- மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு, பாடம் சார்ந்த கல்வியுடன் உடற்கல்வியும் விளையாட்டும் அவசியம். ஆனால், தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் அந்தச் சூழல் இல்லை என்பதுதான் கவலையளிக்கும் விஷயம். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், 1, 2 வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி இயக்குநர் (நிலை 1) பணியிடமும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுமதிக்கப்படுகின்றன.
- ஆனால், நிறைய பள்ளிகளில் நிரந்தர உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத சூழலில், தற்காலிக ஆசிரியர்கள் மூலம்தான் உடற்கல்வி போதிக்கப்படுகிறது.
- வாரத்துக்கு மூன்றரை நாள் எனும் கணக்கில், ரூ.10,000 தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் அந்தத் தற்காலிக ஆசிரியர்களை முறையான ஊதியத்தில் எல்லா நாளிலும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கைக்கு எந்தப் பலனும் இல்லை.
- அந்தப் பணியிடங்களைக் கருணை அடிப்படையில், ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியர்களைக் கொண்டோ, போட்டித் தேர்வு மூலம் புதிய முழுநேர உடற்கல்வி ஆசிரியர்களைக் கொண்டோ நிரப்ப வேண்டும் எனும் கோரிக்கைக்கும் பலன் கிடைக்கவில்லை.
அதிரடி அரசாணை:
- இத்தகைய சூழலில் ஏப்ரல் 5 அன்று, பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 3,123 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 507 பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளன.
- அதுவும் 1, 2 வகுப்புகளில் 400 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே உடற்கல்வி இயக்குநர் (நிலை 1) பணியிடம் அனுமதிக்கப்படும்; 400 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள 163 மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி இயக்குநர் (நிலை 1) பணியிடம் சரண் செய்யப் பட்டு, அந்த ஆசிரியர்களை, 400 மாணவர்களுக்கு மேல் உள்ள உடற்கல்வி இயக்குநர் இல்லாத பள்ளிகளில் கலந்தாய்வு மூலம் நியமிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- அப்படியெனில், 400க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு உடற்கல்விப் பாடம் தேவையில்லையா எனும் கேள்வி எழுகிறது. மேலும், அனைத்துச் சிற்றூர்களிலும் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்போது, அருகருகே உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 1, 2 வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கட்டாயம் 400 ஆக இருக்க வேண்டும் என்பது சாத்தியமா? முறையான உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கும்போது, உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் சரண் செய்யப்பட வேண்டும் என்பது சமூக நீதியா?
- கிராமப்புறப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் போதிய அளவு ஏற்படுத்தி, தேவையான ஆசிரியர்களை நியமித்து, அவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தினால் கல்வித் திறனும் மேம்படும், இடைநிற்றல் சதவீதமும் குறையும். தமிழ்நாட்டுக்குத் திறமையான விளையாட்டு வீரர்களும் கிடைப்பார்கள்.
தேவை உடனடி நடவடிக்கை:
- வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கு காரணமாக, பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ஆணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அவசியம். விளையாட்டுத் துறை, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், பல முக்கியப் பணிகளை முன்னெடுத்துவருகிறார். அவர் மனதுவைத்தால் உரிய தீர்வு கிடைக்கும் என்பதுதான் மாணவர்கள் மீது அக்கறை கொண்டோரின் நம்பிக்கை!
நன்றி: தி இந்து (26 – 04 – 2023)