TNPSC Thervupettagam

புல்டோசருடன் களமிறங்கிய இஸ்ரேல் படை இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

November 6 , 2023 432 days 246 0
  • சில தர்மசங்கடங்களைத் தவிர்க்கவும் முடியாது; சமாளிக்கவும் முடியாது. அல் அக்ஸா இண்டிஃபாதா என்று சரித்திரம் குறிப்பிடும் பாலஸ்தீனர்களின் இரண்டாவது எழுச்சி, தொடக்கத்தில் அவர்களுக்கு ஏராளமான உயிரிழப்புகளையே தந்தது. ஏனெனில், திருப்பித் தாக்க வேண்டாம் என்கிற முடிவு. அது அர்ஃபாத் எடுத்த முடிவு. அம்முடிவை மாற்றி, ஒவ்வொரு அடிக்கும் பதிலடி தரத் தொடங்கியது சந்தேகமில்லாமல் ஹமாஸ்தான்.
  • குறிப்பாக அதன் தற்கொலைத் தாக்குதல்கள். எனவே, அதைத் தொடக்கம் முதல் வடிவமைத்த இப்ராஹிம் ஹமீத் அன்றைய காலக்கட்டத்தில் ஹமாஸின் மிக முக்கியமான நபராக இருந்தார். மேற்குக் கரையிலேயே வசிக்கும் அவரை எப்படிக் காட்டிக் கொடுப்பது? இதுதான் பாலஸ்தீன அத்தாரிடியின் பிரதமரும் அன்றைய ஹமாஸின் தலைவருமான இஸ்மாயில் ஹனியாவின் பிரச்சினை. எனக்குத் தெரியாது என்று அவர் சொன்ன பதில் மிகப் பெரிய பிரச்சினை ஆனது.
  • உண்மையில் இஸ்மாயில் ஹனியா அப்படியெல்லாம் பேசுகிற இயல்புள்ளவர் அல்ல. சொல்ல முடியாது, போடா ரகம். ஆனால் அமர்ந்திருந்த பிரதமர் நாற்காலி அவர் வாயைக் கட்டியிருந்தது. எனவே இஸ்ரேல் காவல் துறையினரும் மொசாடும் ஒரு முடிவெடுத்தனர். வேறு வழியே இல்லை. மீண்டும் மேற்குக் கரையின் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டு ஒவ்வொரு வீட்டினுள்ளும் புகுந்து புறப்பட்டுத்தான் தீர வேண்டும். இன்னொரு யுத்தம் வருமானால் வந்துவிட்டுப் போகட்டும். இஸ்மாயில் ஹனியா இதனைக் கடுமையாக மறுத்தார்.
  • இப்போது தற்கொலைத் தாக்குதல் ஏதாவது நடந்ததா? இந்த மாதத்தில் ஏதாவது இருந்ததா? கடந்த மாதம் இருந்ததா? ஹமாஸ் தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்டது. ஆட்சியிலும் அமர்ந்துவிட்டோம். இனியும் பழங்கதைபேசாதீர்கள். என்றோ நடந்ததற்கு இன்று பழிவாங்க நினைக்காதீர்கள் என்று சொல்லிப் பார்த்தார். அவரால் முடிந்ததெல்லாம் இன்னொரு யுத்தம் ஆரம்பிக்காமல் அப்போது தற்காத்துக் கொள்ளமுடிந்ததுதான். ஆனால் மொசாட் ஒரு வேலை செய்தது.
  • மேற்குக் கரையிலோ, காஸாவிலோ யாருக்கும் பெயர்கூடத் தெரிந்திராத தனது சில ரகசிய ஏஜெண்டுகளை வெளிநாடுகளில் இருந்து தருவித்து, இரண்டு பிராந்தியங்களிலும் இப்ராஹிமைத் தேடச் சொல்லிப் பணித்தது.
  • மிகத் தீவிரமாக சில மாதங்கள் இந்தப் பணி நடைபெற்றது. இறுதியில் அவர்கள் வெற்றி கண்டார்கள். மே 24-ம் தேதி அதிகாலை ஒன்றரை அல்லது இரண்டு மணி அளவில் இப்ராஹிம் ஹமீதின் வீட்டைக் கண்டுபிடித்துச் சுற்றி வளைத்தார்கள்.
  • ஒரு லாரி காவல் துறை, கவச வாகனங்கள் பன்னிரண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள். பெரும்பாலும் அதிரடிப்படையினர். இரண்டு கமாண்டர்கள். கூடுதலாக ஒரு புல்டோசர். வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்கள் மைக்கில் பேசத் தொடங்கினார்கள். ஐந்து நிமிட அவகாசம் தரப்படும். அதற்குள் இப்ராஹிம் ஹமீத் சரணடைந்துவிட்டால் சேதாரம் ஏதும் இராது. இல்லாவிட்டால் புல்டோசர் தயாராக இருக்கிறது. வீடு இடிக்கப்படும். உள்ளே இருக்கும் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி இறக்க நேரிடும். தப்பித்துச் செல்லப் பார்ப்பது அவர் விருப்பம். ஆனால் எந்தத் திசையிலிருந்தும் குண்டுகள் பாயலாம்.
  • இப்ராஹிம் இருந்தது, ஓர் இரண்டடுக்கு வீடு. தரைத்தளத்தில் சில வணிக வளாகங்கள் இருந்தன. இரவுப் பொழுதென்பதால் கடைகள் மூடியிருந்தன. அறிவிக்கப்பட்ட ஐந்து நிமிடங்கள் முடிந்த பின்னும் இப்ராஹிம் வீட்டைவிட்டு வெளியே வராததால், இஸ்ரேல் படையினர் புல்டோசரை இயக்கச் சொல்லி உத்தரவிட்டனர். புல்டோசர் சத்தம் எழுப்பிய படி வீட்டை நோக்கிச் சென்றது. முதலில் ஒரு பெரும் சத்தம். பிறகு கடை ஷட்டர்கள் கிழிக்கப்படும் சத்தம். அந்நேரத்தில் அப்படியொரு சத்தம் அளித்த அதிர்ச்சியில் பகுதிவாழ் மக்கள் அலறியடித்துக் கொண்டு எழுந்து வெளியே வந்துவிட்டார்கள். ஆனால் இப்ராஹிம் வரவில்லை. எனவே மீண்டும் ஓர் எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டது. விளையாட்டாக எண்ண வேண்டாம். சரணடையாவிட்டால் அதன்பிறகு நடப்பவை மிகவும் மோசமாக இருக்கும். அமைதி.
  • மேலும் சில நிமிடங்களுக்குப் பிறகு சாம்பல் நிற பேண்ட்டும் நீல நிறச் சட்டையும் அணிந்த 41 வயதான ஒரு நபர் மாடியில் இருந்து இறங்கி வந்தார். வீரர்கள் அவரைச் சுற்றி வளைத்துப் பரிசோதித்தார்கள். பிறகு கைது செய்தார்கள். இந்தக் கைது மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் விடாது என்று அன்றைக்கு அத்தனை பேரும் அடித்துச் சொன்னார்கள். இன்னொரு யுத்தம் நிச்சயம் என்று மத்தியக் கிழக்கு மீடியா மொத்தமும் சொன்னது. ஆனால் நடந்தது வேறு.
  • நன்றி: இந்து தமிழ் திசை (06 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்