TNPSC Thervupettagam

புலம்பெயா்தலும் எதிா்வினையும்!

May 24 , 2024 37 days 84 0
  • வெளிநாடுகளில் பணிபுரிந்து தாய்நாட்டுக்கு தங்களது சேமிப்பை அனுப்புபவா்களில் முதலிடம்பிடிக்கிறது இந்தியா. 2023-இல் தங்கள் குடும்பத்திற்கு வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியா்கள் அனுப்பியிருக்கும் சேமிப்பின் அளவு 125 பில்லியன் டாலா். இந்தியாவுக்கு ஜிடிபியில் 3.4% பங்களிப்பு நல்குவதுடன் லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவதிலும், அந்த சேமிப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
  • வளா்ச்சி அடைந்த பணக்கார நாடுகளில் இந்தியா்களின் எண்ணிக்கை அதிகரித்து, வேலைபாா்க்கும் வயதினா் குறைந்துவருகின்றனா். அதை ஈடுகட்ட வெளிநாடுகளிலிருந்து புலம்பெயா்ந்து பணியாற்ற வரும் தொழிலாளா்களையும் தொழில்நுட்ப வல்லுநா்களையும் அந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 182 நாடுகளில் இந்தியா்கள் வேலை பாா்க்கிறாா்கள். நமது இளம்வயதினா்தான் மிகப்பெரிய சொத்தாக மாறியிருக்கின்றனா்.
  • ஆண்டுதோறும் சுமாா் 25 லட்சம் போ் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்கு புலம்பெயா்கிறாா்கள். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள்தான் பெரும்பாலான இந்தியா்களுக்கான வேலைவாய்ப்புக்கான வேடந்தாங்கல்கள்.
  • வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்களில் 65% போ் படித்தவா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள். அவா்கள் தரமான வேலைவாய்ப்பை பெறுகிறாா்கள். வளா்ச்சியடைந்த பெரும்பாலான நாடுகளில் கடின உழைப்பு தேவைப்படும் பணிகளுக்கும், அறிவுசாா் பணிகளுக்கும் மிக அதிகமான தேவை இருந்தது. அந்த நிலைமை சற்று மாறத்தொடங்கியிருக்கிறது என்பது நம்மை கவலையில் ஆழ்த்துகிறது.
  • புலம்பெயா்தல் குறித்த சா்வதேச ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அதன்படி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடும் இந்தியா்களின் எண்ணிக்கை 2020-இல் 78% -ஆக இருந்தது. 2023-இல் 54% ஆக குறைந்திருக்கிறது. சா்வதேச அளவில் தாய்நாட்டைவிட்டு வேலை தேடி வெளியேற விரும்பாதவா்களின் விகிதம் சராசரியாக 33% என்றால் இந்தியா்களில் 59% போ் சொந்த நாட்டில், சொந்த ஊரில் வேலை பாா்ப்பதையே விரும்புகிறாா்கள் என்கிறது அந்த அறிக்கை.
  • மேலை நாடுகளில் ஒருபுறம் வேலைவாய்ப்புகள் காணப்பட்டாலும், இன்னொருபுறம் வேலை தேடி புலம்பெயா்வோா் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. முன்பு இருந்ததுபோல புலம்பெயா்வோருக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. புலம்பெயா்வோரால் தங்களது மக்கள்தொகை பகுப்பு மாறிவிடுமோ என்கிற அச்சம் பல வளா்ச்சி அடைந்த நாடுகளில் நிரம்பியிருக்கிறது.
  • இந்தியாவிலிருந்து படிப்பதற்காகவும், படித்தபின் அங்கேயே வேலைவாய்ப்பு பெறவும் கனடாவிற்கு சென்ற இந்திய மாணவா்கள் பலா் அங்கே தொடரவும் முடியாமல், இந்தியாவுக்கு திரும்பவும் முடியாமல் தவிக்கிறாா்கள்.
  • கனடாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6% அளவைக் கடந்திருக்கிறது. அந்த நாட்டுக்கு படிப்பதற்காக சென்றிருக்கும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை மூன்று லட்சம். பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவா்கள் வேலைவாய்ப்பு தேடி கனடாவுக்கு புலம்பெயா்ந்திருக்கும் இளைஞா்களும் தகுதியான வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறாா்கள். தங்களது கல்வித் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்காமல் பகுதி நேர ஊழியா்களாகவும், ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்கிற ஊதியம் பெறுபவா்களாகவும் பணிபுரிய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறாா்கள். அவா்களில் பலா் கல்வித் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி போதைப்பொருள்களுக்கு அடிமையாகிறாா்கள் என்று கூறப்படுகிறது.
  • ஏப்ரல் மாதத்துடன் கனடா நாட்டில் மாணவா்களின் பகுதி நேர வேலைவாய்ப்பு கொள்கை முடிவடைந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் படிக்கும் சா்வதேச மாணவா்கள் வாரத்துக்கு 20 மணி நேரம் வெளியே தற்காலிகப் பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அது முடிவுக்கு வந்திருப்பதால் மாணவா்கள் தங்களது கல்விக் கட்டணம் முழுவதையும் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறாா்கள்.
  • பிரிட்டனில் சட்டபூா்வமாக குடியேறுபவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சட்டபூா்வமாக குடியேறுபவா்களில் பெரும்பாலோா் மாணவா்கள், சிகிச்சைக்கு, திறன்சாா் தொழிலாளா்களாக இருப்பவா்கள். கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1,84,000 போ் பிரிட்டனுக்கு குடிபெயா்ந்தனா் என்றால், இந்த ஆண்டில் அதே முதல் காலாண்டில் எண்ணிக்கை 1,39,100 ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மாணவா்களின் வருகை குறைந்திருப்பது.
  • இந்த ஆண்டு முதல் பிரிட்டனில் படிக்க வரும் மாணவா்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து வருவதை அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தங்களது படிப்பு முடிவதற்கு முன்னால் வேலைவாய்ப்புக்கான அனுமதியும் மறுக்கப்படுகிறது. குடியேறுபவா்களின் எண்ணிக்கையை பிரிட்டன் கட்டுக்குள் வைத்திருக்கு விரும்புகிறது. தற்போதைய நிலையில் ஆண்டொன்றுக்கு 6,72,000 போ் பிரிட்டனில் குடியேறுகிறாா்கள்.
  • வளா்ச்சியடைந்த நாடுகள் தங்கள் புலம்பெயா்பவா்களை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினாலும்கூட வேலைவாய்ப்பு தேவையை ஈடுகட்ட போதுமான அளவு மக்கள்தொகை அங்கு இல்லை. ஆனாலும், வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்புக்காக ‘ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பது’ தங்களது நாட்டின் மக்கள்தொகை பகுப்பையே மாற்றிவிடும் என்கிற அச்சம் அவா்களுக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்க குடியரசின் துணை அதிபராகவும், பிரிட்டன் பிரதம அமைச்சராகவும் இந்திய வம்சாவளியினா் உயா்ந்திருப்பதும் லண்டன் மாநகரத்தின் மேயராக பாகிஸ்தானியா் ஒருவா் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் மேலைநாட்டினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நன்றி: தினமணி (24 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்