TNPSC Thervupettagam

புயல் வெள்ளத்தில் நோய் பரவாமல் தடுப்போம்

December 9 , 2023 205 days 142 0
  • பருவ மழை வெள்ளப் பெருக்கால் குடிநீரில் நுண்ணுயிர்த் தொற்றுநோய்க் கிருமிகள் கலந்து மனித உயிருக்கும் உடலுக்கும் பேராபத்தை விளைவிக்கும். வெள்ளப் பெருக்கு ஆபத்தால் குடிநீரும் கழிவு நீரும் ஒன்றுடன் இன்னொன்று கலந்து குடிநீர் பாழ்படுவது இயல்பான ஒன்று. இதனால், காலரா, வயிற்றுப் போக்கு, டிசன்டரி என்கிற மலவாய் ரத்த சீதபேதி, டைபாய்டு, ஜியாரிடியாசிஸ், அமிபியாசிஸ், குடல்புழு தொற்று, வைரஸ், மஞ்சள் காமாலை நோய்த்தொற்றுகள் குடிநீர்வழி மனித உடலில் புகுந்து ஒட்டுமொத்த நகர்வாழ் மக்களின் பொதுச் சுகாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும். இதைத் தவிர்க்க குடிநீரைக் கொதிக்கவைத்துப் பயன்படுத்தி பொதுச் சுகாதாரம் பேணலாம்.
  • நுண்ணுயிர் நோய்த் தொற்றுக் கிருமிகள் நீரின் வழியாக மட்டும் சமூகக் கட்டமைப்பைத் தாக்குவதில்லை. அசுத்தமான காய்கறிகள், பழங்கள், பொது சுகாதாரமின்மை காரணமாகவும் ஒரே நேரத்தில் நோய் பாதிப்பை உண்டாக்கி, ‘எபிடமிக்’ (Epidemic) என்னும் பேராபத்தை ஏற்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் முடக்குகிறது. எனவே, புயல் பேராபத்துக் காலங்களில் மாநகர மக்கள் குடிநீரைக் கொதிக்கவைத்துப் பருகினால் கிருமித் தொற்று நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

குடிநீரைக் கொதிக்க வைக்கும் முறை

  • மழைகாலங்களில் குழாய் நீர், ஆழ்துளைக் குடிநீர், கிணற்று நீர் ஆகியவை மாசடைந்த நிலையில் இருக்கும். இவற்றைக் குடிக்கத் தகுதியானதாக மாற்ற கிருமிகளை அழிக்க வேண்டும். அதற்கு நீரை 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் என்பது அந்த நீரின் கொதி நிலையி லிருந்து கணக்கில் கொண்டு அதாவது குமிழ்கள் உருவாகும் நிலையில் இருந்து நீரை 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டால் நோய்க்குக் காரணமான அனைத்து நுண்ணுயிர் கிருமிகளும் 100 சதவீதம் அழிந்து, அது பாதுகாப்பான குடிநீராக மாற்றப்படும். முக்கியமாக, கொதிக்க வைத்த நீரை வேறொரு பாத்திரத்தில் மாற்றிப் பயன்படுத்தக் கூடாது. நீரை அதே பாத்திரத்தில் மூடிவைக்க வேண்டும். நீரைக் கையாளும்போது கையாளும் நபர் தூய்மையாக இருக்க வேண்டும்.
  • 15 நிமிடங்கள் கொதிக்க வைப்பதால் கடின நீரும் மென்மையான நீராக மாற்றப்படும். இந்நீரில் உள்ள சுண்ணாம்புத் தாதுவான கால்சியம் கார்பனேட் துகள்கள் வீழ்படிவாகி மென்மையான நீராக மாற்றப்படும். நீரில் உள்ள கரி வளி வாயுக்கள் (Co2) வெளியேற்றப்பட்டு நீரின் சுவை சிறிது மாறுபடும். செலவில்லாத செயல்முறை இது. மழைக்காலத்தில் புட்டியில் அடைத்து விற்கப்படும் நீர் பாதுகாப்பானது என்று நம்பிவிட முடியாது. வர்த்தகத்திற்கான குடிநீர் கேள்விக்குரியது. இந்த நீரையும் அப்படியே நம்பிப் பயன்படுத்தாமல் குளோரின் மாத்திரையை அந்நீரில் கரைய வைத்து அதைப் பயன்படுத்தலாம்.

குளோரினேற்ற முறை

  • மாநகரங்களில் விநியோகிக்கப்படும் குழாய் வழி குடிநீர், குளோரினேற்ற முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகும். இந்த நீர் நம் வீட்டை வந்தடையும்போது ஒவ்வொரு லிட்டர் குடிநீரிலும் 0.5 மி.கி அளவு குளோரின் இருக்கும்படி பாதுகாப்பாக வீடு வந்து சேர்கிறது. மழைக்காலத்தில் இந்த நீரும் இதில் உள்ள எஞ்சிய குளோரின் அளவும் பாதுகாப்பானவையா என்பது கேள்விக்குறியே. காரணம், மாநகரங்களில் கழிவு நீர், புயல் வெள்ள நீர், குழாய் வழி குடிநீர் ஆகியவை பூமியின் ஆழத்தில் பயணிப்பதால் ஒன்றோடு இன்னொன்று கலந்து நோய் ஆபத்து நுண்ணுயிர்க் கிருமிகள் நம் வீடுவந்து சேரலாம். இதைத் தவிர்க்க நம் தேவைக்கு 20 லிட்டர் குடிநீரில் 0.5 கிராம் குளோரின் மாத்திரையைக் கரையவிட்டுப் பயன்படுத்தினால் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு மழைக்கால நீர்வழி பரவும் நோயிலிருந்து தள்ளி நிற்கலாம்.

அயோடின் கரைசல்

  • 2 சதவீத அயோடின் எத்தனால் திரவத்திலிருந்து 2 சொட்டு மட்டும் ஒரு லிட்டர் குடிநீரில் கலந்து நீரில் உள்ள நுண்ணுயிர் நோய்க் கிருமிகளை அழிக்கலாம். ஆனால், இந்தகைய குடிநீர் தைராய்டு நோய் இருப்பவர்களுக்கு உகந்தது அல்ல. மேலும், பீங்கான் வடிகட்டி மூலம் வடிகட்டுவது, ஒசோன் வாயு செலுத்துவது, புற ஊதாக் கதிர் பாய்ச்சுவது, பொட்டாசியம் பெர்மாங்கனேட் பயன்படுத்துவது ஆகிய வழிகளின் மூலம் அசுத்த நீரைச் சுத்த நீராக்கிப் பருகலாம். எதிர்த்திசை சவ்வூடுபரவல் (Reverse Osmosis) முறையில் நீர் போன்றவையும் பாதுகாப்பானதாக இருந்தாலும் கொதிக்க வைத்த நீர் 100 சதவீதம் பாதுகாப்பானது.
  • கை, கைவிரல், நகம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக்கொண்டு தனிமனித சுகாதாரத்தைப் பேண வேண்டும். கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஈ, கொசுக்கள் பரவாமல் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் தொற்றுநோய்கள் பரவுவது தவிர்க்கப்படும். மழைக்காலத்தில் உணவு, பழம் ஆகியவை பாழ்படாமல் பார்த்து எச்சரிக்கையுடன் உணவு சார்ந்த சுகாதாரத்தைக் கையாள வேண்டும். இவற்றை எல்லாம் புயல் வெள்ளப்போக்குக் காலத்தில் நினைவு கூர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

கை கழுவும் முறை

  • கைகளை நன்றாகத் தண்ணீரில் நனைத்து மணிகட்டுவரை சோப்பு நீரில் தோய்த்து உள்ளங்கைகளை ஒன்றோடு மற்றொன்றைத் தேய்க்க வேண்டும். இடது கைவிரல் இடுக்கில் வலது கைவிரல்களாலும் வலது கைவிரல் இடுக்கில் இடது கை விரல்களாலும் தேய்த்துக் கழுவ வேண்டும். உள்ளங்கை பக்கமாக இரண்டு கை விரல்களையும் கோத்து நன்றாகக் கழுவ வேண்டும். இடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்து, வலது கை விரல்களால் கட்டை விரலைப் பிடித்து முன்னும் பின்னும் அரைவட்டத்தில் சுழற்றித் தேய்த்துக் கழுவவேண்டும்.
  • மீண்டும் வலது கை கட்டை விரலை இடது கரத்தால் மேற்சொன்ன முறையில் கழுவ வேண்டும். கைவிரல் நகத்துவாரத்தில் கவனம் செலுத்தி உள்ளங்கையில் விரல் முனைகளைத் தேய்த்துக் கழுவி, துண்டால் துடைக்க வேண்டும். கழுவிய கைகளால் குழாய் மூடியைத் தொடாமல், துண்டால் குழாய்நீரை மூட வேண்டும். பழங்களைக் கழுவாமல் ஒருபோதும் சாப்பிடக் கூடாது. திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் பேராபத்தைத் தரும். பொதுச் சுகாதாரக் கேடு, தனிமனித சுகாதாரக் கேட்டால் நிகழும். மழைக்காலத்தில் நீரால் விளையும் ஆபத்தைக் கவனத்தில் கொண்டு ஒட்டுமொத்த மக்களின் நலன் காக்க அவரவர் அக்கறையுடன் சுகாதாரம் பேணி ‘எபிடெமிக் நோய்கள்’ பரவாமல் தடுக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்