TNPSC Thervupettagam

புற்றுநோய் பதிப்பு

February 12 , 2020 1607 days 713 0
  • திடுக்கிட வைக்கிறது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை. 2018-இல் மட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11.06 லட்சம் புதிய நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

புற்றுநோய் பாதிப்பு

  • தங்கள் வாழ்நாளில் 10 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகள் அனைத்துமே நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் நிலையில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்குமானால் அதை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற கேள்வி திகைப்பை ஏற்படுத்துகிறது. 
  • ஆண்டொன்றுக்கு 11.06 லட்சம் புதிய நோயாளிகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதும், அவர்களில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடுவதும் புறந்தள்ளக்கூடிய பிரச்னை அல்ல. பத்து இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் ஏறத்தாழ 10 கோடிக்கும் அதிகமானோர் புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டாக வேண்டும்.
  • அதை எதிர்கொள்ளத் தேவையான கட்டமைப்பு வசதிகள், கதிரியக்கக் கருவிகள், மருந்துகள் எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவர்கள் தேவைப்படுவார்கள். அதற்கான நிதி ஒதுக்கீடு வழங்க இந்திய அரசிடம் நிதியாதாரம் இருக்குமா என்பது சந்தேகம்தான். என்ன செய்யப் போகிறோம்?
    உலகளாவிய அளவில் எடுத்துக்கொண்டால், 2012-இல் ஆண்டுதோறும் 1.04 கோடி பேர் புற்றுநோய்ப் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

உயிரிழப்பு

  • அவர்களில் 82 லட்சம் பேர் ஆண்டுதோறும் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2032-இல் 70% அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை உத்தேசிக்கிறது. 
  • ஆண்டுதோறும் புதிதாக 2.02 கோடி பேர்  புற்றுநோயால் பாதிக்கப்படுவதும் 1.03 கோடி நோயாளிகள் அதனால் உயிரிழப்பதும் 2032-இல் காணப்படும் என்று சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை, இப்போதே நோயைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் உடனடியாகச் செயல்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
  • உலக சுகாதார நிறுவன அறிக்கையால் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள் இந்திய மருத்துவர்கள். ஆண்டுதோறும் 11.06 லட்சம் புதிய நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்கிறார்கள் என்கிற புள்ளிவிவரம் முழுமையானது அல்ல என்பது அவர்களது கருத்து. பெரும்பாலான மாநிலங்களில், புற்றுநோய் பாதித்த பெரும்பாலானோர் முறையான மருத்துவ சிகிச்சை பெறுவதில்லை. மருத்துவர்களின், அதிலும் குறிப்பாக அரசு மருத்துவமனைகளின் சிகிச்சைக்கு உட்படும்போது மட்டுமே நோயாளிகளின் புள்ளிவிவரங்கள் திரட்டப்படுகின்றன. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கையோ, துல்லியமான கணக்கெடுப்போ சாத்தியமில்லை.
  • அதனால் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம்  மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. 

இந்தியாவில்....

  • வாய், நுரையீரல், குடல், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்களுக்கும், மார்பகம், கர்ப்பப் பை பகுதிகளில் பெண்களுக்கும் அதிகளவிலான புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில் காணப்படுவதாக 2018-ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது. வாழ்க்கை முறை, உடல் பருமன், துரித உணவுகள், புகையிலைப் பழக்கம் ஆகியவைதான் இந்தியாவில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புக்குக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
  • அதிக கொழுப்புச் சத்துள்ள மாமிச உணவுகளை உட்கொள்வது அதிகரித்து வருவதும் முறையாக சமைக்கப்படாத துரித உணவுகளும் புற்றுநோய் பாதிப்புக்கான முக்கிய காரணங்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • புகையிலைப் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டிக் கவலை தெரிவிக்கிறது. 
    முறையான ஆரம்ப காலப் பரிசோதனைகள், ஆரம்ப காலச் சிகிச்சை ஆகியவற்றால் பணக்கார நாடுகள் இளமைக்கால மரணத்தை 20% குறைத்திருக்கின்றன.
  • இந்தியாவைப் பொருத்தவரை மிகப் பெரிய பிரச்னையே, அனைவருக்கும் ஆண்டுதோறும் முறையான மருத்துவப் பரிசோதனை நடத்தப்படாமல் இருப்பதும், எந்தவொரு நோய்க்கும் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காமல் இருப்பதும்தான். புற்றுநோயைப் பொருத்தவரை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. 
  • மிகவும் தாமதமாக மட்டுமே பெரும்பாலான நோயாளிகள் தங்களுக்குப் புற்றுநோய் வந்திருப்பதை உணர்கிறார்கள். 
  • இதனால் விலை அதிகமான மருந்துகளும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டும் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
  • இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து தொடங்கி எல்லா நிலையிலும் ஆரம்ப கால பரிசோதனைகள் நடத்தப்படுவதும், மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குப் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்புப் பயிற்சி வழங்குவதும், முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயாளிகளைக் கவனிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதும் அவசியம். 
  • புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதுடன், பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஓரளவுக்குப் பிரச்னையை எதிர்கொள்ள உதவும்.

நன்றி: தினமணி (12-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்