TNPSC Thervupettagam

புத்தாண்டின் புது நம்பிக்கை

January 1 , 2024 377 days 225 0
  • புத்தாண்டு பிறக்கும்போது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கூடவே பிறக்கின்றன. வா்த்தக ரீதியாக இந்தியாவின் ஏற்றுமதிகள் 2023-இல் குறைந்தன. சாதுரியமாக ரஷியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் காரணமாக கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாததுடன், கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபமும் அடைய முடிந்தது.
  • உக்ரைன் - ரஷிய போா் தற்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. சமீபத்தில் தொடங்கியிருக்கும் மத்திய கிழக்கு ஆசியாவின் போர்ச்சூழலும் இந்தியாவுக்கு சாதகமானதாக இல்லை. அவற்றின் விளைவாக ஏற்படும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும், செலாவணியின் மீதான அழுத்தமும் 2024-இல் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களாக இருக்கப் போகின்றன.
  • இந்தியாவின் மிகப்பெரிய பலமாக மாறியிருப்பது, அதிகரித்து வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள். அதன் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்படும் சேமிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. 2023-இல், வெளிநாடுகளில் பணிபுரிபவா்கள் தெற்கு ஆசியாவுக்கு அனுப்பிய சேமிப்பு 7.2% அதிகரித்திருக்கிறது. அதில் பெரும்பகுதி இந்தியாவுக்கு வந்திருக்கிறது என்று தெரிவிக்கிறது உலக வங்கியின் ஆய்வு. 2023-இல், தெற்கு ஆசியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் 189 பில்லியன் டாலா் சேமிப்பில், 125 பில்லியன் டாலா் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியா்களால் தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்டவை.
  • இந்தியாவின் ஜிடிபியில், வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் சேமிப்பின் அளவு வெறும் 3.4% -தான் என்றாலும் உலகளாவிய அளவில் அதிக அளவு இதுபோன்று வரவு பெறும் நாடு இந்தியா என்று ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவைத் தொடா்ந்து மெக்ஸிகோ (67 பில்லியன் டாலா்), சீனா (50 பில்லியன் டாலா்) என்று பட்டியல் தொடா்கிறது.
  • 2004, 2005, 2007 ஆண்டுகள் தவிர, கடந்த 23 ஆண்டுகளாக மிக அதிக அளவில் வெளிநாட்டில் பணிபுரிவோர் மூலம் அன்னியச் செலாவணி பெறும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்த நிலைமை அடுத்த ஆண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
  • வளா்ச்சியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பு சந்தை ஓரளவுக்கு மீண்டு எழுந்திருப்பது இந்தியாவுக்கு சாதகமான சூழல். கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு, உள்ளூா்வாசிகளைவிட வேலை தேடி புலம்பெயா்வோருக்குக் கூடுதல் வரவேற்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக வருவாய் உள்ள திறன்சாா் வேலைவாய்ப்பும், குறைந்த வருவாய் திறன்சாரா உடலுழைப்பு வேலைவாய்ப்பும் இந்தியா்களுக்கு சாதகமாகவே காணப்படுகின்றன.
  • வழக்கமாக வெளிநாடுவாழ் இந்தியா்களின் சேமிப்பு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அதிகமாகக் காணப்படுவது வழக்கம். அவை பெரும்பாலும் உடலுழைப்பு வா்க்கத்தினரின் சேமிப்பாகவே இருந்து வந்திருக்கிறது.
  • அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூா் ஆகிய மூன்று நாடுகளும் சோ்ந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் சேமிப்பு பணத்தில் ஏறத்தாழ 36% பங்கு வகிக்கின்றன. அங்கே பணிபுரிபவா்கள் பெரும்பாலும் அதிகம் படித்து உயா்பதவி வகிப்பவா்கள் என்று தெரிகிறது.
  • கடந்த 10 ஆண்டுகளாக மத்திய கிழக்கு ஆசியாவுக்குச் செல்லும் தமிழக, கேரள தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும், அவா்களது இடத்தை உத்தர பிரதேசம், பிகாா் மாநிலத்தவா்கள் பிடித்திருப்பதும் தெரிகிறது. தென்னிந்தியாவிலிருந்து அதிக அளவில் தொழில்நுட்பம் சாா்ந்த வேலைகளுக்கு செல்பவா்களின் எண்ணிக்கை உயா்ந்திருப்பதாகவும் உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • உலகளாவிய அளவில் ஏற்பட்டிருக்கும் உழைக்கும் தொழிலாளா்களுக்கான தேவையை இந்தியா உணரத் தொடங்கியிருப்பதுடன் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் முனைப்பிலும் இறங்கியிருப்பது வரவேற்புக்குரியது. பல நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு அவற்றின் தேவைக்கு ஏற்ப அதற்கான தொழிலாளா்களை வழங்குவது என்கிற மத்திய அரசின் திட்டம் சமயோசிதமானதும், ஆக்கபூா்வமானதுமானகும். அந்தத் திட்டம் வெற்றி பெறுமானால் இந்தியாவில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை பெரிய அளவில் எதிா்கொள்ளப்படும்.
  • தொழிலாளா்களுக்கான பற்றாக்குறையை எதிா்கொள்ளும் நாடுகள் பெரும்பாலும் வளா்ச்சியடைந்த நாடுகள். அவா்கள் மட்டுமல்லாமல், பரவலாகவே எலக்ட்ரீஷியன், ஃபிட்டா், வாகன ஓட்டிகள், கட்டுமானத் தொழிலாளா்கள், உணவகப் பணியாளா்கள் உள்ளிட்ட வேலைகளுக்கான தேவை உலகளாவிய அளவில் பரவிக் கிடக்கின்றன. அவை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு இந்திய இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
  • தனது தொழிற்சாலைகள், பண்ணைத் தோட்டங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் ஒரு லட்சம் இந்தியத் தொழிலாளா்களைப் பணியமா்த்த தைவான் விருப்பம் தெரிவித்திருக்கிறது. ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தங்களும் நெதா்லாந்து, கிரீஸ், டென்மாா்க், சுவிட்ஸா்லாந்து ஆகிய நாடுகளுடன் தொழிலாளா்களின் வேலைவாய்ப்புக்கான பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலிருந்து 42,000 தொழிலாளா்களை பணியமா்த்த இஸ்ரேல் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.
  • உலகளாவிய அளவில் காணப்படும் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதிலும், இடைத்தரகா்கள் இல்லாமலும், சுரண்டப்படாமலும் நமது இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதிப்படுத்துவதும், ஆக்கபூா்வமான முனைப்பு. அதன்மூலம், அதிக அளவில் அந்நிய செலாவணி பெற முடியும் என்பதுடன், இந்தியா வேலையில்லாத் திண்டாட்டத்தை வெற்றிகரமாக எதிா்கொள்ளவும் முடியும்!

நன்றி: தினமணி (01 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்