக்கியமான விஷயங்களைக் குறிக்கிறது. ஒலிம்பிக் சுடர், பதக்கம், மரீயன். இவற்றில் மரீயன், பிரெஞ்சுப் புரட்சியில் போரிட்ட வீராங்கனை. அதாவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பிரான்ஸின் கொள்கையைப் பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
- 1912ஆம் ஆண்டு வரை முதலிடம் பெறும் பதக்கங்கள் முழுமையான தங்கத்தால் செய்யப்பட்டன. இப்போது 6 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட இரும்பால் பதக்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
- 2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்கள் மராமத்துப் பணியின்போது ஈஃபில் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்ட பழைய இரும்பால் செய்யப்பட்டுள்ளன.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 07 – 2024)