TNPSC Thervupettagam

புத்தகம் எனும் அறிவுச் செல்வம்

January 2 , 2024 375 days 254 0
  • உலகம் வெளிச்சத்தைத் தேடியே ஓடிக் கொண்டிருக்கிறது. பூமி தோன்றிய காலத்திலிருந்து இரவும், பகலும் மாறி மாறி வந்து போகிறது. இரவும், இருட்டும் பிரிக்க முடியாதவை என்பதால் அதனால் ஏற்படும் அச்சத்திலேயே மனித சமுதாயம் வாழ்ந்தது. இரவும், பகலும் மாறி மாறி வருவதையே காலப்போக்கில் மனித சமுதாயம் ஆனந்தமாக அனுபவித்தது.
  • அறியாமை என்பதே உலகின் மிகப்பெரும் இருட்டாகும். அறிவு வெளிச்சம் வந்ததும் அந்த இருள் கொஞ்சம் கொஞ்சமாக அகலுகிறது. அறிவைப் பெறுவதற்கே கல்வியும், புத்தகங்களும் தேவைப்பட்டன. நாகரிக சமுதாயம் அவற்றைத் தேடியே கையகப்படுத்திக் கொண்டன. உலகில் நாகரிகத்தின் உச்சமே மனிதன் வாசிக்கும் பழக்கத்தை தேடிக் கொண்டதுதான்.
  • நூல்கள் எப்போதும் ஒரு நாகரிகத்தின் சின்னம்; பண்பாட்டின் அடையாளம்; அறிவு வளர்ச்சியின் குறியீடு; வளர்ந்து வரும் சமுதாயத்தின் முன்னோடி; அந்தந்த காலச் சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி; இது வெறும் காகிதமல்ல, ஆயுதம்; அதுவும் அறிவாயுதம்.
  • "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று அறிவுக்கு இலக்கணம் கூறியுள்ளது திருக்குறள். அத்தகைய அறிவை வளர்க்கவும், சிந்தனையைத் தூண்டவும் துணையாக இருப்பவை நூல்களே! மிகப்பெரிய சமுதாய மாற்றங்களுக்கும், பூமியையே புரட்டிப் போட்ட புரட்சிகளுக்கும் நூல்களே ஆயுதங்களாகப் பயன்பட்டன.
  • "புத்தகம் இல்லாத வீடு, ஜன்னல் இல்லாத அறை போன்றது. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது' என்று சிந்தனையாளர் பிளேட்டோ கூறியுள்ளார். நாடும், வீடும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • 18}ஆம் நூற்றாண்டை "புரட்சியின் யுகம்' என்று கூறுவர். இந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் மத்தியதர வர்க்கம் விழித்தெழுந்து செல்வத்தையும், செல்வாக்கையும் பெற முயன்றது. நிலப்பிரபுத்துவத்தின் ஆதிக்கத்திலிருந்து மத்திய தர வர்க்கத்தின் ஆளுகைக்குப் பொருளாதார, அரசியல் துறைகள் பெயரளவில் மாறுவதற்கு வால்டேர், ரூசோ என்னும் சிந்தனையாளர்களின் நூல்களே காரணம் ஆகும்.
  • "பொதுமக்களே! விழித்து எழுங்கள். உங்கள் கைவிலங்குகளை உடைத்தெறியுங்கள்' என்ற வால்டேரின் சுதந்திரக் குரல் பிரெஞ்சு மக்களைத் தட்டி எழுப்பியது. கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடும் நெஞ்சுரத்தைப் பெற்றுத் தந்தது. மன்னர் ஆட்சியைத் தூக்கியெறிந்து மக்களாட்சியை உருவாக்கும் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டது. "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற அந்தப் புரட்சி முழக்கம் வானை முட்டி எங்கும் எதிரொலித்தது.
  • "என்னுடைய தொழில், நான் சிந்திப்பதைச் சொல்லுவதுதான்' என்றார் வால்டேர். அவர் சிந்தித்தவை நாடகங்கள், நவீனங்கள், கவிதைகள், கட்டுரைகள், அறிக்கைகள், கடிதங்கள் என ஏறத்தாழ நூறு நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை காலத்தை வென்று இன்றும் நின்று நிலவுகின்றன. பிரெஞ்சு மொழிக்கே இவை பெருமையை தேடித் தந்தன.
  • மனித சமுதாயத்தையே மாற்றியமைத்த ரூசோவின் "சமுதாய ஒப்பந்தம்' அதிகார வெறியர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. "அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஆனால் அக்கருத்துகளைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக நான் சாகும்வரை போராடுவேன்' என்று வால்டேர் குமுறி எழுந்து ரூசோவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அனைவரும் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அவரே விடுதலைக்காகப் பாடுபட்டார்.
  • "வீட்டை கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்' என்பார்கள். ஏனெனில், அவை கடினமான செயல்கள் என்பதற்காகவே! அதைப்போலவே, "நூல்களை எழுதிப்பார்' என்பதனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்; எழுதுவது அத்துணை எளிய செயல் அல்ல; பல மலர்களைத் தேடிச் சென்று தேனைச் சேகரிக்கும் வண்டுகளைப் போல சொல்ல வேண்டிய செய்திகளை சிந்தனையாளர்கள் சேகரிக்கின்றனர்.
  • மாமேதை ராகுல்ஜி எனும் ராகுல சாங்கிருத்யாயன் சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் முதலியவற்றைப் பற்றித் தத்துவரீதியாக "மனித சமுதாயம்' என்ற பெயரில் நூலைப் படைத்துள்ளார். அவரே கூறியிருப்பது போல, அந்த முக்கிய பிரச்னைகளை சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காக, "வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை எழுதியிருக்கிறார்.
  • ராகுல்ஜி அறிவைச் சேகரிப்பதற்காக உலகத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் சுற்றியிருக்கிறார். ஐக்கிய மாநிலத்தின் ஆஜம்கட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்தில் பிறந்த இவர், காசி நகரிலே தொடங்கிய தமது அறிவு சேகரிக்கும் முயற்சியை, லெனின்கிரேடு பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியைப் பெற்ற பிறகும் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். ஆயுள் முழுவதும் உழைத்துச் சேகரித்த அறிவுக் கருவூலத்தை அவருடைய நூல்களிலே அள்ளித் தந்திருக்கிறார்.
  • "இந்த நூலிலுள்ள கதை ஒவ்வொன்றிற்கும் பின்னால் அந்தந்த காலத்தைக் காட்டும் பலமான ஆதாரங்கள் இருக்கின்றன. உலகத்தில் எத்தனையோ மொழிகளில் உள்ள தர்க்க ரீதியான மொழியாராய்ச்சி, மண், கல், தாமிரம், பித்தளை, இரும்பு இவற்றில் எழுதப்பட்டும், செதுக்கப்பட்டும் உள்ள வரலாறு, இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாட்டின் பழக்க வழக்கங்கள், புதைபொருள்கள் இவற்றில் இருந்தெல்லாம் ஆதாரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன' என்று கூறும் ராகுல்ஜி, அந்தக் கதைகளுக்கு ஆதாரமான நூல்களின் பட்டியலைச் சேர்க்கவில்லை. அதற்கு அவர் கூறும் காரணம், "அப்படிச் சேர்த்தால் அது இந்நூலின் இணைப்பாக இல்லாமல் இதைவிடப் பெரியதோர் நூலாக ஆகிவிடும்' என்பதே.
  • இவ்வாறு பல காலம் முயன்று உருவாக்கப்பட்ட படைப்புகள் அந்தந்த காலத்தில் வரவேற்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பழைமைவாதிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளாகியுள்ளன. அவற்றை எழுதிய குற்றத்திற்காகவே அவர்கள் தண்டிக்கப்பட்டனர்; நாடு கடத்தப்பட்டனர்; அவர்களது அரிய படைப்புகளும் எரியூட்டப்பட்டன. ஆனால் அவர்கள் காலம் கடந்து பாராட்டப்படுகின்றனர்.
  • பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகர்களாகக் கருதப்படும் இரட்டையர்களான வால்டேர், ரூசோ இவர்களும் இவ்வாறு அக்கால ஆட்சியாளர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களே! வால்டேர் சமூக ஒழுக்கத்தைக் கெடுப்பவர் என அரசாங்கம் குற்றம் சாட்டியது; மத விரோதி என்று மதவெறியர்கள் பழி தூற்றினர். "நரகத்தின் வாசற்படி' என்று அவரைக் கண்டு வைதிகர்கள் நடுங்கினர். இறுதியில் வால்டேர் சிறையில் தள்ளப்பட்டு, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்.
  • 1791}ஆம் ஆண்டு வெடித்தெழுந்த பிரெஞ்சுப் புரட்சியின் போது, ரூசோவின் பூதவுடல் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டு பாரீஸ் நகரில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. கொடுங்கோன்மையின் சின்னமாக விளங்கிய "பாஸ்டில்' சிறைக்கோட்டத்தைத் தரைமட்டமாக்கி, அதன் அழிவுக் குவியல்மீது ரூசோவின் சடலம் வெற்றிச் சின்னமாக ஓர் இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தது.
  • இவ்வாறு உலகம் முழுவதும் சிந்தனையாளர்கள் தங்கள் படைப்புகளுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி, எழுத்தாளர்களின் படைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன; எழுத்தாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் மகாகவி பாரதியார் தலைமறைவாகி புதுவைக்குப் போகவில்லையா? இலங்கையில் நடந்த இனப்படுகொலையின்போது இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர் ஜே.எஸ். திசைநாயகத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது; கடந்த சில ஆண்டுகளில் பல பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • எத்தனை அடக்குமுறைகள் வந்தால் என்ன, அடிக்க அடிக்கப் பந்து எழுவது போலவும், அரைக்க அரைக்கச் சந்தனம் மணப்பது போலவும் சிந்தனையாளர்கள் சிலிர்த்து எழுகின்றனர். அவர்களால் ஆக்கப்பட்ட நூல்கள் இப்போது உலகத்தையே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. படித்த உலகத்தைத் தவிர்த்து, பாமரர்களும் புத்தகங்களின் அருமையை உணரத் தலைப்பட்டுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டுகளே தமிழகத்தின் மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகக்காட்சிகள்!
  • அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பலவேறு கலாசாரங்களைப் பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவை மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருக்கிறது.
  • "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்று üவையார் பாடியது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும்தான். இப்போது இளைய தலைமுறையினர் மத்தியில் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்ற நாட்டு நலனில் அக்கறை கொண்ட நல்லவர்கள் கவலையோடு கூறியுள்ளனர். புத்தகக்காட்சிகளுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பு நம்பிக்கையைத் தந்தாலும், தொலைக்காட்சி போன்ற வலிமை மிக்க ஊடகங்கள் இளைஞர்கள் கவனத்தை திசைதிருப்பவே செய்கின்றன.
  • "புத்தகங்களுக்காகச் செலவிடுபவை செலவு அல்ல, அது மூலதனம்' என்றார் அறிஞர் எமர்சன். எல்லாச் செல்வங்களும் அழியும் தன்மை கொண்டவை; அறிவுச் செல்வமே வளரும் தன்மை கொண்டது. அதற்கான கருவிகளாக இருப்பவை புத்தகங்களே! அவற்றை நாம் கற்போம்; பிறருக்கும் கற்பிப்போம்!

நன்றி: தினமணி (02 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்