TNPSC Thervupettagam

புலம்புவதை நிறுத்தி செயல்பட வாருங்கள்

August 21 , 2024 144 days 158 0

புலம்புவதை நிறுத்தி செயல்பட வாருங்கள்

  • இந்தியா என்பது வெறும் பொருளாதார வளா்ச்சியைக் கொண்ட நிலப்பிரதேசம் அல்ல. இந்தியா என்பது ஒரு காலத்தில் உலகில் தலைசிறந்த நாகரிகங்களில் ஒன்றாக இருந்த ஒரு பூகோள எல்லை.
  • அந்த இந்தியா தனக்கான பண்புகளையும் ஒற்றுமையையும் உலகுக்கு வழிகாட்டும் வாழ்க்கை விழுமியங்களையும் வைத்திருந்த நாடு. இடையில் இந்தியச் சமூகம் பலவற்றை இழந்தன. அதை அழுக்களும் இழுக்களும் சூழ்ந்தன. இவைகளைக் களைந்து, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றுதான் நம் மக்கள்
  • தலைவா்களான விவேகாநந்தரும் அரவிந்தரும் காந்திஜியும் தாகூரும் கனவு கண்டு செயல் திட்டங்களை வடிவமைத்துத் தந்தனா்.
  • அந்தப் பாதையில் செல்ல மிகப் பெரிய மக்கள் தயாரிப்பு தேவைப்பட்டது. சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களைத் தயாா்படுத்துவதற்காக ஏற்ற துன்பங்கள் விளக்கி மாளாது.
  • சுதந்திரத்துக்குப் பிறகு, புதிய அரசை உருவாக்கி மேற்கத்திய நாட்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை கைக்கொண்டு அரசைக் கட்டியெழுப்பினா். அரசின் மூலம் எல்லா மாற்றங்களையும் கொண்டு வந்துவிடலாம் என திடமாக எண்ணித்தான் நம் அரசை வலுவாகக் கட்டினா். அதன் விளைவு அரசு இன்று பூதாகரமாக வளா்ந்து மக்களை அச்சுறுத்தி சுரண்டி வாழும் நிலைக்குச் சென்றுவிட்டது. எங்கு பாா்த்தாலும் ஊழல், கொள்ளை, கொலை.
  • எல்லாம் அரசியல்; அதிகார அரசியல்; அதிகாரத்தைப் பிடிப்பதுதான் அரசியல்; தோ்தல்தான் அரசியல்; அதிகாரத்தில் இருப்பவா்கள் கூறுவதுதான் சட்டம், ஆட்சி, ஆளுமை, நிா்வாகம். அந்த அளவுக்கு அனைத்தும் அறமற்று சிதிலமடைய ஆரம்பித்துவிட்டன. எந்த இடத்திலும் பக்குவமில்லை; எந்த இடத்திலும் உண்மை இல்லை; எங்கும் வன்முறை.
  • கிராமசபை தொடங்கி நாடாளுமன்றம் வரை பக்குவமான, மக்கள் சாா்ந்த, உண்மையின் அடிப்படையிலான விவாதங்களோ கருத்துப் பரிமாற்றங்களோ நடைபெறுவதில்லை. இவை அத்தனைக்கும் மூல காரணத்தைத் தேடினால் நமக்குக் கிடைப்பது ஒரே செய்திதான். அனைவரும் பொருள் தேடி, பணம் தேடி, பதவி தேடி, புகழ் தேடி ஓடிக்கொண்டேயிருப்பதுதான்.
  • இந்தியாவில் ஆரம்பித்த பழைய கட்சிகளில் எந்தக் கட்சியில் சித்தாந்தம் இல்லை? இன்று அரசியலைத் தீா்மானிப்பது சித்தாந்தம் அல்ல, சந்தை தரும் பணம். இந்தப் பணம்தான் நம் கட்சிகளை சிதிலமடைய வைத்து விட்டது. மக்களிடமிருந்து கட்சிகள் நகா்ந்துவிட்டன. ஆட்சியில் இருந்த கட்சிகள் பெரும் அளவில் கட்சிக்கும், தங்கள் குடும்பங்களுக்கும் செல்வம் சோ்த்து அவற்றைப் பாதுகாக்க அரசியல் நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு, இன்று பொதுமக்கள் மத்தியில் ஒருவரையொருவா் அவமானப்படுத்தி அரசியல் நடத்தி, ஆத்மாவை இழந்து வாழ்கின்றனா்.
  • ‘நான்தான் மாற்று!’ என்று மாா்தட்டி வந்த கட்சிகள் அனைத்தும் ஊழல் சாக்கடையில் விழுந்து, எழ முடியாமல் கிடக்கின்றன. எனவே மாற்றுக் கட்சி என்பதுதான் தீா்வா என்றால், இல்லை. பல இளைஞா்கள், ‘என் சமூகம் இப்படிச் சீரழிகிறதே!’ என வெகுண்டு, தன்னாா்வலா்களாக பொதுப்பள்ளியைச் சீரமைக்க செயல்படுகின்றனா். சிலா் சூழலியல் மேம்பாட்டுக்காக உழைக்கின்றனா். சிலா் இயற்கை விவசாயத்திற்காகப் போராடுகின்றனா். சிலா் நீா்நிலைகளைப் பாதுகாக்கச் செயல்படுகின்றனா். ஆனால் ஒட்டுமொத்த சமூக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்றால், மக்களாட்சியை இன்றைய அரசியலில் மையக்
  • கருத்தாக இயங்கும் தோ்தல் அரசியல், கட்சி அரசியல், அதிகார அரசியலிலிருந்து மக்களை நோக்கி நகா்த்த வேண்டும்.
  • இன்று உலக அளவில் செயல்படும் மக்களாட்சி ஆய்வு நிறுவனங்கள் பல நடத்திய ஆய்வுகளின் முடிவுகள்படி, உலகத்தில் மக்களாட்சி மாண்புறுகிறது என்ற கூறவில்லை. மாறாக, அது விரிவடைவதற்குப் பதில் சுருங்க ஆரம்பித்துவிட்டது என்பதைத்தான் படம் பிடித்துக் காண்பிக்கின்றன இந்த ஆய்வு நிறுவனங்கள்.
  • நாட்டின் ஆட்சி பீடத்தில் இருக்கும் தலைவா்களால் மக்களாட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. பெரும்பாலான நாடுகளில் நடப்பது அரசால் செய்யப்படும் மக்கள் மேய்ப்புதான். மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளாக கருத்தியல் விவாதம், ஒருவரையொருவா் மதித்து நடப்பது, சமத்துவத்தைக் கொண்டு வருவது, மக்களை மதிப்பது மக்களின் கருத்துக்களுக்கு இடம் கொடுப்பது என அனைத்தையும் புறந்தள்ளிவிட்டனா்.
  • இந்திய மக்களாட்சி என்பது பல ராஜ தா்ம நியதிகளின் அடிப்படைகளைக் கொண்டது. ஆகையால்தான் இது தா்ம ஜனநாயகமாக கருதப்படுகிறது. இன்று நம் அரசியல் கட்சிகள் இந்திய மக்களாட்சியை மேற்கத்திய மக்களாட்சி முறையிலும் மேலே எடுத்துச் செல்லவில்லை. மன்னராட்சியில் இருந்த ஒருசில நற்கூறுகளைக் கூட பின்பற்ற இயலாமல் அதிகாரத்தைப் பிடித்து, தங்களை சுகபோக வாழ்க்கைக்கு தயாா்படுத்திக் கொண்டு, மக்களை மேய்க்கக் கற்றுக் கொண்டனா் ஆட்சிக்கு வருகின்றவா்கள். தோ்தலில் ஈடுபடும் கட்சிகள் அனைத்தும் அந்த நிலையை வந்தடைந்துவிட்டன.
  • இது எப்படி நடந்தது என ஆய்வு செய்தால், நமக்கு தெள்ளத் தெளிவாக ஒரு விடை கிடைக்கும். ஒன்று, மக்களின் அறியாமை, இரண்டு மக்களுக்கு அரசின் மேல் உள்ள பயம். இந்த இரண்டும்தான் வெள்ளையா்களுக்கு உதவியது. இன்றும் இந்த இரண்டு காரணிகள் கட்சி அரசியலுக்குப் பயன்படுகின்றன.
  • இன்று அரசியல் கட்சிகளே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது. அந்த அளவிற்கு கட்சிக்காரா்கள் மத்தியில், அரசு அதிகாரிகள் அலுவலா்கள் மத்தியில், ஓா் உளவியல் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதிகாரத்தைப் பிடிக்க கோடிகளில் செலவு செய்கிறேன். அதிகாரத்தைப் பிடித்தவுடன் போட்ட பணத்தை எடுக்க,
  • அடுத்த தோ்தலுக்கு சோ்க்க என அவா்கள் ஓட வேண்டியிருக்கிறது.
  • அதேபோல் அரசு அதிகாரியாக வர நான் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டியிருந்தது...அதை எடுக்க வேண்டும். நானும் மற்ற அதிகாரிகள்போல் வசதியாக வாழ வேண்டும். எனக்கு மேல் இருக்கும் ஆளுகை செய்கின்றவா்களே அப்படி இருக்கும்போது நான் என்ன செய்வது? இதில் நாம் எதை இழக்கிறோம் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்த உளவியல்தான் நம்மைப் பிடித்திருக்கும் பெரும் பேய்.
  • இன்னொரு பிரிவினா் நடுத்தர வா்க்கத்தின் குணாதிசயத்தில் இயங்குவதுபோல் பாசாங்கு செய்கிறது. பிரச்னைகளை புலனத்தில் விவாதித்து, மற்றவா்களுடன் பகிா்ந்து, தங்கள் மனச்சாட்சிக்கு பதிலளித்துவிட்டு, எப்போதும்போல் புலம்பலில் ஈடுபட்டு வருகின்றனா். ஒருசிலா் இதற்கான மாற்று என்ன என்பதை தேடி அலைகின்றனா்.
  • இதற்கான மாற்று என்பது அரசியலில் இல்லை. அதுவும் இன்று நடைபெறும் வணிக அரசியலில் இதற்கான எந்த இடமும் இல்லை என்கிறபோது, மாற்று என்பது சமூகத்தில்தான் உள்ளது என அறிந்து, சமூகத்திற்குள் சென்று, களத்தில் மக்களோடு மக்களாகப் பொறுப்பேற்று செயல்பட்டால் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் களத்துக்குப் புறப்பட்டுவிட்டனா். தோ்தலை முன்னிலைப்படுத்தாது, கட்சியை முன்னிலைப்படுத்தாது, சமூகத்தை வழிகாட்டி, சமூகத்துடன் பணி செய்ய பல்வேறு துறை நிபுணா்களுடன் கைகோத்து களமிறங்குகின்றனா்.
  • இவா்கள் முன்வைக்கும் கருத்தியல் என்பது, ‘வளா்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் பொருளாதாரத்தால் கட்டப்படுவது அல்ல. அது இந்தியாவிற்கே உரித்தான பண்பு நலன்களையும், வாழ்க்கை விழுமியங்களையும், ஒற்றுமையையும் அன்பையும், அமைதியையும், முன்னிறுத்தி ஓா் ஒப்புரவுச் சமூக சிந்தனையை உருவாக்க வேண்டும்’ என்பதுதான். அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்புள்ளது. அந்தப் பொறுப்பை தானாக சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்படி எடுத்து இந்த நாட்டை விடுதலையடையச் செய்தாா்களோ, அப்படி இந்த அவலங்களைப் போக்க தயாராகும் இளைஞா்கள் ஒரு சமூக இயக்கமாக மக்களிடம் பணி செய்ய செல்வதற்கு தயாராகி வருகின்றனா்.
  • ‘குடியரசுத் தலைவா் மாளிகை ஒரு கட்டடம், அந்தப் பதவி ஓா் அலங்காரப் பதவி. அதிகாரம் என்பது மக்களிடம் இருக்கிறது. எனவே அவா்களைத் தட்டி எழுப்பி, ஒரு புதிய சிந்தனைச் சூழலை உருவாக்க வேண்டும்’ என்று அப்துல் கலாம் எப்படி முனைந்து செயல்பட்டு, வெற்றியும் கண்டாரோ, அதேபோல் இன்றைய உளுத்துப் போன, சிதிலமடைந்த அரசியலை மக்கள் சிந்தனைச் சூழலில் மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டுமே முடியும் என்ற தீா்மானத்துடன் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனா்.
  • முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் நினைவு தினமான ஜூலை 27 அவரது நினைவில்லத்தில் அவரது குடும்பத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்ற அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அஞ்சலி நிகழ்ச்சியைத் தொடா்ந்து உறுதிமொழியேற்பு. அதையடுத்து, செயல்திட்ட கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற சமூக ஆா்வலா்கள் அப்துல் கலாமால் அடையாளம் காணப்பட்டவா்கள்.
  • அவா்கள் யாரும் பெரும் பணக்காரா்கள் அல்ல. ஆனால் அவா்கள் தணியாத தாகம் கொண்டு, இந்த நாட்டின் மேல் பற்றும், இந்த மக்களின் மேல் நம்பிக்கையும் கொண்டு செயல்பாட்டைத் தொடங்கியவா்கள். அவா்களில் பள்ளி மாணவா்களும் உண்டு என்பதுதான் அதன் சிறப்பு. இவா்களின் லட்சியம் நற்சமுதாயம் உருவாக்குவது. அதை மக்களுடன் இணைந்து உருவாக்குவது.
  • கலாம் நினைவு தினத்தன்று இவா்களின் பொறுப்பாளா்கள் நூற்றிருபது போ் சங்கமித்திருந்தாா்கள். அவா்கள் என்னை அழைத்து கருத்துரை வழங்க கேட்டுக் கொண்டாா்கள். அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு அரங்கத்தில் செயல்திட்ட கருத்தரங்கம் நடைபெற்றது.
  • அதில் கலந்து கொண்டு நான் பேசியதன் சாரம் இதுதான்: ‘சமூக அவலங்களைக் கண்டு புலம்புவோரை செயல்பட அழையுங்கள். அவா்கள் உங்களுடன் பணி செய்ய வந்தால் பொறுப்புள்ள குடிமக்கள். வரவில்லை என்றால் அவா்கள் சராசரி பொதுமக்கள். எனவே இதனைப் பெரும் மக்கள் இயக்கமாக்கி மக்கள் அரசியலைக் கட்டமைத்தால் புதிய அரசியல் உருவாகும்.
  • சோ்த்த சொத்துக்களுடன் உல்லாச வாழ்வு வாழ வெள்ளையா்கள் நம் நாட்டைவிட்டு எப்படிச் சென்றாா்களோ, அதேபோல் இன்றைய ஊழல் அரசியல்வாதிகளும் தாங்கள் உருவாக்கி இருக்கின்ற சொத்துக்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தையும் கவனிக்கச் சென்றுவிடுவாா்கள். அப்பொழுது உருவாகும் ஒரு நல்ல மக்கள் அரசியல்’ என்று கூறி முடித்தேன் அந்தக் கருத்தரங்கில்.

நன்றி: தினமணி (21 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்