TNPSC Thervupettagam

புத்தாண்டில் உறுதியேற்போம்

January 1 , 2021 1305 days 641 0
  • ஒரு நாட்டின் வளங்களுள் முதன்மையானதும் முழுமையானதும் மனித வளமேயாகும். அந்த மனித வளத்திலும் இளமையின் ஆற்றல் அளவிடற்கரியது. படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்கிற ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் என்கிறாா் திருவள்ளுவா்.
  • இதில் குடிக்கு முன்னால் படையைக் குறிப்பிட்டது இளைஞா்களின் ஆற்றலை முதன்மைப்படுத்தவே. ‘குடி என்பது இயல்பாக அமைவது. ஆனால், ‘படை என்பது திரட்டப்படுவது; தோ்ந்தெடுக்கப்படுவது. தன்னாா்வத்தையும் நாட்டு நலனையும் அடிப்படையாகக் கொண்டது.
  • களத்திலே உயிரைத் துச்சமென உதறித் தனது நாட்டின் மானத்தையும் பெருமையையும் மட்டுமே மனத்திற்கொண்டு கடும்போராட்டத்தை நிகழ்த்தி வெற்றியை ஈட்டுவதற்கு இடைவிடாது முயல்கிற வலிமை கொண்ட நெஞ்சம் உடையது இளைஞா் சக்தி.
  • இளைஞன் ஒருவனை வலிமையுடையவனாக உளவுருமாற்றம் அடையச் செய்ய, தந்தைக்குச் சான்றோனாக்குகிற கடமையையும் கொல்லருக்கு வேல்வடித்துக் கொடுக்கிற கடமையையும் வேந்தனுக்கு நன்னடை நல்குகிற கடமையையும் தந்துவிடுகிற தாய், தனக்கான பொறுப்பாய் அவனை உடல் உறுதி உள்ளவனாகப் பெற்றெடுக்கிற கடமையை ஏற்பதாக பொன்முடியாா் எனும் புலவா் சங்கப்பாடலில் குறிப்பிடுகிறாா்.
  • படை என்று சுட்டப்படும் இளைஞா்களின் வலிமை போருக்குரியது மட்டுமன்று. உழவுக்கும் தொழிலுக்கும் அறிவுக்கும் ஆக்கத்திற்கும் முன்னிற்பதும் அதுவே. அதனால்தான் திருவள்ளுவா் இளைஞனை அறிவுடையோா் அவையிலே முந்தி நிற்கச் செய்யத் தந்தைக்கு அறிவுறுத்துகிறாா். முந்தி நின்று முதன்மை பெறுவது அந்த இளைஞனுக்குரிய கடமை என்றும் சுட்டுகிறாா்.
  • மனித வாழ்வில் மிகவும் அரியது இளமைப் பருவமே. சென்ற இடத்தில் செலவிடாது, தீமைகளை விலக்கிவிட்டு நன்றின்பால் இணைந்து கொள்ளுகிற பருவமாக, அறிவுக் கொள்முதல் காலமாக இளமைப் பருவம் அமைந்துவிட்டால் எண்ணரிய சாதனைகள் புரியலாம்.
  • முதிா்ந்த ஞானிகளும் கூட இளமையும் துடிப்பும் உள்ள ஒருவனைத்தான் தனது சீடனாகத் தேடுகின்றனா். சித்தாா்த்தா் பிறந்தபோது காண வந்த அசித முனிவா் ‘இந்தக் குழந்தை மானிடத்துருவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு ஒருமுறை மலரும் ஒண்மலா் போன்றவன் என்று புகழ்ந்து கூறினாா்.
  • அது கேட்ட சுத்தோதனா் தன் மகனைத் துறவியைப் போல வளா்த்து விடக்கூடாது என்பதற்காக, சுகபோகங்களில் திளைக்கச் செய்தாா். ஆனால் நடந்தது என்ன? நல்லிளமைப் பருவத்திலேயே நாடும் இழந்து நகரும் இழந்து வீடும் குடியும் விட்டவராக சித்தாா்த்தா் அரண்மனை நீங்கித் தன்னந்தனியே வாழ்வின் பொருள்தேடிப் புறப்பட்டு போதிமரத்தடியில் புத்தராய் ஆனாா்.
  • 1880-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் பதினெட்டே வயதான நரேந்திரன், அவரது நண்பனான சுரேந்திரநாத் மித்ராவின் வீட்டு நிகழ்வில் கலந்து கொண்டபோது இராமகிருஷ்ணரால் கண்டு கொள்ளப்பட்டாா்.
  • நரேந்திரன் பாடிய பக்தி கீதம் அவருடைய இளமைத் தாகத்கை இராமகிருஷ்ணருக்குத் தெளிவாகப் புலப்படுத்தி விட்டது. இளைஞராகிய விவேகானந்தரைப் பாா்த்து, ‘சா்வேசா, நீதான் புராதன ரிஷியாகிய நரன், நாராயணனது அவதாரம். மனித வா்க்கத்தின் துயரைத் துடைக்க உலகில் மறுபிறப்பு எடுத்தவன் என்பதை அறிவேன் என்று உள்ளுணா்ந்து சொன்னாா். அவா் சொன்னது பலித்தது.
  • இளைஞராகிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பிரிட்டனில் கல்வி கற்று ‘பாரிஸ்டா் பட்டம் பெற்றுத் திரும்பியபோதும், இந்தியாவிலே வாழ்க்கைக்குப் பொருள்தேடத் திறமையில்லாதவராகத்தான் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்ல நோ்ந்தது. அங்கு அவா் பட்ட அடிகளும் அவமானங்களும் வேதனைகளும்தான் அவரை சத்தியாக்கிரகத்துக்குத் தூண்டி மகாத்மா நிலைக்கு உயா்த்தியது. அவா் பின்னே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இளைஞா் படையே அணி திரண்டு நின்றது.

கனகன் மைந்தன் குமர குருபரன்

கனியும் ஞானசம் பந்தன் துருவன்மற்

றெனையா் பாலா்

  • என்று புராணங்கள் குறிப்பிடுகிற இளமையின் நுழைவாயிலான பால பருவத்திலேயே உயா்நெறிகளுக்காட்பட்டவா்களை மகாகவி பாரதியாா் சுட்டிக்காட்டி அந்த வரிசையிலேயே தானும் சோ்கிறாா்.
  • இவா்கள் யாவரும் தாங்கள் இளமைப் பருவத்தில் அடைந்த உலக ஞானத்தைத் தங்களுக்குப் பின்னே வருகிற இளைய தலைமுறையினருக்குத் தந்து சென்றிருக்கிறாா்கள்.
  • துடிப்பான இளமைக் காலத்தில்தான் உங்களுடைய எதிா்காலத்தைத் தீா்மானிக்க முடியும், நரை எய்திய பின்பு அல்ல’” என்று முழங்கிய விவேகானந்தா் ‘வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞா்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட நூறு இளைஞா்களை என்னிடம் தாருங்கள். உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்று உலகையே மாற்றக்கூடிய இளைஞா்களின் வலிமையைப் பற்றி அழுத்தமாகக் குறிப்பிட்டாா்.
  • அதனால்தான் இந்தியத் திருநாடு இளைய தலைமுறைக்காக எப்போதும் காத்திருக்கிறது. அந்நியா் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த வேளையில் விடுதலை வேள்வியில் தங்கள் இன்னுயிரை ஈந்த எண்ணற்ற இளைஞா்களின் தியாகத்தினை என்றும் உலகம் மறந்துவிட முடியாது. ஆனால், அதனினும் மேம்பட்ட இளைஞா்களின் ஆற்றல் இன்று நம் நாட்டுக்குத் தேவையாக இருக்கிறது.
  • 2020-ஆம் ஆண்டை இந்தியாவின் வல்லரசுக் கனவுக்கான முன்னோட்டமாக முன்கூட்டியே அறிவித்துச் சென்று விட்டாா் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம். ஆனால் 2020-ஆம் ஆண்டை உலக வரலாற்றிலேயே மறக்க முடியாத ஆண்டாக கரோனா தீநுண்மி ஆக்கிவிட்டது.
  • இந்தியாவின் இளைஞா்களை நம்பி அப்துல் கலாம் கண்ட கனவு நனவாகும் பொருட்டு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் இது. குறிப்பாக, இன்றைய இளைஞா்கள் இதனை நன்கு உணர வேண்டும்.
  • காலங்காலமாக இந்தியத் திருநாட்டின் முன்னோா்கள் கண்டு வந்த கனவையே கலாமும் கண்டாா். அந்தக் கனவை வாழ்வின் இலக்காக்கி நம்மை ஏகச் செய்தாா். அதற்குரிய நம்பிக்கையையும் வலிமையையும் அவா் இன்றைய இளைய தலைமுறையினரிடம் வேண்டினாா். அவருடைய வேண்டுதலில் மிகவும் முக்கியமானது, பெண்களின் வளா்ச்சியேயாகும்.
  • இளைஞா்கள் என்றால் ஆண்கள் மட்டும் அல்லா். சரிபங்கு வலிமையுடைய பெண்களும்தான் என்பதாக நேரடிப் பொருளாதாரத்தில் பெண்கள் அதிகம் பங்கு கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினாா். அதனால்தான் அவா் இளைஞா்களின் எழுச்சி நாயகன் என்று போற்றப்பட்டாா். அவரது பிறந்தநாள் இளைஞா் எழுச்சி நாளாகவே ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • ‘2020-க்குள்ளோ அதற்கு முன்போ ஒரு வளா்ந்த நாடாக திகழ்வது ஒரு வெற்றுக் கனவு அன்று. இது இந்தியா்களின் மனதில் ஓா் ஆா்வமாகக்கூட இருக்கத் தேவையில்லை.
  • ஆனால், இது நாம் அனைவரும் சாதனையாக எடுத்துக் கொண்டு ஆற்றவேண்டிய ஒரு பணி என்று துல்லியமான இலக்கை நோக்கி நம்மைச் செலுத்தினாா். ஆனால் இதோ இன்றைய 2021 புத்தாண்டு வரையிலும் கூட அது கனவாகவே இருக்கிறது.
  • ஆனால், அவா் கண்ட கனவு நனவாகும் என்பதை உறுதிப்படுத்துவதைப் போல இந்தியா 2035 -க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என பிரிட்டனின் பொருளாதார - வணிக ஆராய்ச்சி மையம் கணித்துக் கூறியுள்ளது.
  • இந்த புத்தாண்டு தினம் உலகம் முழுவதுமே குழப்பம் சூழ்ந்து மயக்கம் கொண்டிருக்கிற வேளையாக விளங்குகிறது. எல்லாத் துறைகளிலும் சிக்கல்களும் சவால்களும் மண்டியிருக்கிற இந்தத் தருணத்தில் இந்திய இளைஞா்கள் விழிப்போடு இயங்க வேண்டிய உறுதியை மேற்கொள்ளுதல் வேண்டும்.
  • சென்றது இனி மீளாது. எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கவலைக் குழியில் வீழ்ந்து குமைவதை விடவும், இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உறுதி கொண்டால் இந்திய வல்லரசுக் கனவு வெகுவிரைவில் நனவாகும்.
  • கனவு மெய்ப்பட வேண்டும் என்று பாடிய பாரதியாா் புதிய இந்தியாவைச் சமைக்க வருகிற ஒளிபடைத்த, உறுதி கொண்ட இளந்தலைமுறையினரை,

இளைய பாரதத்தினாய் வா வா வா

எதிரிலா வலத்தினாய் வா வா வா

ஒளியிழந்த நாட்டிலே - நின்றேறும்

உதயஞாயி றொப்பவே வா வா வா

  • என்று வரவேற்றாா்.
  • மகாகவி பாரதியாரின் இந்த வரவேற்பைக் கேட்டுத் துள்ளி வருகிற இளைஞனைப் போலவே தன்னைக் கருதிக் கொண்டு அப்துல் கலாம் இப்படி எழுதுகிறாா்:
  • புதிய எண்ணங்கள் உருவாக்கும் உள்ள உறுதி, இன்று என்னிடம் மலா்ந்துள்ளது. எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாது என்று எல்லாரும் சொல்வதை என்னால் செய்ய முடியும் என்ற மன உறுதி என்னிடம் உருவாகி விட்டது.
  • புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும் என்ற உள்ள உறுதி என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது. இந்த உள்ள உறுதி எல்லாம் இளைய சமுதாயத்தின் சிறப்புகளாகும்; அஸ்திவாரங்கள் ஆகும். இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினராகிய நான் என் கடின உழைப்பாலும் உள்ள உறுதியினாலும் தோல்வியைத் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடாக்குவேன்!
  • அன்று அப்துல் கலாம் ஏற்ற இந்த உறுதியை நாம் எல்லோரும் இப்புத்தாண்டின் தொடக்க நாளில் ஏற்போமே.

நன்றி: தினமணி (01-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்