TNPSC Thervupettagam

புரோட்டீன் பானங்களை அருந்துவது அவசியமா

July 2 , 2023 560 days 311 0
  • பளு தூக்குபவர்கள், ஜிம் உடற்பயிற்சியாளர்கள், உடல் கட்டழகை மேம்படுத்த விரும்புகிறவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரின் தசை வளர்ச்சிக்கு உதவும் வகையில் எர்வின் ஜான்சன் எனும் உடல் கட்டமைப்பாளர் (Body builder) பாலில் கலந்து அருந்தும்படி 1950களில் தயாரித்து அளித்த ‘புரோட்டீன் பவுடர்’ எனும் செயற்கை வகை சத்துப் பானம், இன்றைக்கு அனைவரும் அருந்தும் பானமாக மாறிவிட்டது.
  • இந்தியாவில் இந்த வகைப் பானங்களின் சந்தை விற்பனை மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 3,000 கோடிக்கும் அதிகம். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் இவற்றின் விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இருப்பினும், ஒரு மருத்துவராக ‘புரோட்டீன் பானங்களை அருந்துவது அவசியமா?’ எனும் கேள்வி என்னுள் எழுகிறது. அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் முன்பு ‘புரோட்டீன்’ என அழைக்கப்படும் புரதச் சத்தைப் பற்றிச் சற்று புரிந்துகொள்ள வேண்டும்.

புரதம் அதிமுக்கியம்

  • ஆற்று மணல் இல்லாமல்கூடக் கட்டிடம் கட்டிவிடலாம். செங்கல்லோ சிமென்ட் கற்களோ இல்லாமல் கட்டிடம் கட்ட முடியாது. அதேபோல், நம் உடலில் மாவுச்சத்து இல்லாமல்கூட உயிர் வாழ்ந்துவிடலாம். புரதச்சத்து இல்லாமல் உயிர்வாழ முடியாது. காரணம், நம் உடலில் எல்லாமே புரதம்தான். இதன் அடிப்படைக்கூறு அமினோ அமிலங்கள். மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன.
  • இவற்றிலிருந்துதான் பலதரப்பட்ட புரதங்கள் உருவாகின்றன. தலைமுடி முதல் கால்விரல் நகம் வரை உள்ள எல்லா செல்களின் பெருக்கத்துக்கு, தசைகளின் வளர்ச்சிக்கு, நோய் எதிர்ப்பாற்றலுக்கு எனப் பல வேலைகளுக்கு இந்தப் புரதங்கள்தாம் உதவுகின்றன. இன்னும் சொல்லப்போனால், உடலில் பல்வேறு வேதிவினைகளை மேற்கொள்ளும் என்சைம்கள் எல்லாமே புரதங்கள்தாம். பெரும்பாலான ஹார்மோன்களும் புரதங்கள்தாம். நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்குப் புரதங்கள் கிடைக்கவில்லை என்றால் நமக்குத் தசை இழப்பு ஏற்படுவதும், உடல் மெலிவதும், நோய் எதிர்ப்பாற்றல் குறைவதும் உறுதி.

புரதம் எவ்வளவு தேவை?

  • சராசரியாக ஒரு நபருக்குத் தினமும் அவரது ஒரு கிலோ உடல் எடைக்கு ஈடாக 1 கிராம் புரதம் தேவை. உதாரணத்துக்கு, 60 கிலோ எடையுள்ள ஒருவருக்குத் தினமும் 60 கிராம் புரதம் தேவை. இதே எடையுள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பருவ வயதுப் பெண்கள், உடல் நலம் மீண்டுவருபவர்கள் ஆகியோருக்கு இந்த அளவுடன் தினமும் 30 கிராம் புரதம் கூடுதலாகத் தேவை. அதாவது, 90 கிராம். வளரும் குழந்தைகள், பளு தூக்குபவர்கள், உடல் கட்டமைப்பு செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்குத் தினமும் 120 கிராம் தேவை. இந்த அளவுக்குப் புரதங்களை நாம் உண்ணும் உணவு வழியாகவே எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக முட்டை, இறைச்சி, பால், பருப்பு, பனீர், சோயா, காளான், கொட்டைப்பருப்புகள் போன்ற உணவுப் பொருள்களில் நிறைய புரதம் உள்ளது. ஆனால், பலரும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களின் கவர்ச்சிக்கு மயங்கி, புரோட்டீன் பவுடர்களிடம்தான் தஞ்சம் அடைகின்றனர்.

எது புரோட்டீன் பவுடர்?

  • விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால் பொருள்கள், முட்டை போன்றவற்றிலிருந்து அல்லது தாவரங்களிலிருந்து பெறப்படும் பட்டாணி, சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கு, அரிசி போன்றவற்றிலிருந்து புரோட்டீன் பிரிக்கப்பட்டுப் பொடியாக்கப்பட்டு, சுவையூட்டிகள் கலக்கப்பட்டுச் செயற்கையாகத் தயாரிக்கப்படும் பவுடர்களை ‘புரோட்டீன் பவுடர்கள்’ என்கிறோம். இவற்றை ‘துணை உண’வாகப் (Food supplement) பயன்படுத்தலாம் எனப் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது, இந்திய உணவுப் பாதுகாப்பு - தரப்படுத்தல் ஆணையம் (The Food Safety and Standards Authority of India - FSSAI). ஆனால், இது யாருக்குத் தேவை, யாருக்குத் தேவையில்லை என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை இந்த ஆணையம் பயனாளியிடம் விட்டுவிடுகிறது. அதனால், பலரும் இவற்றின் பயன்பாட்டில் குழம்பிப்போகின்றனர். கூடுதலாகப் புரதத்தை எடுத்துக்கொண்டால் தசைகள் வலுப்பெற்றுவிடும் என்று கருதுகின்றனர். கூடுதல் புரதங்களுக்கு புரோட்டீன் பவுடர்களை நாடுகின்றனர்.

பயன்படுத்துபவர்கள் யார் யார்?

  • சவலை நோய், காசநோய், புற்றுநோய் போன்றவற்றால் உடல் நலம் குறைந்தவர்களின் உடல் ஊட்டத்துக்குச் சத்துள்ள உணவு வகைகளோடு புரோட்டீன் பானங்களையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். தேவைக்கு உணவு எடுத்துக்கொள்ள இயலாத இச்சூழல்களில் தற்காலிகமாக புரோட்டீன் பானங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், பொதுச் சமூகத்தில் உடல் எடையைக் கூட்ட புரோட்டீன் பானம் அருந்துபவர்கள் இருக்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக புரோட்டீன் பானம் அருந்துபவர்களும் இருக்கிறார்கள்.
  • தங்கள் உணவில் புரதச் சத்து குறைவாக இருப்பதாகக் கருதும் சைவ உணவாளர்களில் பலரும் இடைவேளை நேரங்களில் புரோட்டீன் பானத்தை எடுத்துக்கொள்கிறார்கள். முழுமையான உணவு எடுத்துக்கொள்ள நேரம் இல்லாதவர்களும் அவசரத்துக்கு புரோட்டீன் பானத்தைப் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள் போன்றோர் உடனடியாக உடல் கட்டமைப்பைக் கூட்ட வேண்டும் எனும் ஆர்வத்தில் புரோட்டீன் பானத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

வே’ புரோட்டீன் பவுடர் நல்லதா?

  • ஜிம்களில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் இளைஞர்கள் ‘வே’ (Whey), ‘கேசீன்’ (Casein) போன்ற புரோட்டீன் பவுடர்களை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். எளிதில் செரிமானம் ஆகும் இந்தப் பவுடர்கள் பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவசியமான அமினோ அமிலங்கள் எல்லாமே இவற்றில் அடங்கியுள்ளன. ‘வே’ புரோட்டீன் பவுடரில் ‘வே ஐசோலேட்’, ‘வே கான்சென்ட்ரேட்’, ‘வே ஹைட்ராலிசேட்’ என மூன்று வகை உண்டு.
  • இவற்றில் ‘வே ஐசோலேட்’ வகை சிறந்தது. இதில் 100 கிராம் பவுடருக்கு 90 கிராம் வரை புரதம் இருக்கும். ஆனால், இதன் விலை மிக மிக அதிகம். பளு தூக்குபவர்கள், நல்ல உடல் கட்டமைப்புக்கு முயல்பவர்கள், தடகள விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் போன்றோர் மருத்துவர் பரிந்துரையின் பேரில் இதைப் பயன்படுத்தலாம். அதேவேளையில், பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்த முடியாது. இந்தப் பவுடர்களைப் பயன்படுத்த நினைப்பவர்கள் அதற்கு பதிலாக அன்றாட உணவில் முட்டை, இறைச்சி, காளான், பருப்பு வகைகள், சோயா போன்ற உணவு வகைகளைக் கூடுதலாக எடுத்துக்கொண்டால், குறைந்த செலவில் தேவையான அளவுக்குப் புரதங்களைப் பெற்றுவிட முடியும். வீண் செலவு தேவையில்லை.

தவறான நம்பிக்கைகள்

  • பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் புரோட்டீன் பவுடர்களில் முழுக்க முழுக்க புரோட்டீன்தான் இருக்கிறது என்று பலரும் நம்புகின்றனர். அப்படியில்லை என்பதுதான் நிதர்சனம். பெரும்பாலும் அவற்றில் சர்க்கரைதான் அதிகம். புரோட்டீன் குறைவாகத்தான் இருக்கிறது. தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து புரோட்டீன் பவுடர்களில் புரதத்தின் அளவு மாறும். ஆனாலும், பயனாளிகள் எதிர்பார்ப்பதுபோல் புரோட்டீன் பவுடரில் புரதம் அதிகமாக இருக்காது என்பதும், உடல் எடையைக் கூட்டும் மந்திரப்பொடி அது இல்லை என்பதுமே கள உண்மைகள்.
  • அடுத்து, பளு தூக்குபவர்கள் புரோட்டீன் பானங்களை அருந்துவதால்தான் அவர் களுக்குத் தசைகள் உருண்டு திரண்டு வலுவாக இருப்பதாக மற்றவர்கள் எண்ணிக்கொள் கின்றனர். இதுவும் தவறான நம்பிக்கைதான். தசைகள் வலுப்பெறுவதற்கு முக்கியக் காரணம், பளு தூக்குபவர்கள் மேற்கொள்ளும் கடினமான உடற்பயிற்சிகளே தவிர, புரோட்டீன் பவுடர்கள் முழுக் காரணம் அல்ல.

ஆபத்துகளும் உண்டு

  • உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் புரோட்டீன் பவுடரை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தால், அது யூரியாவாக மாறி சிறுநீரில் கடத்தப்படும். அப்போது சிறுநீரகத்துக்குச் சுமை கூடும். மேலும், ஏற்கெனவே சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் புரோட்டீன் பவுடர்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரகப் பாதிப்பு மோசமாகிவிடும். உடல் உறுப்புகளில் புரதம் உடைக்கப்படுவதால் உண்டாகும் அமோனியா வாயு மூளை தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  • புரோட்டீன் பவுடர்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, அவற்றில் கலந்துள்ள அதீத சர்க்கரை, பயனாளிக்கு நீரிழிவு நோயை வரவழைக்கும். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் அநேக புரோட்டீன் பவுடர்களில் வரையறுக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பாதரசம், ஈயம், காட்மியம், ஆர்செனிக் போன்ற கடின உலோகங்கள் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

தேவை சரியான உணவுமுறை

  • உடலில் தசைகள் வலுப்பெற விரும்பு கிறவர்கள் தங்கள் உணவுமுறையைச் சீரமைத்து உடற்பயிற்சி செய்தாலே போதும். புரோட்டீன் பவுடர்கள் தேவையில்லை. அசைவம் சாப்பிடுபவர்கள் தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். தினமும் 200 மி.லி. பால், 200 மி.லி. தயிர் சேர்த்துக்கொள்ளலாம். அன்றாடம் பருப்பு வகைகளைக் கொஞ்சம் அதிகப்படுத்திக்கொள்ளலாம். சோயாவில் தயாரிக்கப்பட்ட ‘மீல் மேக்கர்’ சாப்பிடலாம். காளான், பனீர் சேர்த்துக்கொள்ளலாம். வாரத்தில் மூன்று நாள்களுக்கு இறைச்சி சேர்த்துக் கொள்ளலாம். இவற்றின் வழியாகத் தரமான புரதங்களை எளிதாகவும் விலை மலிவாகவும் பெறலாம். தனிநபரின் கூடுதல் புரதத் தேவைக்குச் செயற்கையாகப் பெறப்படும் புரோட்டீன் பவுடர்களைச் சார்ந்திருக்காமல், இயற்கை உணவு வகைகளின் வழியாகப் புரதத்தைப் பெறுவதே நல்லது என்பதைப் பயனாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தி இந்து (02 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்