TNPSC Thervupettagam

புலம்பெயர்ந்தோர் புண்ணியத்தில்

January 6 , 2023 583 days 305 0
  • வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் மிக அதிகமாக தங்களது சேமிப்பை தாயகத்துக்கு அனுப்பும் நாடுகளில் இந்தியா முதன்மை நாடாக இருக்கிறது. உலக வங்கியின் 2020-22 ஆண்டுக்கான புலம்பெயர்தல் மற்றும் வளர்ச்சி குறித்த அறிக்கை இதைக் குறிப்பிடுகிறது. 
  • 2022-இல், வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து (என்ஆர்ஐ) 10,000 கோடி டாலர் இந்தியாவுக்கு வந்திருக்கும் என்று உலக வங்கி மதிப்பிடுகிறது. 2021-இல் 8,900 கோடி டாலராக இருந்த என்ஆர்ஐ பங்களிப்பு தற்போது 12% அதிகரித்திருக்கிறது. சர்வதேச அளவில் 4.9 % அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவுக்கான அதிகரிப்பு கணிசமானது. கொள்ளை நோய்த்தொற்று, ரஷியா-உக்ரைன் போர் ஆகியவற்றால் சர்வதேசப் பொருளாதாரம் நிலைதடுமாறும் நிலையிலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகத்துக்கு அனுப்பும் சேமிப்பு அதிகரித்திருப்பது ஆச்சரியமானது. 
  • வளைகுடா நாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தொடர்ந்து தங்களது குடும்பங்களுக்கு சேமிப்புகளை அனுப்பி வருகிறார்கள். இப்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதாக உலக வங்கி குறிப்பிடுகிறது. வழக்கமான வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்தும் சேமிப்புகள் வெளிநாடுவாழ் இந்தியர்களால் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 
  • 'ரெமிட்டன்ஸஸ்' என்று அழைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் சேமிப்புகள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் சாதாரண உடலுழைப்பு அல்லது அலுவலகப் பணியாளர்களிடமிருந்துதான் வந்துகொண்டிருந்தன. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத் நாடுகளில் பணிபுரிவோரின் பங்களிப்புதான் அதிகம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்தும் பங்களிப்புகள் வருகின்றன. 
  • சர்வதேச அளவிலான 'ரெமிட்டன்ஸஸ்' எனப்படும் தாயகத்துக்கு அனுப்பப்படும் சேமிப்புகள், 2001-இல் 78,100 கோடி டாலராக இருந்தது 2022-இல் 79,400 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. இது 2021-ஐ விட 4.9% வளர்ச்சி. 79,400 கோடி டாலரில் 62,600 கோடி டாலர், குறைந்த வருவாய் அல்லது நடுத்தர வருவாய் நாடுகளுக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கின்றன. வெளிநாடுவாழ் குடிமக்களின் சேமிப்பு மிக அதிகமாக சென்றடைந்த நாடுகள் இந்தியா (10,000 கோடி டாலர்), மெக்ஸிகோ (6,000), சீனா (5,000), பிலிப்பின்ஸ் (3,800), எகிப்து (3,200).
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்துக்குப் பிறகு வணிகமும், சுற்றுலாத் துறையும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதால் புலம்பெயர்ந்தோர்களின் பங்களிப்பும் அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று கால பாதிப்பிலிருந்து தங்களது குடும்பத்தினர் மீண்டெழுவதற்கு வெளிநாட்டில் பணிபுரிவோர் முனைப்பு காட்டுவதும் காரணமாக இருக்கக்கூடும். 
  • இந்தியாவுக்கு அனுப்பப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பில் அடிப்படைத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னால் திறமை சாராத, உடலுழைப்பும் அலுவலகப் பணியும் மட்டுமே சார்ந்த மரபு சாரா பணிகளில் ஈடுபடும் இந்தியர்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பங்களிப்பும் சமீப காலமாக கணிசமாக உயர்ந்திருக்கிறது. 
  • கடந்த 6 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், கிழக்காசிய நாடுகளின் பங்களிப்பு 26% இலிருந்து 36% ஆக அதிகரித்திருக்கிறது. இதற்கு முன்பு மிக அதிகமான பங்களிப்பு காணப்பட்ட சவூதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் பங்களிப்பு 23% ஆக உயர்ந்திருக்கிறது. ஐந்து வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பங்களிப்பு 54% -லிருந்து 28% -ஆகத் குறைந்திருக்கிறது. 
  • இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் 20% பேர் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அதிக ஊதியம் பெறும் பதவிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப வல்லுநர்களான பலரும் சேவைத் துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அதிக வருவாய் நாடுகளில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களும், சேவைத் துறையினரும் அந்தந்த நாடுகள் வழங்கிய கொள்ளை நோய்த்தொற்று காலத்து மானியங்களால் பயனடைந்தனர். ஊதிய உயர்வும், அதிகரித்த வேலைவாய்ப்பும் பணவீக்கத்தையும் மீறி அவர்களது சேமிப்பை அதிகரித்திருக்கிறது. 
  • அதே நேரத்தில், வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்புக்கான சூழல் மாறியிருக்கிறது. முன்பு போலல்லாமல் தொழிலாளர்களுக்கான ஊதியம் குறைந்திருப்பது மட்டுமல்லாமல், குறைந்த ஊதியத்தில் கென்யா, உகாண்டா, நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வேலைவாய்ப்புத் தேடி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. 
  • 2015 முதல் வளைகுடா நாடுகள் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைத்திருக்கின்றன. 2015-இல் 3,10,000 பேருக்கு நுழைவு அனுமதி வழங்கிய சவூதி அரேபியா, இப்போது 40,000-க்கும் குறைவானவர்களுக்கே அனுமதி வழங்குகிறது. 
  • வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் பங்களிப்பை எளிதாக அகற்றிவிட முடியாது. கத்தாரில் பணிபுரிவோரில் 24% இந்தியர்கள். வளைகுடா நாடுகளில் முன்னெடுக்கப்படும் கட்டமைப்புப் பணிகளில் இந்தியர்கள் முக்கியப் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்பதை அந்த நாடுகளே ஒப்புக்கொள்கின்றன. 
  • கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் புலம் பெயர்ந்தவர்கள் தாயகத்துக்கு அனுப்பும் சேமிப்புகள் தொடருமா என்பதை உலகப் பொருளாதாரம்தான் தீர்மானிக்கும். கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் இல்லாமல், ரஷிய-உக்ரைன் போர் முடிவுக்கு வந்து, பணவீக்கம் கட்டுக்குள் வந்தால் இந்தியாவுக்கு வரும் சேமிப்புகள் அதிகரிக்கும்; இல்லையென்றால் குறையும்.

நன்றி: தினமணி (06 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்