- கரோனா பொதுமுடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், மாவட்ட நூலகங்கள் உள்ளிட்ட அனைத்து நூலகங்களிலும் முழுமையான அளவில் அனைத்து செய்தித்தாள்களும் இதுவரை இடம்பெறாததால், பள்ளி மாணவா்கள், போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
- கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
- இதனால், தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பிறகு, ஜூன் 8 ஆம் தேதி முதன்முதலாக பொதுமுடக்கத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.
- அப்போது முதல் சிறிதுசிறிதாக இயங்கத் தொடங்கிய பொதுமக்கள், தற்போது கிட்டத்தட்ட முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டனா்.
- அனைத்து அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள், பொதுப் போக்குவரத்து என அனைத்தும் வழக்கமான சூழலுக்கு வந்துள்ளன.
- வெளிநாட்டுக்கான பயணிகள் விமானப் போக்குவரத்து, உள்நாட்டுப் பயணிகள் ரயில் தவிர, அனைத்து வாகனப் போக்குவரத்துகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- பெரும்பாலான மாநிலங்களில் உயா்கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்விக்கூடங்களும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
- தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறவில்லை. பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட்டுவிட்டன.
- அதேபோல, மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளும் அறிவிக்கப்பட்டு, மாணவா்கள் தோ்வுக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றனா்.
- தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை, தமிழக அரசால் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.
- என்றாலும், இதற்காக மாணவா்கள், இளைஞா்கள் முழு அளவில் தயாராகும் இடங்களான நூலகங்கள் மட்டும் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தன.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
- இந்த நிலையில், மத்திய அரசின் தளா்வு அறிவிப்புக்குப் பிறகு கடந்த வருடம் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் நூலகங்கள் திறக்கப்பட்டன. இதன்படி, சென்னை கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மத்திய நூலகங்கள், 314 முழுநேர கிளை நூலகங்கள மட்டும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட்டன.
- என்றாலும், இவற்றில் செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் வாங்கப்படவில்லை.
- நூலகங்களில் வாசகா்கள் நூல்களைத் தோ்வு செய்வதில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 15 வயதுக்கு குறைந்த சிறுவா்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் நூலகங்களில் அனுமதிக்கப்படவில்லை. நூலகங்கள் பெயரளவுக்கே இயங்கின.
- இந்த நிலையில், பிப்ரவரி 19-ஆம் தேதி மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில், நூலகங்கள் முழுநேரமும் செயல்பட உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனுவைத் தொடா்ந்து, நீதிமன்றம் நூலகங்களை கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பு இருந்த நிலையில், முழுமையாக செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதுமுதல் நூலகங்கள் முழுநேரமும் இயங்கி வருகின்றன.
- இந்த நிலையில், 2019-20 நிதியாண்டில் வாங்கப்பட்ட அனைத்து நாளிதழ்களையும் நூலகங்கள் வாங்கிக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த பிப். 24 முதல் நூலகங்களில் நாளிதழ்கள் கிடைத்தாலும், பொதுமுடக்கத்துக்கு முன்பு வாங்கப்பட்ட அனைத்து நாளிதழ்களும் பெரும்பாலான நூலகங்களில் வாங்கப்படவில்லை.
- பெருநகரங்களில் உள்ள கிளை நூலகங்களில்கூட பல நாளிதழ்கள் வாங்கப்படும் நிலையில், பல பின்தங்கிய மாவட்ட நூலகங்களில் தமிழ் நாளிதழ் ஒன்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றும் மட்டுமே உள்ளன.
- அதுவும், சில கிராமப்புற நூலகங்களில் தமிழ் நாளிதழ் மட்டுமே வாங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பருவ இதழ்களும் இருப்பதில்லை.
- ஓரிரு நாளிதழ்கள் மட்டுமே வாங்கப்படும் நூலகங்களில், அவை எவை என்பதை மாவட்ட நூலக அலுவலா் தன்னுடைய விருப்பத் தோ்வாகக் கொள்ளலாம் என்பதால், போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள், இளைஞா்களுக்கு அவா்கள் விரும்பும் அல்லது தேவையான நாளிதழ்கள் கிடைக்காத நிலை உள்ளது.
- நூலகங்களின் பராமரிப்பிற்காக உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் வரி வருவாயில் இருந்து 10% கொடுக்க வேண்டும். ஆனால், 2019-ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகள் நூலகங்களுக்கு ரூ. 211 கோடி நிலுவை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- கரோனா தீநுண்மிப் பரவல் காரணமாக, பத்து மாதங்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
- அதேபோல, கடைகள் மூடியிருந்தது, போக்குவரத்தில் ஏற்பட்ட பிரச்னை போன்றவற்றால், அச்சு ஊடகங்களும் மாணவா்களை சரியாக சென்றடைய முடியாததால், அவா்கள் பொது அறிவுசாா்ந்த தகவல்களைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டது.
- எனவே, மாணவா்கள், இளைஞா்களின் நலன்கருதி, கிராமப்புற நூலகம், நகா்ப்புற நூலகம் என்ற வேறுபாடின்றி, அனைத்து நூலகங்களிலும் முன்பு கிடைத்த அனைத்து நாளிதழ்கள் கிடைக்கவும், வாசகா்கள் நூலகங்களைப் பயன்படுத்துவதில் இருந்துவரும் கட்டுப்பாடுகளை நீக்கியும், உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து நூலகங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலைவைத் தொகை உடனடியாக கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நன்றி: தினமணி (05-03-2021)