TNPSC Thervupettagam

புற்றுநோய் சவால்..

July 12 , 2024 184 days 166 0
  • கேன்சர் முக்த் ஃபவுண்டேஷன் (கேன்சர் ஒழிப்பு அறக்கட்டளை) என்கிற லாப நோக்கில்லாத தன்னார்வ சேவை நிறுவனம். அதைவிட அதிர்ச்சி, இளைஞர்கள் மத்தியில் புற்றுநோய் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது என்கிற தகவல்.
  • புற்றுநோய்க்கான இரண்டாவது ஆலோசனைக்காக, கேன்சர் முக்த் ஃபவுண்டேஷன் உதவி மையத்தை அணுகும் நோயாளிகளில் 40 வயதுக்குக் குறைந்தவர்களில், ஆண்கள், பெண்களில் ஐந்து பேரில் ஒருவர் 40 வயதுக்குள் என்பதும் அவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள் என்பதும் அந்தத் தன்னார்வ நிறுவனம் அளிக்கும் புள்ளிவிவரம். சமீபத்தில் வெளியாகி இருக்கும் பல ஆய்வுகள் பச்சைக் குத்திக் கொள்வது (டாட்டூ) ரத்தப் புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறது என்று தெரிவிக்கிறது.
  • தங்கள் வாழ்நாளில் 10-இல் ஒரு இந்தியர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார் என்பதும் ஒரு கோடிக்கும் அதிகமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கையாள வேண்டியிருப்பதும் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்.
  • ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பல்வேறு வகையான புற்றுநோயால் உலகளாவிய அளவில் உயிரிழக்கிறார்கள். ஒன்றரை கோடிக்கும் அதிகமான புதிய நோயாளிகள் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் பாதியிலும் அதிகமான நோயாளிகள் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
  • இந்தியாவில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்போரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்துக்கும் அதிகம். சிகிச்சை வளையத்துக்குள் வராமல், உயிரிழப்போர் குறித்த புள்ளிவிவரம் எடுக்கப்படவில்லை.
  • பன்னாட்டு சுகாதாரக் குழுமத்தின் ஆய்வுப்படி, 2025-க்குள் சர்வதேச புற்றுநோய் பாதிப்பு சராசரியை இந்தியா கடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் காணப்படும் புற்றுநோய் பாதிப்புகள் குறித்த ஆய்வை நடத்திய அந்த நிறுவனம் 26% பேர் தலை, கழுத்து; 16% பேர் உணவுக் குழாய், குடல்; 12% பேர் மார்பகம்; 9% பேர் ரத்தம் ஆகிய புற்றுநோய் பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள்.
  • வாய்,நுரையீரல், குடல், வயிறு ஆகியவற்றில் ஆண்களும், மார்பகம், கருப்பை வாய் , கருப்பை ஆகியவற்றில் பெண்களும் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, மாறிவிட்ட வாழ்க்கை முறை, உடல் பருமன், சுகாதாரமற்ற உணவுகள், புகையிலைப் பழக்கம் ஆகியவை இந்தியாவில் அதிகரித்துவரும் புற்றுநோய் பாதிப்புக்குக் காரணங்கள். வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் வயிறு, குடல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
  • சில நோயாளிகளுக்குப் புற்றுநோய் தவிர்க்க முடியாததாக இருந்தாலும், பெரும்பாலான நோயாளிகளில் புற்றுநோய்க்கான காரணங்களைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் முடியும். மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் பாதிப்புகள் ஒழுக்கமோ, திட்டமிடலோ இல்லாத பழக்கவழக்கங்கள், உணவுமுறை, செயல்பாடுகள் ஆகியவற்றால் ஏற்படுகின்றன. உடற்பயிற்சி இல்லாமை, குறைந்த அளவு பழங்கள், காய்கறிகள் உட்கொள்ளுதல், முழுமையாக வேக வைக்காத அரைவேக்காட்டு உணவு, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் பதார்த்தங்கள் உள்ளிட்டவை புற்றுநோய்க்கான ஊக்குவிப்பிகள்.
  • நுரையீரல் புற்றுநோய் , 20% புற்றுநோயாளிகளில் காணப்படுகிறது. 70% நுரையீரல் புற்று நோய்க்கு புகையிலைப் பழக்கம் காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் மிகத் தெளிவாக அறிவுறுத்துகின்றன. புகையிலைப் பழக்கமும், மதுப் பழக்கமும் தவிர்க்கப்பட்டால், 50% புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.
  • இதுவரை ஐம்பது வயதுக்கும் மேற்பட்டோர்தான் அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்கள் என்றால் இப்போது முழுத் திறனுடன் உழைக்கும் வயதினர் பாதிக்கப்படுவது கவலையளிக்கும் செய்தி. புற்றுநோய் பாதிப்பு வயது குறைந்திருப்பது தேசத்தின் சுகாதாரத்தையும், தனிநபர் குடும்ப பட்ஜெட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும்.
  • உழைக்கும் வர்க்கமான நாற்பது வயதுக்குக் குறைந்தவர்கள்தான் ஒரு நாட்டின் மிகப் பெரிய சொத்து. அவர்களுக்கு, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் குழந்தைகளையும், குடும்பத்தையும், வயதான பெற்றோர்களையும் பராமரிக்கும் கடமை இருக்கிறது. அந்த நிலையில், அவர்கள் பாதிக்கப்படுவது அவர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிப்பதாக அமையும்.
  • புகையிலைப் பழக்கமும், மதுப்பழக்கமும், ஏனைய நோய்களைப் போலவே புற்றுநோய்க்கும் காரணமாகின்றன. சோதனையின் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிவதும், உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதும் பெரும்பாலான நோயாளிகளுக்குப் பலனளிக்கிறது. 27% நோயாளிகளில்தான் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்படுகிறது என்றும், 63% நோயாளிகள், நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வுப் பரப்புரை, வாழ்க்கை முறை மாற்ற பாதிப்புகள் குறித்த விளம்பரங்கள், கூடுதலான சோதனைகள், ஆரம்ப நிலை புற்றுநோய் சிகிச்சை ஆகியவை அவசரத் தேவைகள். கொவைட் 19 கொள்ளை நோய்த் தொற்றை இந்தியா எதிர்கொண்டதைப் போல, மௌனக் கொல்லியான புற்றுநோய்க்கு எதிராக நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், உடனடி சிகிச்சையும் அவசியமாகின்றன.

நன்றி: தினமணி (12 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்