TNPSC Thervupettagam

புலம்பெயர் தொழிலாளர்கள் உரிமைகளைப் பற்றி எப்போது பேசப்போகிறோம்?

May 1 , 2020 1545 days 638 0
  • இந்த ஆண்டின் தொழிலாளர் தினக் கூடுகைகள் கரோனாவால் தடைபட்டு நிற்கின்றன. கூடுதலாய், தொழிலாளர் இயக்கத்தை நோக்கிக் கேள்வியொன்றும் எழுந்துநிற்கிறது.
  • இதுவரையிலும் தொழிலாளர் வர்க்கம் போராடி வென்றெடுத்த உரிமைகள் எல்லாம் அமைப்பு சார்ந்தவர்களுக்கு மட்டும்தானா?
  • நாடு முழுவதும் ஊரடங்கைக் கடைப்பிடித்துவரும் நிலையில், பல்லாயிரக்கணக்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் பல நூறு கிமீ தொலைவு நடந்தே தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக் கிறார்கள்.
  • எந்தவொரு சமூகப் பாதுகாப்பும் இல்லாமல், தினக்கூலியை மட்டுமே நம்பி மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து வந்தவர்கள் இவர்கள். குறைவான கூலிக்கு அதிகப்படியான உழைப்பை நல்கிய இவர்கள், இன்று ‘வெளியாட்கள்’ என்று கருதப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
  • வேலை இல்லாதபட்சத்தில் அவர்களது உணவுக்கும் தங்குமிடத்துக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை கரோனா தெளிவுபடுத்தியிருக்கிறது.
  • விரிந்து பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில், ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஊரடங்கைக் கடைப்பிடித்தது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி.

ஏன் புலம்பெயர்கிறார்கள்?

  • விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கும் நாடு இந்தியா. நடவு, அறுவடைக் காலம் தவிர்த்து, ஆண்டின் பல மாதங்கள் வேலைவாய்ப்பில்லாத நிலை தவிர்க்க இயலாதது.
  • மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கிடையிலுமாகச் சுமார் 13.9 கோடிப் பேர் தொழிற்சாலைப் பணிகளுக்காகவும் விவசாயப் பணிகளுக்காகவும் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்திருக்கிறார்கள். மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர்வு மட்டும் 90 லட்சமாக இருக்கலாம் என்கிறது இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை-2017.
  • இந்த விவரங்கள் எல்லாம், 10 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மதிப்பீடுகள். இதுகுறித்துத் தெளிவான விவரங்கள் எதுவும் அரசிடமே இல்லை என்பதுதான் உண்மை நிலை.
  • புலம்பெயர் தொழிலாளர்களில் 4 கோடிப் பேர் கட்டுமானப் பணிகளிலும், 2 கோடிப் பேர் வீட்டு வேலைகளிலும், 1.1 கோடிப் பேர் ஜவுளித் தொழிற்சாலைகளிலும், 1 கோடிப் பேர் செங்கல் சூளைகளிலும் பணிபுரிகிறார்கள் என்கிறது புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ஆய்வுகளை நடத்திவரும் ஆஜீவிகா அமைப்பு.
  • இவை தவிர போக்குவரத்துத் துறை, சுரங்கப் பணிகள், விவசாய வேலைகளுக்காக இடம்பெயர்பவர்களும் இருக்கிறார்கள்.
  • மழை பற்றாக்குறையும் எதிர்பாராத வெள்ளமும்கூட இந்தப் புலம்பெயர்வு தொடர்ந்து அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.
  • வறுமையோடு சாதிய ஏற்றத்தாழ்வுகளும் முக்கியப் பின்னணியாக இருக்கின்றன. உத்தர பிரதேசம், பிஹாரிலிருந்து நீண்ட காலமாகவே இத்தகைய புலம்பெயர்வு நடந்துகொண்டிருக்கிறது.
  • ஒப்பீட்டளவில் இந்த மாநிலங்களோடு பார்க்கையில் கேரளம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இளம் வயதினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதிகளவில் இளம் வயதினரைக் கொண்டிருக்கும் மாநிலங்கள் என்பதால், உத்தர பிரதேசமும் பிஹாரும் புலம்பெயர்வுக்கு இயல்பாகவே தள்ளப்பட்டுவிட்டன.
  • ஒடிஷா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்தும் இந்தப் புலம்பெயர்வுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சமீப காலங்களில் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்வு மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

முன்னுதாரண கேரளா

  • மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இணக்கமான கொள்கைகளை வகுப்பதில் இந்திய அளவில் கேரளமே முதலிடத்தில் இருக்கிறது என்கிறது மும்பையைச் சேர்ந்த ‘இந்தியா மைக்ரேஷன் நவ்’ என்ற அமைப்பு. கேரளத்துக்கு 100-க்கு 62 புள்ளிகளைக் கொடுத்திருக்கும் அந்த அமைப்பு, இரண்டாம் இடத்தில் இருக்கும் மஹாராஷ்டிரத்துக்குக் கொடுத்திருக்கும் புள்ளிகள் 42.
  • தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் புள்ளிகள் 37 மட்டுமே. ஊரடங்கின்போது கேரளம், புலம்பெயர் தொழிலாளர்களை வெளியேறாமல் தங்கவைப்பதற்கு முயல்கிறது. மஹாராஷ்டிரம் அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பிவைக்கத் தவிக்கிறது.
  • இவ்விஷயத்தில், தற்போதைய சூழல்களின் அடிப்படையிலேயே இரண்டு மாநிலங்களும் வெவ்வேறு முடிவுகளை எடுத்திருக்கின்றன.
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு சமூக நலத் திட்டங்கள், மருத்துவ வசதிகள், அவர்களது குழந்தைகளுக்கான திட்டங்கள் ஆகியவை கேரளத்தில் செயல்படுத்தப்படுகின்றன.
  • ‘விருந்தினர் தொழிலாளர்கள்’ என்று அழைக்கப்படுவதோடு, அவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. வங்கத்திலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் கேரளாவுக்கு வரும் தொழிலாளர்கள் நீண்ட காலமாகத் தங்கியிருப்பதற்கு, அங்கு பின்பற்றப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்தான் காரணம்.
  • கேரளத்திலிருந்து வெளிநாடு செல்பவர்களில் ஏறக்குறைய 89.2% பேர், வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பவர்கள் என்ற அனுபவத்திலிருந்து கேரளம் கற்றுக்கொண்டிருக்கும் பாடங்கள் இவை.
  • பெரும்பாலும் வயதானவர்களையே அதிகமாகக் கொண்டிருக்கும், வேலைபார்க்கும் இளைஞர்களும் வெளிநாட்டில் தங்கியிருக்கும் மாநிலமான கேரளம், தன்னுடைய தொழிலாளர் தேவையை எப்படி வெற்றிகரமாகச் சமாளிக்கிறது என்பது மற்ற மாநிலங்களுக்குமான முன்னுதாரணம்.

நன்றி: தி இந்து (01-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்