புரட்சிக் கலைஞர் கோச்செங்கணான்
- ‘பொதுவான இல்லம்’ எனும் பொருளில் அமைந்த பொதியில் என்ற சொல் சங்ககால இறையகங்களைக் குறிக்கும். எழுத்தணி கடவுளுடன் பொதியில், கந்துடைப் பொதியில், மண்டகப் பொதியில் முதலிய சங்க இலக்கியச் சொல்வழக்குகளும், ‘இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென’, ‘மரஞ்சோர் மாடம்’ எனும் சங்கத் தொடர்களும் அந்த இறையகங்களின் கட்டுமான அமைப்பைக் கண்முன் நிறுத்துகின்றன. நகர் என்றும் அழைக்கப்பட்ட அவற்றின் காலநிரலான அமைப்பு மாற்றங்களையும் அதற்கேற்ப உருவான பெயர்களையும் கோட்டம், கோயில் உள்ளிட்ட சிலப்பதிகாரச் சொல்வழக்குகளால் அறிய முடிகிறது.
- சங்க இலக்கியங்களில் இடம்பெறாத இறையகச் சொல்வழக்கொன்றைப் பத்திமை இலக்கியங்கள் முன்வைக்கின்றன. ‘மாடக்கோயில்’ என்ற அந்தச் சொல்லைக் கோச்செங்கணான் என்ற சோழவேந்தருடன் இணைத்துப் பேசும் பாங்கை மங்கையாழ்வாரின் திருநறையூர்ப் பாசுரத்திலும் ஞானசம்பந்தரின் வைகல் பதிகத்திலும் காண முடிகிறது. அதைப் பெருங்கோயில் என்றும் அறிமுகப்படுத்துவார் சம்பந்தர். இத்தகு கோயில்கள் எழுபது இருந்ததாகவும் அவற்றைக் கட்டமைத்தவர் திருக்குலத்து வளச்சோழரான கோச்செங்கணானே என்றும் மங்கையாழ்வார் உறுதிபடப் பாடியுள்ளார். தம் காலத்தே தமிழ்நாட்டிலிருந்த கோயில் கட்டமைப்பு வகைகளைச் சுட்டுமிடத்து, அவற்றைப் பெயரளவில் மட்டுமே குறிப்பிடும் அப்பர் பெருமான் அவற்றுள் ஒன்றான பெருங்கோயிலை மட்டும் எழுபத்தெட்டு என்று எண்ணிக்கையுடன் சொல்வார்.
- கோச்செங்கணான் எனும் சோழ அரசரின் பெருவீரம் மங்கையாழ்வாரின் திருநறையூர்ப் பாசுரத்தில் பலபடப் பேசப்பட்டுள்ளது. வெண்ணியில் விறல் மன்னரையும் விளந்தையில் அதன் வேளையும் அழுந்தையில் படை மன்னர்களையும் போரில் வெற்றிகண்டு உலகமாண்ட தென்னாடராக கோச்செங்கணானைப் பாடிப் பரவுகிறார் மங்கையாழ்வார். இம்மன்னன் மீது பொய்கையாழ்வாரால் பாடப்பெற்ற களவழிநாற்பது எனும் கீழ்க்கணக்கு நூலொன்றும் மன்னரின் வீரம், அவருக்கும் சேர அரசர் ஒருவருக்கும் நிகழ்ந்த போர், அப்போரில் சேர அரசர் உயிரிழந்தமை முதலிய பல வரலாற்றுத் தரவுகளை முன்வைக்கிறது.
- சோழர் காலச் செப்பேடுகள் சிலவற்றில் சோழர் மரபுவழி கூறுமிடத்துச் சுட்டப்படும் இக்கோச்செங்கணானின் காலம் குறித்துப் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், நெடிய ஆய்வுகளுக்குப் பின் டாக்டர் மா.இராசமாணிக்கனார் செங்கணான் காலத்தைப் பொதுக்காலம் 5ஆம் நூற்றாண்டாகச் சுட்டியுள்ளமை பொருந்துவதாகவே உள்ளது.
- சைவம், வைணவம் எனும் இருவேறு சமயஞ்சார் இலக்கியச் சான்றுகளால் கோச்செங்கணானோடு தொடர்புபடுத்தப்படும் மாடக்கோயில்கள் கட்டமைப்பில் புதியவை. அதனாலேயே, எத்தனையோ கோயில்களைப் பாடியுள்ள தேவார மூவரில் இருவரும் மங்கையாழ்வாரும் மாடக்கோயில்களைப் பாடுமிடத்து அவற்றை எழுப்பியவரையும் மறவாது அடையாளப்படுத்தியுள்ளனர். அதுநாள்வரை இருந்த கட்டமைப்புகளிலிருந்து மாடக்கோயில் மாறுபட்டு அமைந்ததாலேயே அதற்குப் புதிய பெயரும் கிடைத்தது. அதைக் கட்டியவருக்குப் பாடல் புகழும் அமைந்தது.
- தமிழ்நாட்டில் இன்றும் பார்வைக்குக் கிடைக்கும் இம்மாடக்கோயில்களில் பெரும்பாலானவை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலேயே அமைந்துள்ளன. அவற்றைக் கண்டறிந்து விரிவான அளவில் ஆய்வுசெய்து, ‘மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள்’ என்றொரு நூலையும் வெளியிட்டுள்ள டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்ற இறையகமே மாடக்கோயில் என்று வரையறை செய்துள்ளனர்.
- தளம் என்பது கட்டுமானம் சார்ந்த கலைச்சொல். இது தாங்குதளம், சுவர், கூரை எனும் மூன்று உறுப்புகள் கொண்ட அமைப்பாகும். இத்தளம் ஒரு மேடைபோல, உள்ளீடின்றி அமையும்போது வெற்றுத்தளமாகிறது. இறையகங்கள் பொதுவாக நிலத்திலோ, பாறை அல்லது குன்றுகளின் மீதோ அமையுமாறுபோல, மாடக்கோயில்கள் மூன்று உறுப்புகள் பெற்ற வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்றன. இந்த வெற்றுத்தளமே பிற கோயில் வகைகளிலிருந்து மாடக்கோயிலை வேறுபடுத்தி, அதைப் பெருங்கோயிலாகவும் வடிவமைத்தது. வெற்றுத்தளத்தின் உயரமும் கட்டமைப்புத் திறனும் கோயிலுக்குக் கோயில் மாறுபட்டாலும், அதன் மீதிருக்கும் இறையகத்தை அடைய அனைத்து மாடக்கோயில்களும் படிவரிசை பெற்றுள்ளன. இப்படிவரிசையின் அமைப்பு, உயரம், படிகளின் எண்ணிக்கை என அனைத்துமே இடத்திற்கு இடம் மாறுபட்டுள்ளன.
- பெரிய கோயில் என்றழைக்கப்படும் சிராப்பள்ளி மாவட்டத் திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர் கோயில் ஒரே திசையில் இரு படிவரிசைகள் பெற்ற மாடக்கோயிலாகும். அதன் வெற்றுத்தளக் கீழ்ப்பகுதியில் பிற்பல்லவர் காலச் சிற்பங்கள் தொடராக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பு. அதுபோலவே திருப்பேர் நகரிலுள்ள அப்பக்குடத்தான் மாடக்கோயிலும் முன்புறமொன்றும் பின்புறமொன்றுமாய் இரண்டு படிவரிசைகள் கொண்டுள்ளன. பாபநாசத்திற்கு அருகில் உள்ள திருநல்லூர் மணவழகர் மாடக்கோயிலின் இறையகமும் அதன் மேற்றளமும் இன்றும் பல்லவச் சுவடுகளுடன் மின்னுகின்றன. திருப்பணிகளுக்கு ஆட்பட்டுத் தண்டலை நீள்நெறி போன்ற சில மாடக்கோயில்கள் உருமாறியிருந்தாலும், சில கால வெள்ளத்தில் கரைந்துபோயிருந்தாலும் கோச்செங்கணான் பெயர் சொல்ல நாம் அறிந்தவரையில் 37 கோயில்கள் எஞ்சியுள்ளன.
- இயல்பான இறையகங்களுக்கு மாற்றாக ஏன் இந்த வெற்றுத்தள மாடக்கோயில்கள் என்ற கேள்விக்கு விடைகாண முயன்றவர்கள், தொன்மங்களையும் பலவாய்க் காரணங்களையும் முன்வைத்தபோதும், பெருமழைக்கால வெள்ளப் பெருக்கில் அக்கால இறையகங்கள் கரைந்து மறைந்தமை கண்ட சூழலில், அந்நிலையிலிருந்து கட்டுமானங்களைக் காப்பதற்காகவே ஒரு தடுப்புச்சுவர் போல கோச்செங்கணான் காலக் கட்டுமான அறிஞர்களால் இந்த வெற்றுத்தள அமைப்பு உருவாக்கப்பட்டது என்ற அறிவியல் பார்வை ஏற்புடையதாக உள்ளது.
- இம்மாடக்கோயில்களை உருவாக்கிய கோச்செங்கணானை நாயன்மார்களுள் ஒருவராக்கிச் சைவம் கொண்டாட, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மங்கையாழ்வாரோ நறையூர்ப் பாசுரப் பாடல்கள் அனைத்திலும் அவரைப் பல்வேறு சிறப்புச் சொற்களால் போற்றி மகிழ்ந்துள்ளார். கட்டுமானங்களுக்காகப் பாடலடிகளில் இப்படி இரு சமயப் பெரியவர்களின் போற்றல் பெற்ற ஒரே தமிழ் மன்னர் கோச்செங்கணான்தான்.
- வழக்கமான, இயல்பான முறைகளிலிருந்து மாறுபட்டுப் புதிய கோணங்களை நோக்கிப் பயணிப்பது புரட்சி என்றால், கோச்செங்கணானின் மாடக்கோயில்களும் கலையுலகப் புரட்சிதான். தமிழ் மண்ணில் இதுபோல் தங்கள் கட்டுமான அமைப்புகளால் புதிய கண்ணோட்டங்களுக்கான வாயில்களைத் திறந்த முதலாம் மகேந்திரர், ராஜசிம்மப் பல்லவர், முதல் ராஜராஜர் என்ற புரட்சிக் கலைஞர்களின் வரிசையில் முதலடி எடுத்துவைத்தவரும் கோச்செங்கணான்தான்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 11 – 2024)