TNPSC Thervupettagam

புறக்கணிக்கப்படும் பெண்கள்

March 2 , 2025 5 hrs 0 min 103 0

புறக்கணிக்கப்படும் பெண்கள்

  • தமிழகம் முழுக்க புத்தகக் காட்சி ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. புத்தகக் காட்சிகளில் தொடர்ந்து பேசும் பேச்சாளர்கள் குறித்தும், தொடர்ந்து சிலர் மட்டுமே அழைக்கப்படுவது குறித்தும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. புத்தகக் காட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும் செலவிடப்பட்டும் தொகை குறித்தும் வெளிப்படைத்தன்மை இல்லை என்கிற விவாதத்தையும் பார்க்க முடிகிறது. 2023-24 தமிழக பட்ஜெட்டில் புத்தகச் சந்தைக்கென 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. எனினும், ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒவ்வொரு விதமான சன்மானம் எனும் விதத்தில் பேதங்கள் தொடங்குகின்றன.
  • எல்லா எழுத்தாளர்களும் நல்ல பேச்சாளர்கள் இல்லை என்கிறார்கள். எல்லாப் பேச்சாளர்களும் நல்ல எழுத்தாளர்கள் இல்லையே. இசை குறித்த பட்டிமன்றம் நடக்கும்போது அங்கு இருக்கக்கூடிய பட்டிமன்ற பேச்சாளர்கள்தான் பாடல்களைப் பாடுவார்கள். அதற்காக சினிமா பாடகர்களை அழைத்து வந்து அங்கு பாட வைப்பது இல்லை. சில எழுத்தாளர்கள் நன்றாகப் பேசக்கூடியவர்களாக இல்லாவிட்டால்கூட, அவர்கள் சொல்லும் கருத்து மிக முக்கியமானதாக, சமூகத்திற்குத் தேவையான ஒன்றாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும்போது அவர்களோடு திறமையாகப் பேசக்கூடிய எழுத்தாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

பெண்கள் எங்கே?

  • இவ்வளவையும் மீறி நான் கேட்க நினைப்பது ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் எழுதக்கூடிய பெண்களின் சதவீதம் எவ்வளவு, அவர்களில் எத்தனை பெயர் தங்களுடைய நெருங்கிய சொந்தங்களிடம் தாங்கள் ஓர் எழுத்தாளர் என்பதைச் சொல்ல இயல்கிறது என்பதைத்தான். ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் ஒட்டுமொத்த எழுத்தாளர்களின் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றனவா, அவற்றில் எல்லாரும் அந்தந்த மாவட்ட புத்தகக் காட்சியில் பேச வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதைப் பரிசீலித்திருக்கிறார்களா? குறிப்பாக எந்தவிதமான அடையாளமோ அங்கீகாரமோ இல்லாத பெண்களைப் புத்தகக் காட்சிகளில் எந்த அளவுக்கு அங்கீகரிக்கிறோம், அடையாளப்படுத்துகிறோம்? புதிய மாதவி, நிவேதிதா லூயிஸ், கவிதா சொர்ணவல்லி போன்றவர்கள் ஒருபோதும் நெல்லை புத்தகக் காட்சியின் மைய மேடையில் பேசியது இல்லை. இவர்கள் நவீனப் பெண்ணிய வாழ்வைச் சமூகவியல் சார்ந்தே எழுதுகிறார்கள். எழுதும் பெண்களுக்குப் பெரும்பாலும் அங்கீகாரமோ அடையாளமோ கிடைக்காத ஒரு சமூகத்தில் அந்த ஊரில் வசிக்கும் ஒரு பெண் அந்த ஊரின் புத்தகக் காட்சியில் ஒலிபெருக்கியைப் பிடித்து, “நான் உங்க ஊர் எழுத்தாளர்” என்று தன் உரையை ஆரம்பித்தால் எவ்வளவு பெருமிதமாக இருக்கும்?

ஏன் இந்தப் பாகுபாடு?

  • திரும்பத் திரும்ப சிலருக்கே இடம் கொடுக்கும் புத்தகக்காட்சியில் ஏன் ஹெப்சிபா ஜேசுதாசனைப் பற்றியோ அழகிய நாயகியம்மாளைப் பற்றியோ சரோஜினி பாக்கியமுத்து பற்றியோ ஒரு கருத்தரங்கம் ஏற்பாடுச் செய்யப்படவில்லை? இந்தப் பாகுபாடுகளைச் சமன் செய்யத்தான் விமர்சனங்கள் எழுகின்றன. இப்படியெல்லாம் பேசினால் அரசு புத்தகக் காட்சியை நடத்தாமல் போய்விடும் என்று பதில் சொல்லி பயமுறுத்துவதெல்லாம் பூச்சாண்டி காட்டுவது போலத்தான்.
  • கேரளத்தில் பம்பா இலக்கியத் திருவிழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. அந்தத் திருவிழா, கேரளத்தில் இருக்கக்கூடிய எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்களை உள்ளடக்கி நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் புதுப்புது குரல்கள் அங்கு ஒலிக்கின்றன. அந்தக் குரல்களின் வீச்சு அந்த அரங்கத்தை நிரப்பிப் புதிய புத்தகங்களின் புதிய உலகத்திற்கு எல்லாரையும் அழைத்துச் செல்கிறது. அப்படியல்லவா இருக்க வேண்டும் ஒரு புத்தகக்காட்சி?
  • இந்த அரசு எழுத்தாளர் களுக்குப் பல நல்ல விஷயங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. ஆனால், அதில் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாமலேயே போய்விடும் அளவுக்கு இடைத்தரகர்கள் அதை மிக அழகாக, நேர்த்தியாகத் திரையிட்டு மறைத்துவிடக் கூடாது. மறுபடி மறுபடி சிலரை மட்டுமே மேடையேற்றிக் கொண்டிருந்தால் புத்தகக் காட்சிகள் வறண்ட இலக்கியப் பிரதேசமாக, டெல்லி அப்பளம் சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் பொருட்காட்சித் திடலாக மட்டுமே இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்