TNPSC Thervupettagam

புரட்சிகரமான நடவடிக்கைகளை அரசு எடுக்காவிட்டால்,இந்தியாவும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும்

January 8 , 2020 1831 days 797 0
  • புதுடெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஜெயதி கோஷ், உலகின் முன்னணி வளர்ச்சிப் பொருளியல் அறிஞர்களில் ஒருவர். அரசின் வருவாய்க்கு ஏற்ப செலவைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்.
  • அரசு தனது செலவுகளை அதிகரிக்காமல், பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்ட முடியாது என்று நம்புகிறவர். உலக அளவிலான பொருளாதார மந்தநிலை, அடுத்த தலைமுறை இந்தியர்களுக்கு என்னவெல்லாம் நேரலாம் என்று பலதும் தொடர்பான அவருடனான உரையாடலின் சுருக்கம்.

உங்களுடைய குழந்தைப் பருவம் எப்படிப்பட்டது?

  • பாங்காக் நகரில் பிறந்தேன். அரசின் பொருளாதாரத் துறையைச் சேர்ந்த என் தந்தை சில மாதங்கள் அங்கு பணியாற்றினார். என் பெற்றோர் மீண்டும் டெல்லி வந்தபோது நான் இங்கு வளரலானேன். மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் சமூகவியல் படித்தேன். பொருளாதாரம்தான் சமூக உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை உணர்ந்தபோது, பொருளியல் படிக்கத் தீர்மானித்தேன். ஜேஎன்யுவில் முதுகலை முடித்த பிறகு கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்றேன். சில ஆண்டுகள் அங்கேயே ஆய்வாளராக இருந்தேன். அப்புறம், டெல்லி திரும்பிய பிறகு சிறிது காலம் மத்திய திட்டக் குழுவில் பணியாற்றினேன். பிறகு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியரானேன்.

உலக அளவில் 2020-ல் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று சர்வதேச முகமைகள் எச்சரித்துள்ளன; இந்தியாவின் நிலை எப்படியிருக்கும்?

  • பொருளாதார மந்தநிலை ஏற்படும்; புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தால், நாமும் நெருக்கடியில் சிக்குவோம். உலக நிதிச் சந்தையில் முதலீட்டாளர்கள் அச்சத்துடன் முடிவுகளை எடுப்பதைப் பார்க்கிறோம். எல்லா நாடுகளிலும் முதலீடுகளில் சரிவு ஏற்பட்டுவருகிறது. உலக அளவிலான இந்தச் சரிவுகளுக்கு முன்னதாக நம் நாட்டுக்குள்ளேயே சில பிரச்சினைகள் ஏற்பட்டன. முதலீட்டு வேகம் குறைந்தது, வேலைவாய்ப்புகள் குறைந்தன; நுகர்வும் சரிந்தது. அனைத்துமே மோசமான அறிகுறிகள்.
  • இவற்றுடன் ஏற்றுமதியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுவருகிறது. முதலீடு வெளிநாடுகளுக்குச் செல்கிறது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல; இந்திய முதலீட்டாளர்களும் சேர்ந்துதான். இந்தியாவில் வசிப்பவர்கள் வெளிநாடுகளுக்கு ஏராளமாகப் பணம் அனுப்புகின்றனர் காரணம், அரசின் தாராள அனுமதிக் கொள்கை. கடந்த காலாண்டில் மட்டும் நம் நாட்டுக்கு வரும் தொகையைப் போல 20% வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறது.

இந்த மந்தநிலை, வர்த்தகச் சுழலின் ஒரு பகுதியா அல்லது அமைப்புரீதியிலானதா என்றொரு விவாதம் நடக்கிறது; உங்கள் கருத்தென்ன?

  • இந்த விவாதமே முட்டாள்தனமானது. சுழலின் ஒரு பகுதி என்றால், வளர்ச்சி மேலே போய் பிறகு கீழே இறங்கி, மீண்டும் மேலே போக வேண்டும். தானாகவேயும் சுழல் ஏற்பட்டுவிடாது. வளர்ச்சி விகிதம் சரிந்தால், அது மேலே வர எதுவும் நடப்பதில்லை, அது அப்படியே கீழேயே நிலைப்பட்டுவிடுகிறது. இதைச் சுழற்சி என்றோ அமைப்பியல்ரீதியிலானது என்றோ கூறுவீர்களா? இந்த வார்த்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • நாம் இப்போது கீழ் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். நுகர்வோரிடையே கேட்பு குறைந்துவிட்டதால், இந்தச் சரிவு. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கவில்லை. எனவே, அவர்களால் எதையும் வாங்க முடியவில்லை. இதனால்தான், அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட துறைகளும் அடிவாங்குகின்றன.

இப்படி கேட்பு குறைவாக இருப்பதைச் சரிசெய்ய உங்களுடைய யோசனை என்ன?

  • அரசாங்கம் தலையிட்டு மக்களிடம் தேவையை ஏற்படுத்த வேண்டும், இதுதான் அடிப்படைப் பொருளாதாரம். வேலையுறுதித் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்கு அதிகம் செலவிட வேண்டும். விவசாயிகளின் கைகளில் அதிகப் பணம் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அவர்கள் அதிகமாக வாங்குவார்கள்; அதிகமாகச் செலவு செய்வார்கள். அது ஆக்கபூர்வமான பெருக்கல் விளைவைத் தரும். அது வருவாயை மேலும் அதிகப்படுத்தும், அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும், அதிக முதலீட்டைக் கொண்டுவரும். என்ன காரணத்தாலோ அரசு இதற்கு நேர்மாறாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிகம் செலவழிப்பதற்குப் பதில் செலவுகளைக் குறைத்துக்கொண்டிருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறதே?

  • நிதிப் பற்றாக்குறை வராமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தே சரியல்ல, அது மிகப் பெரிய பொய். அரசுத் துறை நிறுவனங்களுக்கு அரசு எதுவும் தருவதில்லை. உதாரணத்துக்கு இந்திய உணவுக் கழகத்தை (எஃப்சிஐ) எடுத்துக்கொள்வோம். தன்னுடைய இழப்புகளுக்கு அந்நிறுவனம் அரசிடமிருந்து ஆண்டுதோறும் மானியம் பெற்றாக வேண்டும். அரசு தரவில்லையென்றால், அவர்களால் இழப்பை ஈடுகட்ட முடியாது; அப்படியும் அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்?
  • அவர்கள் கடன் வாங்குகிறார்கள். எனவே, அது கடன் வாங்கி, அந்தக் கடனுக்கு வட்டி செலுத்துகிறது. இது மத்திய வரவு-செலவு அறிக்கையில் இடம்பெறுவதே இல்லை. இவற்றையெல்லாம் கணக்கில் சேர்த்தால், நிதிப் பற்றாக்குறை 3.3% அல்ல, இப்போதே 5% வரும் என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

வரிச் சலுகையால் முதலீட்டாளர்கள் ஊக்கம் பெறுவார்கள், அந்நிய நேரடி முதலீடு பெருகும், அமெரிக்க-சீன வர்த்தக மோதலால் இந்தியாவை நோக்கித் தொழிலதிபர்கள் வருவார்கள் என்று பலர் கூறுகின்றனரே?

  • ஒரு நிறுவனம் வேறு நாட்டுக்கு எதற்காகச் செல்லும்? அதிக லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான். அடித்தளக் கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருந்தால், கப்பல்கள் போக வர இடமில்லாமல் துறைமுகங்கள் அடைசலாக இருந்தால், பாதி நேரம் மின்வெட்டு ஏற்பட்டால் - அதற்காக அதிக செலவில் மாற்று மின்னுற்பத்தி சாதனங்களை நிறுவ நேர்ந்தால், தேவைக்கேற்ற பயிற்சிகளைத் தொழிலாளர்கள் பெறாமல் இருந்தால், தொழிலாளர்கள் வயிறாரச் சாப்பிடும் நிலைமை இல்லையென்றால், அவர்கள் குடியிருக்க பாதுகாப்பான வீடுகள் இல்லாவிட்டால், அவர்களுடைய உற்பத்தித் திறன் அதிகமாக இல்லாவிட்டால், எந்த வெளிநாட்டு முதலீட்டாளரும் இங்கே வந்து உற்பத்தியைத் தொடங்க மாட்டார்கள்.
  • வேறு வழியில் சொல்வதென்றால், வரி என்பது அவர்கள் பரிசீலிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று மட்டுமே. தொழிலதிபர்கள் பரிசீலிக்கும் அம்சங்களில் வரி என்பது 17-வது இடத்தில் வருகிறது என்கிறார்கள். வரி குறைவாக இருப்பதால்தான் முதலீடு செய்கிறோம் என்று நிறுவனங்கள் கூறினால், அயர்லாந்து நல்ல உதாரணம். அங்கே ஒரு நிறுவனம் பதிவுசெய்துகொள்ளும் அந்த அலுவலகத்தில் அதிகபட்சம் 10 பேர் மட்டுமே இருப்பார்கள்.
  • அது உண்மையான முதலீடு அல்ல. அமெரிக்க – சீன வர்த்தகப் போரால் ஏற்பட்ட வாய்ப்புகளை வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா ஆகிய நாடுகள் கைப்பற்றிவிட்டன அமெரிக்காவின் சில நிறுவனங்கள் அங்கே உற்பத்திப் பிரிவைத் தொடங்கிவிட்டன. அவை எதுவும் இந்தியாவுக்கு வரவில்லை, ஏன்? மற்ற அம்சங்கள் அனைத்திலும் நாம் மோசமாக இருக்கிறோம். மற்றவற்றை எப்படிச் சரிசெய்வது, பொது முதலீட்டின் மூலம்தான்.

நல்ல ஜிடிபி வளர்ச்சிக்கும் மோசமான ஜிடிபி வளர்ச்சிக்கும் எப்படி வித்தியாசம் காண்பீர்கள்?

  • அடிப்படையில், ஜிடிபிதான் முக்கியம் என்று பேசுவதும் புத்திசாலித்தனம் அல்ல. அது 5.2% ஆக இருந்தாலென்ன 7.1% ஆக வளர்ந்தால் என்ன? மக்களின் நல்வாழ்வோடு ஒப்பிட்டால் இவையெல்லாம் அர்த்தமற்றவை. வீடு வாசல் போன்றவைகூட அப்படிப்பட்டவைதான். மோசமான ஜிடிபி என்று சில உதாரணங்களைக் கூறினீர்கள். டெல்லியை எடுத்துக்கொள்வோம். மிகவும் பயங்கரமான, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும், நெரிசலான, வாழ்வதற்கே தகுதியில்லாத தனியார்மயப்பட்ட போக்குவரத்து ஏற்பாடுகளை வைத்திருக்கிறோம்.
  • இத்தனை லட்சம் தனியார் கார்கள், ஸ்கூட்டர்களுக்குப் பதில் சில ஆயிரம் பேருந்துகள், ரயில்கள் போன்றவற்றை மட்டும் பொதுப்போக்குவரத்துக்குப் பயன்படுத்தினால் ஜிடிபியில் சரிவு ஏற்படலாம், ஆனால், எல்லா மக்களுக்கும் தரமான வாழ்க்கை கிடைக்கும். ஜிடிபி என்பது தவறான அடையாளம். பொருளாதார அறிஞர்கள் சில காலமாக இதை அறிந்துள்ளனர்.

அப்படியென்றால் மாற்றுதான் என்ன?

  • பொருளாதாரரீதியாகப் பின்தங்கியிருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாகக் கொண்ட அட்டவணையை முதலில் தயாரிக்க வேண்டும். மக்கள்தொகையில் பாதிக்கும் - 50% - கீழே இருப்பவர்களின் நுகர்வு எப்படிப்பட்டது என்று முதலில் பார்க்க வேண்டும். அவர்களுக்கும் வசதியானவர்களுக்குமான பொருளாதார இடைவெளி ஆண்டுக்கு 5% குறைகிற அளவுக்கு நடவடிக்கை எடுப்பதை அரசு தனது இலக்காகக் கொள்ளலாம்.
  • உலக அளவில் வட்டிவீதம் குறைந்துவருகிறது. சில நாடுகளில் வட்டியே கிடையாது என்ற நிலை. ரிசர்வ் வங்கிகூட வட்டியைக் குறைத்துக்கொண்டேவருகிறது. சாமானியர்களுக்கு இதில் ஏதும் பயன்பாடு இருக்கிறதா?
  • சாமானியர்களைப் பொறுத்தவரை இது மிகவும் துயரகரமான செய்தி. பணி ஓய்வுக்குப் பிறகு பயன்படட்டும் என்று சேமிக்கும் ஒருவரிடம் ‘உன்னுடைய சேமிப்புக்கு மதிப்பே கிடையாது’ என்று சொன்னால் எப்படியிருக்கும்? இன்னும், 0% வட்டி அடுத்து -2%, -3% என்று எதிர்மறையான வட்டிக்குப் போனால், அது உழைக்கும் வர்க்கத்தின் மீதான தாக்குதலாகவே மாறும். இதற்கு முக்கியக் காரணம், உலகின் பெரும்பாலான நாடுகள் மக்கள் நலனுக்காகச் செலவுகளைச் செய்ய விரும்பாததுதான்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

  • 2008-ல் உலக அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு, மேற்கத்திய நாடுகள் வட்டி விகிதத்தைக் குறைத்தன. வட்டியைக் குறைத்தால் முதலீடு அதிகரிக்கும் என்று அவை நினைத்தன. முதலீட்டாளர்கள் லாப விகிதத்தையும் தாங்கள் பெறும் கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டு, அவ்விரண்டின் வித்தியாசம் எவ்வளவு என்று கணக்கிட்டனர்.
  • லாப விகிதம் குறையும் என்றால், கடனுக்குத் தாங்கள் கொடுக்க வேண்டிய வட்டி விகிதத்தையும் குறைத்துக்கொள்ள விரும்பினர். இதன் காரணமாகத்தான் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கின்றன என்கின்றனர். அரசே செலவுசெய்யத் தொடங்கினால், பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெறும். பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தேவை அதிகரித்தால் வட்டி விகிதம் உயர்ந்தாலும் கூடவே லாப விகிதமும் உயரும். எனவே, முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு ஏற்படும்.

சேமிப்புக்கு மிகக் குறைவான வட்டி அல்லது எதிர்மறையான வட்டி என்றால், உங்களுடைய சேமிப்பே அர்த்தமற்றதாகிவிடும் அல்லவா?

  • உண்மைதான். ஆனால், ‘இனி இப்படியெல்லாம்தான் பெரும் போக்காக இருக்கும்!’ என்று சொல்வதன் மூலம், நம்முடைய ஊடகங்கள் எப்படி மேல்தட்டு வர்க்கத்துக்கு ஆதரவாக மாறிவிட்டன என்று நாம் யோசிக்க வேண்டும். பணத்தைப் போட்டால் அதற்கு வட்டி கிடைக்காது, நாம்தான் அதை வைத்திருக்க வட்டிபோல ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால், அதை யார் விரும்புவார்கள். லேவாதேவிக்காரர்கள் போன்ற பண வியாபாரிகள்தான் அதை விரும்புவார்கள். அப்புறம் ‘வங்கியிலா டெபாசிட் செய்கிறீர்கள்; பரஸ்பர நிதியில் போடுங்கள்; நல்ல வருவாய் கிடைக்கும்!’ என்பார்கள்.
  • அடுத்து, ‘உடனடியாக இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நல்ல வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்’ என்பார்கள். ‘கடன் பத்திரங்கள், பங்குப் பத்திரங்கள் கொண்ட கலவை’ என்பார்கள். இவை எதுவுமே பெரும்பாலான மக்களுக்குப் புரியாது. மாதாமாதம் அறிக்கை அனுப்புவார்கள். அதைப் படித்தால் உங்கள் முதலீட்டால் லாபமா, நஷ்டமா என்பதுகூட உங்களுக்குப் புரியாது. அப்படியே அதில் வருமானம் வந்தாலும் தரகுக் கட்டணமாகவும் முதலீட்டுக் கட்டணமாகவும் அதில் பெரும் பகுதி பிடித்தமாகியிருக்கும். மொத்தத்தில் சாமானிய மக்கள் மீதான அடிதான் இது!

தொழிற்சாலைகளில் இயந்திரமயம் அதிகரித்துவருவதால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் லட்சியம் நிறைவேறுவது சாத்தியமா? அதிகத் தொழிலாளர்கள் இனி உற்பத்திக்குத் தேவையில்லை என்றால், ‘அனைவருக்கும் அடிப்படை ஊதியம் (யுபிஐ)’ என்பது போன்ற மாற்றுக் கொள்கை நோக்கி நாம் நகர வேண்டுமா?

  • ஒருகாலத்தில் தகவல் சொல்வதற்காகவே ‘ரன்னர்’ என்ற பெயரில் ஆட்களை வைத்திருந்தார்கள். இப்போது மின்னஞ்சல் மூலம் அல்லது செல்பேசி மூலம் தகவலைத் தெரிவிக்கிறோம். வரலாற்றைப் பார்த்தால், தொழில்நுட்பங்கள் மனிதர்களைப் பல வேலைகளை விட்டு விலக்கியிருக்கிறது. நவ தாராளவாதம் அமல்படுத்தப்பட்ட காலகட்டமும் உலகின் நான்காவது தொழில்புரட்சி காலகட்டமும் ஒட்டியவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், புதிய வேலைகளை உருவாக்குவதில் அரசு தலையிடாமல் ஒதுங்குகிறது. எனவே, புதிய வேலைகளை உருவாக்கும் பொறுப்பு சந்தையிடம் விடப்படுகிறது. அதிக லாபம் தரும் தொழில்களுக்கும் வழிமுறைகளுக்கும்தான் சந்தை முன்னுரிமை தருகிறது. அதிக லாபம் என்றால், மிகக் குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முறையால்தான் சாத்தியம்.

அப்படியென்றால், அதிகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் உற்பத்தியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

  • தொழிலாளர் உற்பத்தித் திறன் அதிகரிப்பு என்பதே இல்லாத சேவைத் துறைகள் உள்ளன என்று பொருளாதார அறிஞர் வில்லியம் பவ்மால் கூறுகிறார். பீ்த்தோவனின் சிம்பனி இசைக் கோவையை இசைக்க அதே எண்ணிக்கையிலான கலைஞர்கள் எப்போதும் அவசியம். இதில், ‘உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும்; பாதிப் பேர் இருந்தால் போதும்!’ என்றெல்லாம் சொல்ல முடியாது. சலிப்பூட்டுகிற வேலைகளுக்குக் குறைந்த தொழிலாளர்களே போதும் என்றால் அது நல்லதுதான்.
  • படைப்புக் கலைகளுக்கு, நோயாளிகள் - முதியோர் கவனிப்புக்கு, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு நிறைய பேர் தேவை. விடுதிகளில் அதிக ஊழியர்களும், மருத்துவமனைகளில் அதிக செவிலியர்களும் சுகாதாரப் பணியாளர்களும் உதவியாளர்களும் இருப்பது நல்லது.
  • வரைகலைஞர்கள், நிகழ்த்துக்கலைஞர்கள், இசை வல்லுநர்களும் அதிக எண்ணிக்கையில் இருப்பது நல்லது. கற்பனை வற்றியதால்தான் அலுவலக வேலைக்கு ஆட்கள்தான் தேவை என்று கருதுகிறோம். இப்போது இயந்திரங்கள் இந்த வேலைகளைச் செய்கின்றன. இப்போது இதைத் தாண்டியும் சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டோம்.

தொழிற்சங்கங்கள் வலுவாக இருக்கும் ஐரோப்பிய நாடுகளில்கூட அரசுகளின் சிக்கனக் கொள்கையை மாற்ற முடியவில்லையே? அதில் நியாயம் இருப்பதாக அவை நினைக்கின்றனவா?

  • உண்மையில் இந்தப் பிரச்சினையை நாம் ஆழ்ந்துபார்க்கத் தவறுகிறோம். உள்ளபடி, சிக்கன நடவடிக்கைகளில் நியாயம் இருப்பதாக அரசுகள் கருதவில்லை. பண வசதி மிக்க தொழிலதிபர்கள் தங்களுக்குச் சாதகமாக அரசியல்வாதிகளை வளைப்பதில் வல்லவர்கள். அவர்களுடைய திறமைகளை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். வான்கோழிகளைக்கூட இங்கே கிறிஸ்துமஸை ஆதரித்து வாக்களிக்கச் செய்ய முடியும்.
  • தங்களுடைய நலனுக்கு எதிரானது என்று தெரியாமலேயே மக்களும் பல கொள்கைகளை ஆதரிக்கின்றனர். ஊடகங்களும் இவற்றையெல்லாம் ஒரே கோணத்தில் மட்டுமே படம்பிடித்துக் காட்டுகின்றன.
  • வரிக்குறைப்பு நல்லது, அரசு செலவு அதிகரிப்பது நல்லதல்ல என்ற எண்ணம் வேரூன்றிவருகிறது. பொது விவாதத்தைத் திட்டமிட்டுத் திருப்புவது மேற்கத்திய நாடுகளாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் எளிதுதான்.

உற்பத்தித் துறை முதலாளிகளுக்கும் நிதித் துறை முதலாளிகளுக்கும் இடையே பிளவா? அரசின் கொள்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்குள் மோதலா?

  • 15 ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்தது. இப்போது உற்பத்தி முதலாளிகள் ஒவ்வொருவரும் நிதி நிறுவனத்தையும் வைத்திருக்கிறார். தொழில்களை விரிவுபடுத்திவிட்டனர். இப்போதைய வேறுபாடெல்லாம் பெருமுதலாளிகள், நடுத்தர – சிறு முதலாளிகள் என்பதுதான். சிறு, நடுத்தரத் தொழில்களால் பல்வேறு துறைகளுக்கு விரிவுபட முடியாது. ஏதோ ஒரு தொழிலை மட்டுமே செய்துதான் அவர்களால் வாழ முடியும்.
  • அவர்கள் பல வழிகளிலும் அலைக்கழிக்கப்படுகின்றனர். பெருமுதலாளித்துவத்தால்தான் விரிவுபடுத்த முடியும், தனக்காக அரசிடம் முறையிட்டு சலுகை பெற முடியும், அரசின் கொள்கையையே மாற்ற முடியும், ஊடகங்களை வழிக்குக் கொண்டுவர முடியும், தான் விரும்புகிறவற்றையெல்லாம் பெற முடியும். ஆனால், சிறு - நடுத்தரத் தொழில்களால்தான் அதிக வேலைவாய்ப்பைத் தர முடியும். இப்போதைக்கு தொழில்துறையில் இந்தப் பிளவு மட்டும்தான் நிலவுகிறது.

மோடி அரசின் கொள்கை வார்ப்பை ஒரே வரியில் குறிப்பிடுங்கள்?

  • அதிகபட்ச சலுகைசார் முதலாளித்துவம்.

சலுகை கேட்கும் சில முதலாளிகளிடம் நட்பாக இருந்துகொண்டே ஏராளமான சிறு, நடுத்தரத் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவாக இருக்க முடியுமே, இந்த அரசு அதைச் செய்கிறதா?

  • நிச்சயமாக இல்லை. முத்ரா கடன்கள் பற்றி நிறையப் பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் தரும் தொகையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. பெரும்பாலானவர்கள் ரூ.50,000-க்கும் கீழே பெறுகிறார்கள். அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? நடுத்தரத் தொழில் பிரிவுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நொடிந்துவிட்டன. இப்போது ஜிஎஸ்டி அவர்களைப் படுத்துகிறது.

அடுத்த தலைமுறை இந்தியர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. வாழ்க்கையின் தொடக்கத்தில் எனக்கொரு மகள் இருக்கிறாள். மக்கள்தொகை எண்ணிக்கை வகையில் நாம் பேரழிவை நோக்கிச் செல்கிறோம் என்று அஞ்சுகிறேன்.

மக்கள்தொகை அமைப்பால் நமக்கு நன்மைகள் ஏற்படும் என்றல்லவா பலர் பேசுகின்றனர்?

  • மக்களில் பெரும்பாலானவர்கள் சம்பாதிக்கும் வயதில் இருந்தால்தான் லாபம். அந்த வயதில் நிறைய பேர் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு வேலையில்லை என்றால் என்ன சொல்ல? அதனால்தான் சொல்கிறேன்... பேரழிவு என்று.
  • இதனால் சமூக, அரசியல் ஸ்திரமற்றதன்மை ஏற்படும். இதை அலட்சியம் செய்யலாம் அல்லது தற்காலிகமாகப் பசுவை ஆராதித்து, தாய்நாட்டை நேசிக்கச் சொல்லி, ஒரு பிரிவினரை கும்பலாகச் சேர்ந்து அடித்துக்கொன்று திசை திருப்பலாம்.
  • எப்படியும் இதெல்லாமும் கொஞ்ச நாட்களுக்குத்தான் சாத்தியம். அப்புறம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த முடியாது. பிறகு அராஜகம்தான் ஏற்படும். சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும். மேலிருந்து கட்டளையிட்டு நாட்டை ஒற்றுமைப்படுத்த எடுக்கும் முயற்சிகள், முறிந்துபோகவே வழிசெய்யும், இது என்னுடைய எதிர்மறையான கண்ணோட்டம்.

அப்படியானால், நேர்மறையான கண்ணோட்டம் எது?

  • என்னுடைய ஆசிரியர் ஜோன் ராபின்சன் கூறுவார், இந்தியாவைப் பற்றி நீங்கள் எதைச் சொன்னாலும் அதற்கு நேர்மாறானதுதான் உண்மை என்று. மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் இதை நினைத்துக்கொள்வேன். அசாத்தியமான துணிச்சல் - தனிப்பட்டவர்களிடம் அல்ல, சமுதாயமாக இந்தியர்களிடம் உள்ளது.
  • இந்தியச் சமூகம் கூட்டுக்கலவையாக இருந்தாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கொடூர வன்முறைக்குச் சென்றுவிடுவதில்லை. இதுதான் நம்முடைய பலம்!

நன்றி: இந்து தமிழ் திசை (08-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்