- அவர் 50 வயது நிரம்பிய சுமை தூக்கும் தொழிலாளி. பல் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டதும் சிகிச்சைக்குச் சென்றார். அவருக்கு வாய் நலம் மிகவும் கெட்டுப்போயிருந்தது. காரணம், புகையிலை மெல்லும் பழக்கம்.
- அதை விட்டொழிக்க வேண்டும் என்று பல் மருத்துவர் வலுவாக எச்சரித்தார். அந்தத் தொழிலாளி அதை நிராகரித்தார்.
- ஆறு மாத இடைவெளியில் மறுபடியும் அவருக்குப் பற்களில் பிரச்சினை. அப்போதும் புகையிலைப் பழக்கத்தை அவர் கைவிடவில்லை. அடுத்த சில மாதங்களில் வாய்க்குள் ஆறாத புண்கள் வந்து படுத்தின. இந்த முறை அவருக்கு வாயில் புற்றுநோய் இருப்பதாகச் சோதனை முடிவுகள் முத்திரை குத்தின. இப்போது அவர் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
வாய் நலம் முக்கியம்
- நம் வாய்க்குள் சாதாரணமாகவே 400-க்கும் மேற்பட்ட பாக்டீரியா இனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
- காலையில் எழுந்ததும் பல் துலக்கி, ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும் நன்றாக வாயைக் கொப்பளித்து, இரவிலும் ஒருமுறை பல் துலக்கி வாய் நலம் காத்தால், இந்த பாக்டீரியாக்கள் சமர்த்தாகவே இருக்கின்றன.
- புகைபிடிப்பது, புகையிலை மெல்லுவது, குட்கா மற்றும் பான்மசாலா பயன்பாடு போன்றவற்றால் வாய் நலம் கெடும்போது, இந்த பாக்டீரியாக்கள் தூண்டிவிடப்படுகின்றன.
- அதன் விளைவாக, அவை கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களாக மாறிவிடுகின்றன. அப்போது, ஈறுகள் அடிக்கடி வீங்குகின்றன. வீக்கத்தில் சீழ் பிடிப்பது, பற்களில் சொத்தை விழுவது, வாய்ப்புண் எனப் பலதரப்பட்ட பிரச்சினைகளை அவை கொண்டுவருகின்றன.
- சமயங்களில் அவை வாய்க்குள் புற்றுநோயை உண்டுபண்ணும் அளவுக்கு வீரியமும் பெற்று விடுகின்றன.
- அப்படி அண்மையில் கண்டறியப்பட்ட பாக்டீரியா ஒன்றின் பெயர் ‘ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ (Fusobacterium nucleatum). கட்டுரையின் ஆரம்பத்தில் அறிமுகமான சுமை தூக்கும் தொழிலாளிக்குப் புற்றுநோயைப் புகுத்தியது இந்த பாக்டீரியாதான்.
புற்றுநோய்த் தொற்றுக் கிருமிகள்!
- உடலில் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ் இனங்களில் சில வகை மட்டும் புற்றுநோயையும் உண்டுபண்ணும் என்பது ஏற்கெனவே தெரிந்த உண்மை தான்.
- உதாரணத்துக்கு, இரைப்பையில் குடித்தனம் நடத்தும் ‘ஹெலிக்கோ பாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் பாக்டீரியா இரைப்பையில் புற்றுநோயை ஏற்படுத்தும்.
- கல்லீரலைப் பாதிக்கும் ‘ஹெபடைடிஸ் – பி வைரஸ்’ (Hepatitis-B Virus-HBV) ‘ஹெபடைடிஸ் – சி வைரஸ்’ (Hepatitis-C Virus-HCV) ஆகியவை கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
- பெண்களைப் பாதிக்கும் ‘ஹுயுமன் பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus- HPV) கருப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும்.
- உலக அளவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அறியப்பட்ட புற்றுநோய்களில் 20% வரை பல வகைத் தொற்றுக்கிருமிகளால் ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் உறுதி செய்துள்ளன. இந்த சதவீதம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
புற்றுநோய்க்கு வித்தாகும் புகையிலை
- இந்தச் சூழலில், நவி மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தில் ஆய்வாளர் அமிட் தத் (Amit Dutt) தலைமையில் இயங்கும் உயர்தர புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தினர் (ACTREC-Tata Memorial Centre), ‘ஹுயுமன் பாப்பிலோமா வைரஸ்’ தொடர்பான மரபணு பகுப்பாய்வுச் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
- இந்த வைரஸானது கருப்பை வாய் (Cervix) மட்டுமல்லாமல் ஆண், பெண் இருபாலரின் வாய் மற்றும் தொண்டையிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.
- எனவே, வாய்ப் புற்றுநோயுள்ள இந்தியர்களின் மரபணுக்களில் ஹுயுமன் பாப்பிலோமா வைரஸுடன் வேறு ஏதாவது புற்றுக்காரணிகளோ அல்லது தொற்றுக் கிருமிகளோ இணைந்துள்ளனவா என்பதைக் கண்டறிவது அவர்களது ஆராய்ச்சியின் நோக்கம்.
- அப்போது, இரண்டு அறிவியல் உண்மைகளை அவர்கள் கண்டறிந்தனர். முதலாவது, இந்தியப் புற்றுநோயாளிகளிடம் 1,058 வகையான தொற்றுக் கிருமிகள் இணைந்தே காணப்பட்டன என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை புற்றுக் காரணிகளாக இல்லை என்பது.
- அடுத்தது, புகையிலையை மெல்லும் பழக்கம் உள்ள வாய்ப் புற்றுநோயாளிகளுக்கு ‘ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ எனும் பாக்டீரியா தொற்று இருப்பது தெரிய வந்தது.
- இதுவரை இந்த பாக்டீரியா மலக்குடல் புற்றுநோய்களை (Colorectal cancers) ஏற்படுத்தும் கிருமியாகத் தான் அறியப்பட்டது.
- இப்போது புதிதாக வாய்ப் புற்றுநோய்க்கும் இது காரணமாகிறது எனும் உண்மை ஆய்வாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
- அதேசமயம், இந்த ஆய்வின் வழியாக வாய்ப் புற்றுநோயாளிகளுக்கு ‘ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ தொடர்பில் சிகிச்சை கொடுத்தால் புற்றுக்கட்டி குணமாகிறது எனும் புதிய வழி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது?
- வாய் நலம் கெடும்போது, அங்கு புற்றுநோய் தோன்றுவதற்குத் தேவையான ‘முன்னழற்சி நுண்சூழலை’ (Pro-inflammatory tumour-promoting micro environment) இந்த பாக்டீரியாக்கள் உருவாக்குகின்றன.
- மேலும், புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பாற்றல் அணுக்களுக்குப் பல வழிகளில் இவை இடர்ப்பாடுகளைத் தருகின்றன.
- முக்கியமாக, புற்றுசெல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றலுள்ள ‘இயற்கைக் கொல்லி செல்க’ளையே (Natural killer cells) இவை அழித்துவிடுகின்றன. இப்படித் தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் இவை வாய்க்குள் புற்றுநோயைப் புகுத்திவிடுகின்றன.
- அடுத்து, இந்த பாக்டீரியாக்களுக்கும் புற்றுநோய்த் தடுப்பாற்றல் அணுக்களுக்கும் இடையில் நடக்கும் போரில் ஐஜிஏ, ஐஜிஜி ஆகிய எதிரணுக்கள் (IgA, IgG antibodies) உருவாகின்றன.
- ஒருவருக்கு ‘ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ தொற்று இருக்கிறதா என்பதை இந்த எதிரணுக்களை அளப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மேலும், இந்த பாக்டீரியாக்களை அழிக்கும் திறனுள்ள நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் நம்மிடம் உள்ளன. எனவே, இந்த பாக்டீரியாக்களுக்குப் பயப்படத் தேவையில்லை என்பது ஓர் ஆறுதல்.
என்ன செய்யலாம்?
- 2020-ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் புற்றுநோய்களில் 27% புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் புற்று வகையாகவே இருக்கிறது.
- ஆண்டுதோறும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வழியில் இறக்கின்றனர். இந்த இறப்புகளைத் தவிர்க்க வேண்டுமானால், புகையிலை மெல்லும் பழக்கம் நாட்பட்டு இருப்பவர்களிடம் வருடந்தோறும், ‘ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ தொற்று இருக்கிறதா என்பதை எலிசா பரிசோதனையில் தெரிந்துகொள்ளும் வழிமுறையை நம் நலவாழ்வுத் துறையினர் சமூக அளவில் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
- அப்படி இருப்பது தெரிந்தால், ஆரம்பத்திலேயே தகுந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைக் கொடுத்து சிகிச்சை செய்ய வேண்டியது முக்கியம்.
நன்றி: தி இந்து (21 – 03 – 2022)